உங்களின் குழந்தைகள் கல்வியில் சிறக்க
ஐந்து வழிகள்
(தைத்திரீய உபநிடதம், யஜுர் வேதம்)
பஞ்சஸ்வதிகரணேஷு அதிலோகமதிஜ்யௌதிஷ மதிவித்யமதிப்ரஜமத்யாத்மம் தா மஹாஸக்ம்ஹிதா இத்யாசக்ஷதே
- தைத்திரீய உபநிடதம் (3.2)
யஜுர் வேதத்தின் முடிவாக அமைந்திருக்கும் உபநிடதங்களில் ஒன்று தான் தைத்திரீய உபநிடதம். இந்த உபநிடதத்தின்
(1:3) ஆவது பாகத்தில், மாணவர்கள் கல்வியில் சிறப்படைய தேவையான ஐந்து வழிகள் தரப்படுகின்றன.
- அதிலோகம் – தகுந்த சூழல்
- அதிஜ்யௌதிஷம் – மேன்மையான அறிவொளி
- அதிவித்யம் – தேர்ச்சிபெற்ற ஆசிரியர்
- அதிப்ரஜம் – சிறந்த பெற்றோர்
- அதியாத்மம் – சரியான உடல்நலம்
அதிலோகம் – தகுந்த சூழல்
|
நமது பாரம்பரிய குருகுல கல்வி முறை |
தகுந்த சூழலில் மாணவர்களுக்குக் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும். நல்லக் காற்றோட்டமான, மரங்களும் செடிக் கொடிகளும் நிறைந்த, அமைதியான இடத்தில் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும். இத்தகைய இடங்களில் கல்வி கற்றுத் தரப்படும் போது, மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்கும்.
அதிஜ்யௌதிஷம் – மேன்மையான அறிவொளி
|
வகுப்பு ஆரம்பிக்கும் முன்னர் தியானத்தில் ஈடுபட்டிருக்கும்
வெளிநாட்டு பள்ளி மாணவர்கள் |
கல்வி கற்பதற்கு தகுந்த இடத்தை தேர்ந்தெடுத்த பின்னர், மனதையும் உடலையும் சீர்நிலைக்கு கொண்டு வரவேண்டும். அதாவது எண்ணங்களும் சிந்தனைகளும் அமைதியாகவும், உடல் செயல்பாடு சாந்தமாகவும் இருக்க வேண்டும். அதற்கு தியானத்தில் ஈடுபட வேண்டும். எனவே கல்வி கற்க ஆரம்பிக்கும் முன்னர், தியானத்தில் ஈடுபட வேண்டும். முறையான தியானத்தின் போது, பிரபஞ்சத்தின் இயக்க சக்தி நம் உள்ளாற்றலோடு இணைந்து அறிவொளியைத் தூண்டும். இது உள்ளுணர்வுகளை அமைதிபடுