Followers

Tuesday, 26 April 2016

மூன்று வகை துன்பம்



ஒரு மனிதன் அவன் வாழ்க்கையில் மூன்று விதமான துன்பங்களில் இருந்து மீள வேண்டும். இதைப் பற்றி சாங்கிய யோக சூத்திரம் முதல்வரியில் கூறுகின்றது. அந்த மூவகை துன்பங்கள்:

1) அதிதைவீகம் (நம் சக்திக்கு மீறிய ஒன்றால் ஏற்படுவது)

2) அதிபௌதீகம் (பௌதீக/உலகப் பொருட்களால் ஏற்படுவது)

3) அதியாத்மிகம் (நம்மால் ஏற்படுவது)


|| அதிதைவீகம் என்பது நம்மால் கட்டுப்படுத்தமுடியாத, நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றால் வரும் துன்பமாகும். நம் சக்திக்கு மீறிய ஒன்றுதான் இயற்கை. எனவே இயற்கையால் ஏற்படும் கிலேசங்கள் அதிதைவீக துன்பம் எனப்படுகின்றன. வெள்ளம், புயல், நிலநடுக்கம், கடற்கோள் (சுனாமி), எரிமலை வெடிப்பு போன்றவை இயற்கையிடமிருந்து வரும் துன்பங்கள் ஆகும். இந்த துன்பங்களை தடுத்து நிறுத்தும் சக்தி சாமானிய மனிதர்களுக்குக் கிடையாது. இத்தகைய துன்பங்கள் ஏற்படுவதற்கு முன்னர் கணித்து கூறும் திறமை நம்மிடம் இருந்தாலும் அதை தடுக்கும் சக்தி நமக்கு இல்லை. இத்தகைய கிலேசங்கள் அரிதானது, தடுக்க முடியாதது ஆனால் இவற்றினிருந்து தப்பிக்க வழி உண்டு.

|| அதிபௌதீகம் என்பது உலகத்தில் இருக்கும் ஜடப்பொருட்கள் மற்றும் மற்ற உயிரினங்கள் போன்றவற்றிலிருந்து வரும் துன்பங்கள் ஆகும். உலகத்தின் பொருட்கள் என்பவை: மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், உயிரற்ற பொருட்கள் ஆகியவை ஆகும். உதாரணமாக: ஒருவர் நம்மை வாய்ச்சொல்லால் துன்பப்படுத்துதல், ஆயுதத்தால் தாக்குதல், கையால் தாக்குதல். பாம்பு கடி, தேள்கடி, டிங்கு, மலேரியா, வனவிலங்கு தாக்குதல், விஷசெடி தீண்டல், கட்டிடங்கள் சரிந்து விழுதல், மின்சாரம் தாக்குதல், சாலை விபத்து போன்றவை. இத்தகைய கிலேசங்கள் வழக்கமானது ஆனால் அவற்றை தவிர்க்கும் ஆற்றலும் திறமையும் நமக்கு உள்ளது.

|| அதியாத்மிகம் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் துன்பமாகும். மூன்று வகை துன்பங்களில் இதுவே மிகவும் ஆபத்தானது என சொல்லப்படுகின்றது. இந்த வகையான துன்பத்திற்கு நாம் தான் முழு பொறுப்பு. நம்மை நாமே துன்புறுத்திக் கொள்வதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

க) உடலால் – புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவு உண்ணுதல், ஒழுக்கமற்ற நடத்தையைக் கொண்டிருத்தல் போன்ற செயல்களால் நம் உடலை நாமே துன்புறுத்திக் கொள்கிறோம் 
உ) மனத்தால் – தேவையற்ற எண்ணங்களைக் கொண்டிருத்தல், முறையற்ற விஷயங்களை நினைத்துக் கொண்டிருத்தல், கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், பேராசை போன்ற மனத்திற்கு நோயைத் தரும் குணங்களைக் கொண்டிருத்தல்

தீர்வுகள்

பதஞ்சலி முனிவர் தம் யோக சூத்திரத்தில் துன்பங்களைப் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் தெளிவாக விளக்குகின்றார். துன்பங்கள் என்பவை கிலேஷங்கள் என்று சொல்லப்படுகின்றன. நம்முடைய சுய இயல்பைப் பற்றி நாம் அறியாமல், அறியாமையில் திளைத்திருப்பதால் தான் புத்திமலுங்கி நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்கிறோம் (அதியாத்மிகம்) என பதஞ்சலி கூறுகின்றார். எனினும், எதிர்காலத்தின் (அதியாத்மிக) துன்பங்களைத் தடுக்கும் அளவுக்கு நமக்கு ஆற்றல் உள்ளது என்பதை “ஹேயம் துக்ஹம் அனாகதம்” (2:16)-இல் குறிப்பிடுகின்றார்.

அதியாத்மிக கிலேசங்கள் முழுக்க முழுக்க நம் பொறுப்பில் நிலைபெற்றுள்ளன. நம்மை நாமே உடலாலும் மனத்தாலும் துன்பப்படுத்திக் கொள்ளக் கூடாது. எனவே, உடலையும் மனதையும் துன்பப்படுத்தி கொள்ளும்படியானவற்றை நாம் தவிர்த்து விடுவதால் மூன்று துன்பங்களில் மிக ஆபத்தான ஒரு துன்பத்திலிருந்து நாம் எளிதில் விடுபடலாம்.

முறையான ஆன்மீக பயிற்சிகளின் மூலமாக ஒருவர் இம்மூன்று துன்பங்களிலிருந்து மீளலாம். வழிபாடு, தியானம், தவம், தன்னலமற்ற சேவை போன்ற ஆன்மீகப் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது, இந்த மூன்று நிலையிலுமான துன்பங்கள் நீங்கி எங்கும் அமைதி நிலவிடவே, ஓம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி என மூன்று முறை செப்பிக்கப்படுகின்றது. அமைதியான இடத்தில், தூய்மையான பக்தி கொண்ட உள்ளத்தோடு அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு ஓம் ஷாந்தி என செப்பித்து வந்தால் ஒரு மனிதன் இந்த மூன்று வகையான துன்பங்களில் இருந்தும் நீங்கிடலாம்.

ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி!!

Monday, 25 April 2016

சிவன் கணேசரின் தலையைக் கொய்தாரா?

 

புராணக் கதைகள் என்பவை உண்மையில் நடந்தவையாக இருக்கவேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட வேத தத்துவத்தை சுவாரசியமாகவும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையிலும் விளக்க உருவாக்கப்பட்டவை தான் புராணக் கதைகள். இதனால் தான் புராணங்கள் இந்துதர்மத்தின் இரண்டாம்தர நூல்களாக விளங்குகின்றன.

புராணக் கதை

கணேசர் பார்வதி தேவியின் சக்தியில் தோன்றியவர். ஒருமுறை பார்வதி தேவி தாம் தியானத்தில் ஈடுபட போவதாகவும் உள்ளே யாரையும் அனுமதிக்க வேண்டாம் எனவும் கணேசரிடம் கேட்டுக் கொண்டார். தன் தாயின் சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப கணேசரும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த நேரம் சிவபெருமான் வந்திருந்தார். கணேசர் இதுவரை இறைவனை கண்டதில்லை. அறியாமை, ஆணவம், தலைகணம் போன்ற தீய குணங்களோடு இருந்த கணேசர் சிவபெருமானை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார்.

பல ரிஷிகளும் முனிவர்களும் கணேசருக்கு நல்லறிவு புகட்டினர். நந்திதேவரும் மற்ற தேவர்களும் கூட கணேசருக்கு உண்மையை எடுத்துக் கூறினர். ஆனால் கணேசர் தாயின் மீது கொண்ட அதிக பற்றாலும் தன்னிடம் இருக்கும் சக்தியின் வலிமையாலும் யாருடைய சொல்லையும் மதிக்கவில்லை. தன் தாய் தந்த சக்தியைக் கொண்டு அனைவரையும் தாக்கினார். இறுதியாக இறைவனே வந்து கணேசருக்கு நல்லறிவைப் புகட்ட முயற்சித்தார். ஆனால் கணேசரின் தலைகணம் அவர் இறைவனை உணர முடியாமல் தடுத்து விட்டது. கணேசர் தன் சக்திகளைக் கொண்டு சிவபெருமானையே தாக்கினார். உலகின் நன்மைக்காக அதீத சக்திகளுடன் தோன்றியவன் உலகையே அழிக்கும் அளவுக்கு மாயையில் சிக்கிக் கொண்டுள்ளான் என்பதை இறைவன் அறிந்தார். எனவே இறைவன் கணேசரின் அறியாமையை அழித்து நல்லறிவைப் புகட்ட முடிவெடுத்தார். தன்னுடைய சூலாயுதத்தால் கணேசரின் அறியாமையாகிய தலையைக் கொய்தார். தியானத்திலிருந்து வந்த பார்வதிதேவி தன் சக்தியால் தோன்றிய கணேசருக்கு மீண்டும் முழுமையான உருவம் தருமாறு சிவபெருமானிடம் வேண்டிகொண்டார்.

முற்காலத்தில் கஜாசுரன் எனும் சிவபக்தன் வாழ்ந்து வந்தான். அவன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். எப்போதும் சிவனைப் பூஜித்து சிவபெருமானுடனே இருக்கவேண்டும் என அனுதினமும் ஈசனையே எண்ணி வாழ்ந்து வந்தான். இவனின் சிந்தனை முழுவதும் சிவனே என உருகி தூய்மையான நிலையில் இருந்தது. அவனின் கர்மவினைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக அவன் ஒரு யானையாக பிறப்பெடுத்தான். கஜாசுரனின் வேண்டுதலுக்கு ஏற்ப அவன் தன்னுடைய தூய சிந்தனையைக் கணேசருக்கு அளித்தான். பார்வதி தேவியின் சக்தியால் தோன்றிய கணேசருக்கு சிவபெருமானின் பக்தனான கஜாசுரனின் தலை (தூய சிந்தனை) பொருத்தப்பட்டது. இதனால் கணேசரும் முழுமையான உருவத்தை பெற்றார். கஜாசுரனும் ஈசனுடன் இருக்கும் பாக்கியத்தை அடைந்தான்.

இது தான் புராணத்தில் வரும் கதை. ஓர் ஆழ்ந்த தத்துவத்தை விளக்க தான் இந்த கதை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கதைகளின் மூலமாக சிறுவர்களுக்கும் தர்மத்தை எளிதாகப் புரிய வைத்துவிட தான் இவை எழுதப்பட்டுள்ளன. இப்போது இந்த கதையின் ஆழ்ந்த தத்துவம் என்ன என்பதை ஆராய்வோம்.

புராணத் தத்துவம்

சக்தி என்பவள் அண்டசராசரத்திற்கும் தாயானவள். இயற்கையின் வடிவானவள் சக்தி. அவளின் எல்லையற்ற சக்தியிலிருந்து தோன்றியவர் கணேசர். உலகத்தின் நன்மைக்காகத் தான் கணேசர் தோன்றினார். ஆனால் தன்னிடம் இருக்கும் அதீத சக்தியும் தாய் மீது கொண்ட அளவற்ற பாசமும் கணேசரை மயக்கிவிட்டது. கணேசர் தன் ஆணவத்துக்கும் அறியாமைக்கும் கட்டுப்பட்டு செயல்பட்டார். கணேசரிடம் தாய் தந்த சக்தி இருந்தாலும் அவரிடம் சிவசிந்தனை இல்லாமல் இருந்தது. இறைவனைப் பற்றி அறிந்திராத பாலகனாக அவர் பல சேட்டைகளும் ஆணவ செயல்களும் புரிந்தார். இதனால் கணேசர் தன்னுடைய தோன்றலின் நோக்கத்தையும் மறந்தார். ஆனால் இறைவன் சரியான நேரத்தில் வந்து திருவிளையாடல் காட்டி கணேசரை ஆட்கொண்டார். கணேசரின் ஆணவத்தை நீக்கிவிட்டு, சிவசிந்தனையில் சாத்வீக இயல்போடு இருந்த கஜாசுரனின் தலையைப் பொருத்தினார். இதனால் கணேசர் கஜமுகனாகினார். தாய் தந்த சக்தியும் தந்தையான ஈசன் தந்த ஞானமும் ஒருசேர உலகின் நன்மைக்காக கணேசர் அருள்பாலிக்கிறார்.

கணேசர் சிவ பக்தர் ஆவார். காரிய தடைகள் நீங்க கணேசரை வேண்டிக் கொள்வார்கள். செய்யும் செயல் தூய்மையானதாகவும் சுயநலமற்றதாகவும் இருந்தால் கண்டிப்பாக கணேசர் அச்செயல்களின் தடைகளை நீக்கி அருள்பாலிப்பார். மேலும் ஒருவரின் மனத்தில் இருக்கும் அகங்காரம், ஆணவம், தலைகணம், தான் என்ற தற்பெருமை போன்ற குணங்களை ஈசனருளால் கணேசர் நீக்கிடுவார். எனவே தான் கணேசர் வழிபாடு உலகமெங்கும் புகழ்ப்பெற்று விளங்குகின்றது.

நாம் எப்போதும் சான்றோர்கள் காட்டிய நல்வழியில் பயணித்து அவர்கள் சொன்ன நல்ல அறிவுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நம்மிடம் செல்வம் உள்ளது, செல்வாக்கு உள்ளது என்பதற்காக சான்றோர்களின் பேச்சை மதிக்காமல் இருக்க கூடாது. நாம் சான்றோர்களின் வழிகாட்டல் இல்லாமல் செயல்படுவதால் ஒரு தவறான பாதைக்கே செல்கிறோம். இதனால் நாம் நம்முடைய பிறப்பின் நோக்கத்தையே மறக்கிறோம். தூயசிந்தனையுடைய ஒருவரின் வழிகாட்டல் நமக்கு தேவைபடுகின்றது. அத்தகையவர் நல்லறிவைப் புகட்டும் போது நாம் பணிந்து கேட்க வேண்டும். யார் சொல்லையும் கேட்க மாட்டேன் நான் செய்வது தான் சரி என செயல்படுவது தவறாகும். இது நமக்கு அழிவையே உண்டாக்கும். எந்தவொரு சமயத்திலும் நம்முள் அறியாமை குடியிருக்க நாம் இடம்தர கூடாது. எனவே நம்மிடம் இருக்கும் தேவையற்ற குணங்களை எல்லாம் நீக்கி நல்லறிவை விதைத்திட கணேசரிடம் வேண்டிகொள்வோம். ஓம் கம் கணபதயே நமஹ. ஓம் நம சிவாய

உலகிலே மிக நீளமான காவியம் மகாபாரதம்


பாரத தேசத்தின் மகா காவியமான ‘மகாபாரதம்’ தான் உலகிலேயே மிக நீளமான மற்றும் அதிக சுலோகங்களைக் கொண்ட காவியம் ஆகும். பண்டைய கிரேக்க காவியங்களான ஒடிஸி மற்றும் இலியத் ஆகிய இரண்டு காவியங்களையும் விட மகாபாரதம் பல மடங்கு பெரியதாகும். அதேபோல இராமாயணத்தை விட நான்கு மடங்கு பெரியது மகாபாரதம்.

ஒடிஸி : 12,110 சுலோகங்கள்
இலியத் : 15,693 சுலோகங்கள்
இராமாயணம் : 24,000 சுலோகங்கள்மகாபாரதம் : 100,000 சுலோகங்கள்

சில குறிப்புகள்:

1) மகாபாரதத்தின் சுலோகங்கள் எல்லாம் இரட்டையாக அமைந்துள்ளதால், உண்மையில் மகாபாரதம் 200,000 சுலோகங்களைக் கொண்டுள்ளதாகும்.

2) இருபெரும் இதிகாசங்களில் ஒன்றுதான் மகாபாரதம். இதிகாசம் என்றால் வரலாற்று நிகழ்வு எனப் பொருள்படும்.

3) இது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. மகாபாரத நிகழ்வுகள் சுமார் 5000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாகும். நிகழ்வுகளை வியாசர் கணேசருக்குச் சொல்ல கணேசர் இதனை இயற்றி அருளினார்.

4) கணேசர் அருளிய மகாபாரதம் ஆரம்பகாலத்தில் 8,800 சுலோகங்களை தான் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதிபர்வத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், சில கூடுதலான நிகழ்வுகள் சேர்க்கப்பட்டு 24,000 சுலோகங்கள் ஆனது. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இது 100,000 சுலோகங்களுடம் நிறைவு பெற்றது.

5) மகாபாரதம் 18 பர்வங்களைக் கொண்டது.
ஆதி பர்வம், சபா பர்வம், வன பர்வம், விராத பர்வம், உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், ஷால்ய பர்வம், சௌப்திக பர்வம், ஸ்திரி பர்வம், சாந்தி பர்வம், அனுஷாசன பர்வம், அஷ்வமேதிக பர்வம், ஆஷ்ரமவாசிக பர்வம், மௌசால பர்வம், மகாபிரஸ்தானிக பர்வம், சுவர்கரோகன பர்வம்.

உலகத்திலே மிக உயரமான முருகபெருமான்



உலகிலேயே மிக உயரமான முருகப்பெருமான் திருவுருவம் மலேசியாவின் பத்துமலையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 42.7 மீட்டர் (140அடி).

பத்துமலையைப் பற்றிய சில தகவல்கள்

*பத்துமலை திருக்கோயில் சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் அமைந்துள்ளது.
*இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.
*பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும்.
*கே.தம்புசாமி எனும் செல்வந்தரால் 1891ஆம் ஆண்டு முருகப்பெருமானின் திருவருளால் இந்தப் பத்துமலைக் கோயில் எழுப்பப்பட்டது.
*அதற்கு முன்னர் 1890-இல் மதிப்பிற்குரிய கே.தம்புசாமி அவர்கள் கோலாலம்பூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலை எழுப்பினார்.
*1892-இல் இருந்து பத்துமலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டு வருகிறது.
*1920- இல் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன. குகைக் கோயில் 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
*பத்துமலையின் அடிவாரத்தில் கலைக்கூட குகை, அருங்காட்சியகக் குகையென இரு குகைக்கோயில்கள் உள்ளன. இந்தக் குகை மையங்கள் 2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன.
*பத்துமலையின் ஆக இடது புறத்தில் இராமாயண குகை உள்ளது. இந்த இராமாயண குகைக்குச் செல்லும் வழியில் 50 அடி உயரம் உள்ள ஓர் அனுமார் திருவுருவத்தைக் காண முடியும்.
*பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலின் கலை ஓவியத்தை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய முயற்சி நடந்து வருகிறது. முருகப்பெருமான் திருவுருவம் ஏற்கனவே மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
*தமிழ்நாடு, திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர்.தியாகராஜன் தலைமையில் முருகன் திருவுருவம் உருவாக்கம் கண்டது. அவருக்கு உதவியாக 14 சிற்பிகள் பணி புரிந்தனர்.
*தைப்பூசத் திருநாள் பத்துமலையில் ஏராளமான பக்தர்கள் திரள்வர். 2012ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*குகைக் கோயிலுக்குக் கீழே இருண்ட குகை உள்ளது. மலேசியாவில் வேறு எங்கும் இல்லாத சில அரிதான விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.
*மலேசிய வாழ் இந்துக்களின் அடையாளச் சின்னமாக பத்துமலைத் திருத்தலம் திகழ்கின்றது.

மனிதனின் ஆறு எதிரிகள்

அரிஷத்வர்கம் என சொல்லப்படும் மனிதனின் ஆறு எதிரிகளும், மனிதனின் மனதினுள்ளேயே மறைந்திருந்து அவனை மெல்ல மெல்ல அழிக்கின்றன. அரி என்றால் எதிரி எனவும், ஷத் என்றால் ஆறு எனவும், வர்கம் என்றால் குழு எனவும் பொருள்படும்.

ஒவ்வொன்றும் மனிதனின் வாழ்க்கையில் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும் இயல்புடைய குணங்களாகும்.

பக்தி நிலையைப் பொறுத்தவரை இந்த ஆறு குணங்களும் மனிதன் இறைவனின் திருவருளைப் பெற விடாமல் தடுக்கும் ‘எதிரிகள்’ என சொல்லப்படுகின்றது.


1) காமம் – தீவிர ஆசை
2) குரோதம் – கோபம்
3) லோபம் - பேராசை
4) மோகம் - மருட்சி
5) அகங்காரம் – இறுமாப்பு
6) மதஸர்யம் – பொறாமை

ஆறு எதிரிகளை அழித்திடுக

௧) காமம் என்றால் “அவா” அல்லது “ஆசை” எனப் பொருள்படும். தர்மநியதிக்கு உட்பட்ட ஆசை ஆக்கத்தை தரும். அதுவே தர்மநியதிக்கு எதிரான ஆசை அழிவையே தரும். பணம், பொருள், புகழ், பதவி போன்றவற்றின் மீது தீவிர ஆசை கொள்வது குற்றமாகும். எனவே, ஆசையை அடக்கிடுக.

௨) குரோதம் என்றால் ”கோபம்” அல்லது ”சினம்” எனப் பொருள்படும். ஆசைபட்ட ஒரு பொருளை அடைய முடியாமல் போய்விட்டால், அந்த ஆசை கோபமாக மாறும். கோப உணர்ச்சி மனத்தின் செயல்பாடுகளில் சஞ்சலங்களை ஏற்படுத்தி, வாக்கையும் செயலையும் பாதிக்கும். கோபத்தால் எழும் வாக்கும் செயலும் எப்போதும் சரியானதாக இருப்பதில்லை. எனவே, சினத்தைப் போக்கிடுக.

௩) லோபம் என்றால் “பேராசை” அல்லது “வெஃகுதல்” எனப் பொருள்படும். தேவைக்கு அதிகமான ஒன்றை அடைவதற்காக ஆசை கொள்வது பேராசை எனப்படுகின்றது. அதேபோல மற்றவருக்கு சொந்தமான ஒன்றை அடைய முயல்வது வெஃகுதல் எனப்படுகின்றது. வேண்டியது கிடைத்தால் அதைக் கொண்டு திருப்தி கொள்ள வேண்டும். அதைப் போலவே மேலும் மேலும் வேண்டும் என்று பேராசை கொள்ளக் கூடாது. ஆகவே, பேராசையைத் தவிர்த்து விடுக.

௪) மோகம் என்றால் “மருட்சி”, “பற்றுதல்” அல்லது “மயக்கம்” எனப் பொருள்படும். ஒரு பொருளின் மீது கொண்ட அளவற்ற பற்றுதலினால் அதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. இதுவே ஒருவனை பல தீயசெயல்களிலும் ஈடுபடத் தூண்டுகின்றது. எனவே, மருட்சியை நீக்கிடுக.

௫) அகங்காரம் என்றால் “இறுமாப்பு” அல்லது “செருக்கு” எனப் பொருள்படும். பதவி, கல்வி, அறிவு, செல்வம் போன்றவற்றை ஒருவன் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக கொண்டிருக்கும் போது அவனிடம் செருக்கு ஏற்படுகின்றது. அகங்காரம் என்ற எதிரி ஒருவனின் மனத்தில் அவன் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையைத் தூண்டுகின்றது. இதனால் அவன் சக மனிதர்களிடம் மரியாதை, கருணை போன்ற அடிப்படை நற்குணங்கள் இன்றி செயல்படுகின்றான். ஆகவே, செருக்கை ஒழித்திடுக.

௬) மத்ஸர்யம் என்றால் “பொறாமை” எனப் பொருள்படும். தன்னை விட வேறு எவனும் கல்வி, பதவி, அறிவு, செல்வம் போன்றவற்றில் உயர்ந்து விட கூடாது என்ற ஓர் எண்ணம் தான் பொறாமை ஆகின்றது. மற்றவர்களின் அறிவாற்றல், திறமைகள், செல்வம் போன்றவற்றைக் கண்டு பொறாமை கொள்பவர்கள் அவற்றை எப்படியாவது அழித்துவிட எண்ணம் கொள்வர். இத்தகைய ஓர் எண்ணம் உண்மையில் தன்னைத் தானே அழித்துக் கொள்ள விதைக்கப்பட்ட விதை என்பதை அவர்கள் அறிகிலர். எனவே, பொறாமையை அகற்றிடுக.

முடிவுரை

இறைவனின் முழுமையான திருவருளை அடையும் எண்ணம் உள்ளவர்கள், முதலில் இந்த ஆறு தீய குணங்களையும் “கழுவி” விடவேண்டும். அன்றாடம் இறைவனின் நாமத்தை ஜபம் செய்தலும், மந்திர உச்சாடனம் செய்தலும், தேவாரம் மற்றும் பிரபந்தம் பாடுதலும், பகவத் கீதையைக் கற்றலும் ஒருவனின் மனதிலிருக்கும் ஆறு எதிரிகளையும் அழித்து விடுகின்றன.

ஆறு வகை வணக்கங்கள்

பாரதிய கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகள் ‘பிரணாமங்கள்’ அல்லது ‘வணக்கங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவை:




1) அஷ்டாங்கணம்- உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
2) ஷாஷ்டாங்கம்- உடலின் ஆறு அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்) 
3) பஞ்சாங்கம்- உடலின் ஐந்து அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், மூட்டுகை, கைகள், நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
4) நமஸ்காரம்- இரு கைகளையும் கூப்பி தலைக்கு மேல், நெற்றிக்கு நேர் அல்லது நெஞ்சகத்தின் அருகில் வைத்து வணங்குதல். (எல்லோர்க்கும்)
5) அபிநந்தனம்- இரு கைகளையும் கூப்பி நெஞ்சகத்தின் அருகில் வைத்துக் கொண்டு, தலையைச் சாய்த்து வணங்குதல். (பணிவு)
6) சரணஸ்பர்ஷம்- கால்களைத் தொட்டு வணங்குதல். (தெய்வம், தாய், தந்தை, குரு, சான்றோர்)

வணக்கங்கள் யாருக்கு உரித்தானவை?

ஆறு வகை வணக்கங்களில் முதலான மூன்று வகை தெய்வங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவை கோயில்களிலும் வழிபாட்டு அறைகளிலும் தெய்வங்களை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய வணக்க முறைகள். அஷ்டாங்கனம் எனப்படும் எட்டு அங்க வணக்கமுறையை ஆண்களும், பஞ்சாங்கம் எனப்படும் ஐந்து அங்க வணக்கமுறையைப் பெண்களும் கடைப்பிடிப்பார்கள். ஷாஷ்டாங்கம் எனப்படும் ஆறு அங்க வணக்கமுறையை யோகாசன சூரிய நமஸ்காரப் பயிற்சியின் போது கடைப்பிடிப்பார்கள்.

அடுத்தபடியான நான்காவது மற்றும் ஐந்தாவது வணக்கமான ‘நமஸ்காரமும்’ ’அபிநந்தனமும்’ தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோருக்கு உரித்தானவை. மனிதர்களைத் தவிர்த்து மற்ற ஜீவராசிகளுக்கும் ‘நமஸ்காரம்’ மூலமாக மரியாதை செலுத்தலாம். இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து கூப்பிக் கொள்ளும் போது, ”நீயும் நானும் சமமானவன்” என்ற தத்துவம் தெரியப்படுத்தபடுகின்றது. மேலும், கைகளைக் கூப்பி தலையை சாய்த்து மரியாதை செலுத்தும் போது ஒருவரின் பணிவுடைமை காட்டப்படுகின்றது.

இறுதியாக, கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வங்கள், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர்கள் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானவை. தெய்வங்களின் கால்களைத் தொட்டு வணங்குதல், இறைவனிடம் சரண்புகுதல் தத்துவத்தைக் குறிக்கின்றது. மற்றவர்களின் கால்களைத் தொட்டு வணங்குதலும் வெவ்வேறு தத்துவமுடையது. ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம்,

போகவேண்டிய ஊருக்கு வழி தெரியாவிட்டால், வழி தெரிந்த ஒருவரின் கால் தடங்களைப் பின்பற்றி சென்றாலே போதும்; நாமும் ஊரைச் சென்றடையலாம். அதுபோல வாழ்க்கையில் சிறந்தவர்களின் அறிவுரைகளையும், கருத்துகளையும், போதனைகளையும் நாம் பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இதுவே கால்களைத் தொட்டு வணங்கும் முறை உணர்த்தும் தத்துவமாகும்.

கண்டவர்கள் காலில் எல்லாம் விழுவது சரியல்ல. எல்லா வகையான மனிதர்களுக்கும் “நமஸ்காரம்” முறையில் மரியாதை தரவேண்டும். ஆனால் கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வம், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானது.

Monday, 11 April 2016

ஒரு நாட்டு தலைவனின் தர்மம் என்ன?



இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. ஆனால் அப்பாவி மக்களிடம் இருக்கும் அறியாமை மட்டும் இன்னும் நீங்கவில்லை. மேடைகள் அமைத்து வாயினிக்க பேசுபவரெல்லாம் முதல்வராகி விடலாம் என நம்பி அவர்களுக்கு வாக்களித்து இறுதியில் ஏமாற்றம் அடைகின்றனர். யார் வேண்டுமானாலும் தலைவராகலாம் என்ற ஒரு தவறான கொள்கையை நாம் கைவிட வேண்டும். தகுதியுடைய ஒருவர் மட்டும் தான் தலைவராக வேண்டும். ஒரு நாட்டின் தலைவன் என்னென்ன தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என மகாபாரதம், பகவத் கீதை, திருக்குறள் உட்பட இதர இந்துதர்ம நூல்களில் கூறப்படுகின்றது.


சத்திரியன்


சத்திரியன் (க்‌ஷத்ரியன்) என்றால்
வீரமும் உறுதியும் உடையவன் எனப் பொருள்படும். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டும் என தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். எந்த பிறப்பை சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் ஒரு சத்திரியனுக்கு உடைய பண்புகளையும் செயலாற்றும் வினைத்திட்பமும் கொண்டிருக்க வேண்டும். அரசு தர்மத்தை உணர்ந்தவனாகவும் மனதில் இறைபக்தி உடையவனாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்தின் பிரதமராக இருந்த விதுரன்.


மகாபாரதம் (சாந்தி பர்வம்)


1) மனதில் இறைபக்தியும் இறைத்தொண்டில் ஈடுபாடும் கொண்டவனாக இருக்க வேண்டும்
2) மக்களுக்கு கொடுப்பவனாக இருக்க வேண்டும், மக்களிடமிருந்து பறிப்பவனாக இருக்க கூடாது
3) தேசபக்தி மிக்கவனாகவும் தியாக மனப்பான்மை கொண்டவனாகவும் இருக்க வேண்டும்
4) தன் நாட்டு மக்களுக்காக காலம், குடும்பம், வயது, ஆசை அனைத்தையும் அர்ப்பணிப்பவனாக இருக்க வேண்டும்
5) தர்மநியதிகளையும் அரசியல் பாடங்களையும் கற்று அறிந்தவனாக இருக்க வேண்டும்
6) எந்தவொரு சமயத்திலும் மனதில் பயம் கொள்ளாதவனாக நாட்டு மக்களைக் காக்க துணிந்தவனாக இருக்க வேண்டும்
7) நாட்டைக் கொள்ளையடிப்பவர்களையும் நாட்டிற்கு கேடு விளைவிப்பவர்களையும் அழிக்க தயக்கம் கொள்ள கூடாது
8) நாட்டுக்கு ஆபத்து நேரும்போது முன்னிலையில் நின்று மக்களுக்கு உதவ வேண்டும்

இந்த எட்டு பண்புகளையும் உடைய ஒருவனே ஒரு நாட்டிற்கு தலைவனாக தகுதி உடையவன் என மகாபாரதம் கூறுகின்றது. அரசியல் பாடங்கள் என்பது இன்று ”Science of Politics” எனப்படுகின்றது. முன்பு அர்த்தசாஸ்திரம் எனும் நூல் ஒருவனுக்கு அரசியல் பாடங்களைப் போதிக்க பயன்பட்டது.



பகவத் கீதை (18:43)

1) வீரம்/துணிவு
2) சுறுசுறுப்பு
3) உறுதியுடைமை
4) தாராளகுணம்
5) தலைமைத்துவம்
6) நாட்டை வளமாக்கும் திறமை
7) அஞ்சாமை/ பின் வாங்காமை


திருக்குறள் (382-383)

1) அஞ்சாமை
2) தாராளகுணம்
3) அறிவுடைமை
4) ஊக்கமுடைமை
5) சுறுசுறுப்புடைமை
6) கல்வியுடைமை
7) துணிவுடைமை


மேலே கூறப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட ஒருவரை தலைவனாக தேர்ந்தெடுக்க வேண்டியது நம் கடமை. அத்தகைய ஒருவரால் தான் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், கல்வி, ஒழுக்கம் ஆகியவை மேன்மை பெறும்.

Sunday, 10 April 2016

ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம் என்ன?

ஊதுபத்தி ஏற்றுவது ஈஸ்வரனை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறியிருக்க நாம் கேட்டிருப்போம். அதனுள் மறைந்திருக்கும் உண்மையான பொருளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

சகோதரி வேதிகா (ஜெர்மனி இந்து)

ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தவுடன், அதனிலிருந்து புறப்படும் தெய்வீக மணம் சுற்றுச்சூழலை சூழ்ந்துவிடும். அது புகைந்து சாம்பலானாலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது. இது ஒரு தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு. ஓர் உண்மையான இறைத் தொண்டன், தன்னுடைய சுயநல குணங்களை எல்லாம் விட்டொழிக்கவேண்டும். பிறருக்காக நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையும் மணம்வீச வழி செய்வதே தெய்வீக செயலாகும்.

ஊதுபத்தி சாம்பலாகி விட்டாலும், அதன் மணம் மட்டும் காற்றில் கலந்துவிடுகின்றது. அதன் மணத்தை முகர்ந்தவர், அதை தம் நினைவிலே வைத்திருப்பர். அதுபோலத்தான், மற்றவர்களுக்காக நன்மை செய்துவிட்டு வாழ்ந்து மறைந்தவர்களின் பேரும்புகழும் என்றுமே மக்களிடையே நிலைத்திருக்கும்.

நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல விஷயங்களைக் கூறுவதும், நல்ல விஷயங்களை அவர்களுக்கு செய்தலும், அவர்கள் எப்போதும் நல்வாழ்வு பெறவேண்டும் என மனதார நினைப்பதும் மிகப் பெரிய உன்னதமான செயலாகும். இதுபோன்ற குணத்தை தான் ஊதுபத்தி குறிக்கின்றது. இதுபோன்ற குணத்தை உடையவர்கள் தான் ஈஸ்வரனுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள். இதை தான் நம் பெரியவர்கள் அவ்வாறு கூறியுள்ளனர்.

”அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்”
(குறள் 96)


--- மற்றவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல விஷயங்களைச் சொல்வதால் ஒருவருடைய தீவினைகள் தேய்ந்து, நல்வினைகள் பெருகும்.

வேதாந்தம்









Saturday, 9 April 2016

அன்னபூரணியின் அன்ன நியதி



அன்னபூரணி தேவி – பார்வதியின் முக்கிய அம்சம்

அன்னபூரணி தேவி, பார்வதி சக்தியின் ஓர் அம்சமானவள். அன்னம் என்றால் உணவு எனவும் பூரணம் என்றால் முழுமை, நிறைவு எனவும் பொருள்படும். ஈசனின் ஒருபாதியான பார்வதி, அன்னபூரணியாக இருந்து உலக உயிர்களுக்கு நிறைவான உணவை தந்தருள்கிறார்.

அன்னபுரணி எல்லா உயிர்களுக்கும் போதுமான உணவை அளிக்கிறாள். அவள் எப்போதும் தன் குழந்தைகளிடம் வேறுபாடு காட்டுவதில்லை. எல்லா குழந்தைகளுக்கும் தேவையான உணவுகளை அவள் தர தவறியதில்லை. ஆனால் அவளின் குழந்தைகளில் மூத்தவர்களான மனிதர்கள் மட்டும் மற்ற குழந்தைகளின் உணவுகளைத் தட்டிப் பறித்து விடுகின்றனர். இதனால் தான் இன்று உலகில் ஏழை மனிதர்களும் மற்ற உயிர்வாழிகளும் உணவின்றி வாடுகின்றனர்.

உலகில் உணவுக்குப் பஞ்சமில்லை; ஆனால் மனிதர்களிடம் “கொடுக்கும் மனப்பான்மை” பஞ்சமாகி விட்டதே இந்த கலியுகத்தின் கசப்பான உண்மை. உணவின்றி உயிர்கள் வாழ இயலாது. உணவு என்பது உலக உயிர்களுக்கு அடிப்படைத் தேவையாகும். ஆகையால் இந்துதர்மத்தைப் பொறுத்தவரை உணவு மதிக்கத்தக்கது. உணவை வீணடித்தல் தீவினையாக கருதப்படுகின்றது. அதேவேளை உணவை பகிர்ந்து உண்ணுதல் பெரிதளவும் போற்றப்படுகின்றது. தர்மசாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்தால் உணவை பகிர்ந்து உண்ணுவது எவ்வளவு மேலாகப் போற்றப்படுகிறது என்பதை நாம் காணலாம்.

“உணவை அவமதிக்க கூடாது. உணவை வீணடிக்க கூடாது. மற்றவர்களுடன் உணவைப் பகிர்ந்து உண்ண வேண்டும். உணவு தேவைபடுபவருக்கு அது மறுக்கப்படக் கூடாது. இதுவே அன்ன நியதி” (யஜுர்வேதம், தைத்திரீய உபநிடதம் 3-7)

“பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள் 322)

 

தானத்தில் சிறந்தது அன்ன தானம்

அன்னபூரணி தேவி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கிறாள். அட்சய திருதியை திருநாளை அன்னபூரணியின் அவதார நன்னாளாக கடைப்பிடிக்கிறோம். இந்நன்னாளில் தேவைபடுவோருக்கு உணவு வழங்குவது மிகவும் உயர்ந்த செயலாகும். தங்கத்தையும் பணத்தாளையும் கொண்டு சென்று கோவிலில் கொட்டுவதால் அன்னபூரணி மனம் குளிரமாட்டாள். அதே பணத்தைக் கொண்டு தேவைபடுவோருக்கு ஒரு வேளை வயிறு நிறைய உணவு கொடுத்தாலும் அவள் மனம் மகிழ்ந்து அருள்புரிவாள்.

“பசித்தவருக்கு உணவு வழங்குபவனை பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் எந்த பிறவியிலும் வாட்டாது” என்று தர்மநூல்கள் குறிப்பிடுகின்றன.

தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் அமைந்துள்ளது. அன்னதானத்தின் இன்றியமையாத இயல்பைப் பற்றி பத்ம புராணம் பகர்கின்றது. பார்வதியின் அம்சமாகிய அன்னபுரணியைத் தொழும் போது ஈஸ்வரனான சிவனையும் கருத்தில் கொண்டு வழிபட வேண்டும். “மாதா பார்வதி தேவி; பிதா தேவோ மஹேஷ்வர:” என்று ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார். அன்னை பார்வதி உலக உயிர்களின் அன்னை, மகேசுவரனான சிவபெருமான் உலக உயிர்களின் தந்தை என்பதே இதன் பொருள்.

உணவு உட்கொள்ளும் முன் பிரார்த்தனை அவசியம்

ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்ளும் உணவு அன்னபூரணி தேவியின் திருவருளாலே நமக்கு கிடைத்தது. அதற்கு நாம் மறவாமல் அவளுக்கு நன்றி சமர்பிக்க வேண்டும். உலகவாழ்க்கைக்கு அன்னையும் தந்தையும் ஆகிய பார்வதி சிவனுக்கு மனமுருகி பக்தியும் நன்றியும் சமர்பிக்கும் வகையில் ஆதிசங்கராச்சாரியர் இயற்றிய அன்னபூரணி ஸ்தோத்திரம் திகழ்கின்றது. அந்த ஸ்தோத்திரத்தின் ஒரு ஸ்லோகம் உணவு உட்கொள்வதற்கு முன்னர் செப்பிக்கவேண்டிய முக்கிய மந்திரமாக அமைந்துள்ளது.

“ஓம் அன்னபூர்ணே சதாபூர்ணே
ஷங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய சித்யார்த்தம்
பிக்‌ஷாம் தேஹி ச பார்வதி”

பொருள் - பிரணவ மந்திரம். அன்னபூரணி தேவியே, எப்போதும் நிறைவானவளே. சங்கரனாகிய சிவபெருமானுக்கு உயிரானவளே. எங்களுக்கு (எல்லா மனிதர்களுக்கும்) ஆன்மிக அறிவாற்றல், மனத்தெளிவு, நற்பேறு, ஆன்மிக ஈடேற்றம் ஆகியவற்றை பிச்சையாக தந்தருள்வாய் பார்வதி தாயே.

கண்களை மூடிக் கொண்டு, “அன்னபூரணி தாயே. இன்று உன் திருவருளால் எனக்கு உணவு கிடைத்துள்ளது. இதுபோல எல்லா உயிர்களுக்கும் நிறைவாக உணவு கிடைக்க வேண்டும். சிவன் சக்தியின் பிள்ளைகளாகிய எங்களை நீ எப்போதும் எந்த குறையும் இல்லாமல் காத்தருள்வாயாக” என்றும் பிரார்த்தனை செய்யலாம்.

அன்ன நியதி (உண்ணுதல் நெறிகள்):

1) உணவை வீணாக்க கூடாது - பசித்த போது தான் உணவு உட்கொள்ள வேண்டும். எனவே போதுமான அளவு உணவை தட்டில் போட்டு உட்கொள்ள வேண்டும். இன்னும் பசித்தால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.

2) உணவை பகிர்ந்து உண்ண வேண்டும் - நமக்கு கிடைத்த உணவை நம்முடைய நண்பர்களோடும் சுற்றத்தாரோடும் பகிர்ந்து உண்ணலாம். இது நமக்கிடையே உள்ள ஒரு நல்ல உறவை மேலும் வலுவாக்கும். மற்ற வேளைகளில் நாம் தயாரித்த உணவை அண்டை வீட்டுக்காரர்கள் போன்றவர்களுக்கு கொடுக்கலாம்.

3) அன்போடு வழங்கப்பட்ட உணவை அலட்சியப்படுத்தக் கூடாது – ஒருவர் அன்போடு நமக்கு கொடுக்கும் உணவை நாம் ஏற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறவேண்டும். பிறகு அந்த உணவை இல்லத்தாரோடு பகிர்ந்து உண்ணவேண்டும். இவர் வேண்டாதவர், இவர் கொடுத்த உணவை உண்டால் ‘தீட்டாகிவிடும்’ என்று அந்த உணவை அலட்சியப்படுத்துவது மிகப்பெரிய தீவினை.

4) ஆரோக்கியமற்ற உணவை உண்ண வேண்டாம் – ஆரோக்கியமற்ற உணவை நாமும் உண்ணக் கூடாது மற்றவர்களுக்கும் கொடுக்க கூடாது. உணவை வீணாக்க கூடாது என்ற பட்சத்தில் ஆரோக்கியமற்ற உணவை நாம் உண்ணுதல் நம் உடலைப் பாதிக்கும். உடலை பாதிக்கும் இயல்புடையது ‘அன்னம்’ அல்ல. உடலுக்கு ஊட்டத்தை அளிப்பதே அன்னம் ஆகும். எனவே, அதை நாம் தூக்கிவீசுவதில் எந்தவொரு பிழையும் இல்லை.

5) புலால் உணவுகளைத் தவிர்க்க அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும் – புலால் என்றால் இறைச்சி எனப் பொருள்படும். இறைச்சி என்பது யாதெனில் அது பிறிதொரு உயிரினத்தின் சதை ஆகும். மற்ற உயிரினத்தின் உடலை உண்பதால் அதன் உள்ளுணர்வுகளும் நம் உணர்வுகளில் கலக்கின்றன. இது மனிதர்களிடம் இருக்கும் தெய்வீக குணங்களை முடக்கி மெல்ல மெல்ல மிருக குணங்களை உருவாக்கும். கட்டுப்பாடில்லாத புலால் உணவு நாளடைவில் பெரிய அளவிலான நோய்களை ஏற்படுத்தி மனிதனைக் கொல்கின்றன. மனரீதியிலும் உடல்ரீதியிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் புலால் உணவுகளை குறைத்துக் கொள்வது ஆரோக்கியமாகும். ஆன்மீக வாழ்வில் புலால் உணவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்மீகப் பயிற்சிக்கு புலால் மறுத்தல் மிக முக்கியமான ஒழுக்கநெறியாகும். மற்றபடி இந்துக்களாகிய நாம் புலால் உணவுகளை குறைத்துக் கொண்டு தாவர உணவுகளை மிகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். சிலருக்கு புலாலை முழுவதுமாக மறுக்க அடிப்படையான பயிற்சி தேவைபடும். அதனால் தான் நம் முன்னோர்கள் வெள்ளிவிரதம், புரட்டாசிவிரதம் என அறிமுகப்படுத்தினர். ஆகவே முடிந்தவரை சில முக்கிய நாட்களில் விரதமிருந்து புலால் மறுத்தலைக் கடைப்பிடியுங்கள்.

ஓம்

வேதாந்தம்







Wednesday, 6 April 2016

உலகத்தில் 84 லட்சம் உயிர்வகைகள்



உங்களுக்கு தெரியுமா?

உலகில் 87 லட்சம் (8.7 மில்லியன்) உயிரின வகைகள் இருப்பதாக தற்கால அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நம்முடைய புராணங்களும் இதற்கு நெருக்கமுடைய ஓர் எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றது.

நம்முடைய புராணங்களில், குறிப்பாக பத்ம புராணத்தில், இந்த உலகத்தில் 84 லட்சம் (8.4 மில்லியன்) உயிர்வாழி இனங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவற்றுள்:

  • 900,000 வகை நீர்வாழ் உயிரினங்கள்
  • 2,000,000 வகை தாவர உயிரினங்கள்
  • 1,100,000 வகை பூச்சியினங்களும் முதுகெலும்பில்லா உயிரினங்கள்
  • 1,000,000 வகை பறவையினங்கள்
  • 3,000,000 வகை இராட்சத மிருக இனங்களும் பல்லியினங்களும்
  • 400,000 வகை பாலூட்டியினங்கள்

ஏழு வகை பிறப்புகளில் ஆறுவகை பிறப்புகள் மேலே கூறப்பட்டுள்ளன. ஏழாவது வகை என்பது தேவர்கள். பூமியிலே பல நல்ல காரியங்கள் செய்து வாழ்ந்தவர்கள் வானுறையும் தேவர்களில் ஒருவராக பிறப்பெடுப்பார்கள். முக்திநிலை அடையும் வரை இவ்வாறு பல பிறவிகளாக பிறப்பெடுப்பார்கள். பிறவாநிலையே ஓர் ஆன்மாவுக்கு நிலையான முடிவாகும்.

”இதுபோல பல நுட்பமான உயிரியல் மற்றும் வானியல் சார்ந்த கருத்துகளைக் கொண்டே ஒரே மதம், இந்துதர்மம் தான். இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போலவே பல கிரகங்களும் அங்கே உயிரினங்களும் வாழ்கின்றன என்ற அறிவியல் உண்மையையும் இந்துதர்மம் சிறப்பாக கூறுகின்றது. இந்த பிரபஞ்சம் எப்போதும் தோற்றத்திற்கு வருதல் (படைப்பு), ஒடுங்குதல் (பிரளயம்) என தொடர்ச்சியான ஒரு சுழற்சியை மேற்கொள்கின்றது என்ற உண்மையும் இந்துதர்மத்தில் மட்டுமே உள்ளது. ரிக்வேதத்தின் நாசாதிய சூக்தம் அறிவியலாளர்களே வியக்கும் வகையில் பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றிய மிக அரிய தகவலை அளிக்கின்றது. தற்போதைய பிரபஞ்சம் சுமார் 13.83 பில்லியன் ஆண்டுகள் வயதுடையது. அதை அப்படியே இந்துதர்மம் மிக அழகாக விவரிக்கின்றது.” 
(கார்ல் சேகன், நாசா விருது வென்ற பிரபல அறிவியல் எழுத்தாளர்)


Tuesday, 5 April 2016

மகாபாரதம் சொல்லும் நல்லொழுக்கம்

மகாபாரதம் சொல்லும் நல்லொழுக்கம்


மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில், பீஷ்மர் ‘நல்லொழுக்கம்’ என்றால் என்ன என்பதைப் பற்றி சொல்லும் ஒரு கதை அமைந்துள்ளது.


ஒரு காலத்தில் ஓர் அடர்ந்த வனத்தில் ஜஜாலி எனும் துறவி வாழ்ந்து வந்தார். அந்த துறவி மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து வந்தார். நெடுங்காலமாக தவமிருந்து நிறைய ஆன்மீக அறிவைப் பெற்றார். ஆயினும் இதனால் அவர் தற்பெருமை கொள்ள ஆரம்பித்தார்.

”இந்த உலகத்திலே நான் தான் சிறந்த ஞானி. என்னுடைய தவோபலத்தால் நான் அளவற்ற ஆன்மீக அறிவைப் பெற்றுவிட்டேன். என்னைவிட சிறந்தவன் யாருமே இல்லை” என சத்தமாக சூளுரைத்தார்.

திடீரென்று அசரீரியாக ஒரு குரல் கேட்டது. அந்த குரல், “அவ்வாறு தற்பெருமை கொள்ளலாகாது, ஜஜாலி. ஊருக்குள் துலாதரன் எனும் வணிகன் இருக்கிறான். அறிவிலும் செயலிலும் உம்மை விட சிறந்தவன் அவன். எனினும் அவன் கூட இவ்வாறு தற்பெருமை கொண்டதில்லை.” என்றது.

ஜஜாலி வியப்படைந்தார். துலாதரன் என்பவர் யார்? அவர் தம்மை விட சிறந்தவனாக இருப்பது எப்படி? என ஆராய்ந்து அறிந்து கொள்ள ஆவல் கொண்டார். உடனே ஜஜாலி ஊருக்குள் சென்று துலாதரனைப் பற்றி விசாரித்தார். நெடுநேர தேடலுக்குப் பின்னர், வாரணாசியின் சந்தை ஒன்றில் அவரைக் கண்டார்.

துலாதரன் ஜஜாலியைக் கண்டவுடன் பணிவுடன் எழுந்து கைக்கூப்பி வணங்கினார். “துறவியாரே, உங்களின் வருகையால் நான் மிகவும் அகமகிழ்கிறேன்.” என்று சொன்னார்.

ஜஜாலியும் தன் வருகைக்கான காரணத்தைக் கூறினார். வனத்தில் அசரீரியாக எழுந்த குரல் சொன்னதையும் துலாதரனிடம் கூறினார். துலாதரனும் புன்னகைத்தபடி “துறவியாரே, தங்களைப் பற்றியும் தங்களின் வாழ்க்கையைப் பற்றியும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். உங்களின் துறவற வாழ்க்கை எனக்கொரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது” என சொன்னார். துலாதரனும் சில நேரம் பேசினார். அவரின் அறிவாற்றல் மிகுந்த பேச்சு ஜஜாலியை வியப்பில் ஆழ்த்தியது.

ஒரு வணிகனுக்கு இவ்வளவு ஞானமா? எப்பொழுதும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் எவ்வாறு இவ்வளவு ஞானத்தைப் பெற்றிருப்பான்? என்று சிந்திக்கலானார். “துலாதரா, உமக்கு எவ்வாறு இவ்வளவு ஞானம் கிடைத்தது?” என கேட்டார்.

“துறவியாரே, நான் ஒரு வணிகன் தான். அன்றாடம் பண்டங்களை வாங்குதல் மற்றும் விற்றல் என செய்துவருகிறேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் எந்தவொரு உயிரும் துன்புறுத்தப்படுவதில்லை. என்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு நன்மைகள் செய்கிறேன். தவறியும் மற்றவர்களுக்கு கேடு விளைவிக்க நினைத்ததில்லை. யாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதில்லை. நான் யாரையும் இதுவரை வெறுத்து ஒதுக்கியதுமில்லை.” என துலாதரன் கூறினார்.

“இதுவே, நல்லொழுக்கம் என சான்றோர்கள் கூறுவது. இதனாலே ஒருவன் பக்குவநிலை அடைந்து ஞானமடைகின்றான். இதைவிட புண்ணிய செயல் பிரிதில்லை.” எனவும் துலாதரன் தொடர்ந்தார். பிறகு துலாதரன் நிறைய நல்ல விஷயங்களை எடுத்துக் கூறினார்.

”துறவியாரே, அங்கே பாருங்கள். ஓர் இளங்கன்று தன் தாயிடம் எவ்வளவு பாசமாக இருக்கின்றது. அதுபோல தான் நாமும் நம் தாயிடம் பாசமாக இருந்திருப்போம். பாசமும் நேசமும் மிருகங்களுக்கும் உண்டு. அவ்வாறு உணர்ச்சிகள் நிறைந்த உயிர்களைக் கொல்லுவதும் அவற்றின் உடம்பை தின்பதும் குற்றம். எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்கவேண்டியது தானே மனிதர்களின் கடமை.” என கொல்லாமை தத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவர் நெடுநேரம் உணர்த்தினார். துலாதரனின் அகன்ற அறிவாற்றலும் பக்குவநிலையும் ஜஜாலியின் மனக்கண்ணைத் திறந்தன.

ஜஜாலியின் ஆணவமும் தற்பெருமையும் ஒழிந்துபோக அவர் துலாதரனை கைக்கூப்பி வணங்கினார். இருவரும் சிறந்த நண்பர்களாகி நிறைய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

பிட்டுக்காக மண் சுமந்த பெருமான்

பிட்டுக்காக மண் சுமந்த பெருமான்

- தத்துவம் என்ன?


சனாதன தர்மத்தின் புராணக் கதைகள் பெரும்பாலும் ஆழ்ந்த ஆன்மீக தத்துவங்களையும் நன்னெறி பண்புகளையும் நமக்கு எளிதாக எடுத்துரைப்பதற்காக அருளப்பட்டவை. அந்த வகையில் “பிட்டுக்காக மண் சுமந்த பெருமான்” எனும் புராணக் கதை அரசு தர்மத்தை உணர்த்துகின்றது.




அரசு தர்மம்

சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை, ஒரு நாட்டின் தலைவராக இருப்பவர் முதற்கொண்டு ஒரு குடும்பத்திற்கு தலைவராக இருப்பவர் வரை ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய கடமைகள் மற்றும் தவிர்க்கவேண்டிய செயல்கள் ஆகியவை தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் தலைவன் ஆற்றவேண்டிய கடமைகள் அர்த்தசாஸ்திர நூலில் குறிக்கப்பட்டுள்ளன. அதிலொரு முக்கிய கடமையை தான் ஈஸ்வரன் இப்புராண கதையின் மூலமாக நமக்கு விளக்குகின்றார்.

புராணம்

மதுரை வைகை அணையில் ஏற்பட்ட உடைப்பினை சரிசெய்ய பாண்டிய மன்னன் அந்த ஊரைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினரும் உதவிக்கரம் தந்து கரையை அடைக்க ஆணையிட்டான். அவ்வூரில் அம்மை என்ற வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தார். மூப்பெய்திய காலத்திலும் ஈசன் மீது கொண்ட பக்தி சற்றும் குறையாமல் அனுதினமும் ஈசனை வழிபட்டு வந்தார். சிவத்தொண்டு ஆற்றவேண்டி அந்த மூதாட்டி தன் ஊரில் புட்டுக்களை விற்று வாழ்ந்து வந்தார். பாண்டிய மன்னனின் ஆணையைக் கேள்விபட்ட மூதாட்டி,

“மன்னனின் ஆணையை நிறைவேற்ற என்னிடம் உடல்பலம் இல்லை. அணையை அடைக்க உதவிக்கரம் கொடுக்க ஈசனின்றி எனக்கென்று வேறு யாரும் இல்லையே” என மிகவும் வருத்தப்பட்டார்.

தம்மிடம் சரணடைந்த பக்தையின் வருத்தத்தைக் கண்டுகொண்ட சிவபெருமான் தாமே கூலி ஆளாக தோன்றினார். அப்போது அம்மையாரிடம் விளையாட வேண்டி ஒரு வேண்டுகோளும் விடுத்தார்.

“அம்மையே, உம் சார்பாக நான் மண் சுமக்கிறேன். அதற்கு கூலியாக நீர் தயாரித்த புட்டுகளை எமக்கு கொடுப்பாயா?” என கூலியாளாக தோன்றியிருந்த சிவபெருமான் கேட்டார்.

அம்மையும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். தெய்வீக புன்னகை மலர புட்டுகளை உண்டுவிட்டு மண் சுமக்க புறப்பட்டார்.

இப்போது மன்னனுக்கு பாடம் கற்பிக்க வேண்டி ஈசன் மற்றொரு திருவிளையாடலும் மேற்கொண்டார். மன்னன் கூலியாட்களிடம் மிகவும் கடுமையாகவும் அவர்களை அடிமையாகவும் நடத்தி வந்தான். கூலியாளாக தோன்றியிருந்த சிவபெருமான் களைப்பு மிகுதியால் வேலையை நிறுத்திவிட்டு உறங்குவதைப் போல பாசாங்கு செய்தார். இதைக் கண்ட மன்னன் கடும் கோபம் கொண்டான். சற்றும் சிந்திக்காமல் கோபத்தால் கூலியாளாக தோன்றியிருந்த சிவபெருமானை பிரம்பால் அடித்தான்.

அப்போது மன்னனுக்கே முதுகில் பிரம்படிபட்டது போல வலித்தது. கூலியாளின் மீது பட்ட ஒவ்வொரு அடியும் உண்மையில் மன்னனின் மீதே பட்டன. வியப்படைந்த மன்னன் கூலியாளாக தோன்றி திருவிளையாடல் புரிந்தது இறைவன் என்பதை உணர்ந்தான். கோபத்தால் சிந்தனையை இழந்து தான் செய்த செயலையும் கூலியாட்களிடம் கடுமையாக நடந்து கொண்டதையும் எண்ணி மிகவும் வருந்தினான். இறைவனை வேண்டி தன் தவற்றை திருத்திக் கொண்டான்.

இறைவன் அம்மையாரை வாழ்த்திவிட்டு, மாணிக்கவாசகர் பெருமையையும் கூறி அருளினார்.

நன்னெறி

வேலையாட்களை அடிமையாக நடத்தும் முதலாளிகளுக்கு இறைவன் ஒரு நல்ல பாடம் புகட்டியுள்ளார். தன்னுடைய வேலையாட்களிடம் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளவேண்டியது முதலாளிகளின் தர்மமாகும். அவர்களை அடிமை போல் நடத்தினால் அது தன்னை தானே பிரம்பால் அடித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். காரணம் முதலாளிக்காக தான் வேலையாட்கள் தங்களின் உடல்பலத்தை செலவிட்டு உழைக்கிறார்கள். முதலாளியிடம் கருணை இருந்தால் தான் தொழிலாளிகளிடம் விசுவாசம் இருக்கும். அதுபோல, ஒரு நாட்டை ஆளும் பெரிய பதவியில் உள்ளவர்கள் தன் மக்களின் வயிற்றில் அடித்தால், இறுதியில் அது அவர்களுக்கே வினையாக வந்து முடியும் என்பதையும் இந்த புராணம் எடுத்துக் காட்டுகின்றது.

இப்போது இருக்கும் சூழலில் இந்த புராணம் ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

“மக்களே ஒரு நாட்டின் முதுகெலும்பு. அவர்களை அடிமைப்படுத்துவதும் அவர்கள் வயிற்றில் அடிப்பதும், தர்மநியதிக்கு எதிரான செயலாகும்.” (அர்த்தசாஸ்திரம்)

இதுபோன்ற கதைகளில் அடங்கியிருக்கும் தத்துவங்களை நாம் கிரகித்துக் கொள்ள வேண்டும். அதுவே புராணங்களின் அடிப்படை நோக்கமாகும்.

Saturday, 2 April 2016

சப்தபதி (ஏழு வாக்குறுதிகள்)

சப்தபதி



திருமணத்தின் போது அவரவரின் மரபு படி நிறைய சடங்குகள் அமைந்திருந்தாலும், சனாதன தர்மத்தின் படி ஒருசில பொதுவான சடங்குகள் அமைந்துள்ளன. அதிலொன்றுதான் சப்தபதி எனும் சடங்கு ஆகும். இந்த சடங்கில் கணவனும் மனைவியும் கைக்கோர்த்து அக்கினி சாட்சியாக “ஏழு அடிகள்” வலம் வருவர். திருமண வைபவத்தில் அக்கினி என்பது ஜோதிவடிவான பரம்பொருளைக் குறிக்கின்றது. ஒவ்வொரு திருமணத்திற்கும் இறைவனே சாட்சியாக அமைந்துள்ளார். எனவே, இந்த ஏழு வாக்குறுதிகளையும் கடைப்பிடிக்க வேண்டியது கணவன் மனைவியின் தர்மம் ஆகும்.

1) கணவனும் மனைவியும் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் சுக துக்கங்களையும் குடும்ப சுமையையும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவேண்டும்.

2) இருவரும் ஒரே மனதாக இணைந்திருந்து, இருவருக்கும் ஒப்புதலுடைய செயல்களையே செய்யவேண்டும்.

3) இருவரும் தங்களின் குடும்பத்தினரை மதித்து நடக்கவேண்டும்.

4) இருவரும் ஒன்றாக இருந்து அவர்களின் குழந்தைகளை வளர்த்து, குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து, நிறைவான கல்வியை அளிக்கவேண்டும்.

5) இருவரும் குடும்ப பொருளாதாரத்தை சரிசமமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

6) இருவரும் பதி-பதினி தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பதி என்றால் தலைவன், பதினி என்றால் தலைவி. ஒரு குடும்பத்தின் தலைவன் கணவன், தலைவி மனைவி. கணவன் மனைவியை தவிர மற்ற பெண்களிடமும், மனைவி கணவனைத் தவிர மற்ற ஆண்களிடமும் தகாத உறவு வைத்துக் கொள்ள கூடாது. இதுவே பதி-பதினி தர்மம் ஆகும்.

7) கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மனதாலும், வாக்காலும், செயலாலும் நோகடிக்க கூடாது. ஒருவருக்கொருவர் அன்பு, இனிமை, அரவணைப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

Friday, 1 April 2016

மூவகை தவம்

மூன்று வகை தவம்




தவம் என்றால் ஆன்மீகப் பயிற்சி எனப் பொருள்படும். ஆழ்ந்த தியானம் மற்றும் முறையான ஒழுக்கநெறிகள் ஆகியவை “தவம்” என்று கூறப்படுகின்றன. தவம் என்பதற்கு நடைமுறையில் ‘விரதம்’ அல்லது ’நோன்பு’ எனவும் பொருள் கொள்ளலாம். தவம் மேற்கொள்பவர் “தபஸி” (ஆண்) அல்லது “தபஸ்வினி” (பெண்) என்றழைக்கப்படுவர்.

பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வது தான் ‘தவம்’ என்று தவறாக கருதப்படுகின்றது. ஆயினும் இந்துதர்ம நூல்களில் உடலை வருத்தி செய்யப்படும் தவங்கள் ‘தவிர்க்கப்படவேண்டியவை’ என அறிவுரை செய்யப்படுகின்றது.

பகவத் கீதை உட்பட இதர இந்துதர்ம நூல்கள் தவமுறைகளை மூன்று வகையாகப் பகுத்துக் காட்டுகின்றன.

  • தூய நிலையிலான தவமுறை (சத்வம்)
  • ஆசை அல்லது தற்பெருமை நிலையிலான தவமுறை (ரஜஸ்)
  • அறியாமை மற்றும் மூட நிலையிலான தவமுறை (தமஸ்)

இவற்றுள் சத்வ தவமுறை தான் ஊக்குவிக்கப்படுகின்றது. சத்வ தவமுறையைக் கடைப்பிடிப்பவர் இறைவனின் அருளைப் பெறுவர். சத்வ தவமுறையை உடல், வாக்கு, மனம் என மூன்றாகப் பிரிக்கலாம். அவை:

உடல்

1) தினமும் தவறாமல் தெய்வங்களை வழிபட வேண்டும்.
2) பெற்றோர், குரு மற்றும் சான்றோர்களை மதித்து போற்றவேண்டும்.
3) உடல் தூய்மையைப் பேண வேண்டும்.
4) எளிமையான வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளவேண்டும்.
5) தன்னடக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
6) மற்றவர்களுக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

வாக்கு

1) பொய்யானவற்றை தவிர்த்து உண்மையைப் பேச வேண்டும்.
2) கடுமையான சொற்களைத் தவிர்த்து இனிமையாகப் பேச வேண்டும்.
3) மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்கும் விஷயங்களைப் பேச வேண்டும்.
4) நல்லவர்களை நோகடிக்காமல் பேச வேண்டும்.
5) வேதங்கள் கூறும் உண்மைகளை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

மனம்

1) இருப்பதைக் கொண்டு மனதில் திருப்தி கொண்டிருக்க வேண்டும்.
2) மனத்தைக் கட்டுப்படுத்த பழக வேண்டும்.
3) தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து மனத்தில் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
4) எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

இறைவனின் அருளைப் பெறுவதற்கு இதுபோல எத்தனையோ எளிதான வழிகள் நம் இந்துதர்மத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, தனக்கும் மற்றவருக்கும் துன்பத்தை தரும் கடுமையான மற்றும் தவறான வழிகளில் செல்லாமல் மேற்கூறிய தவமுறைகளைக் கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது.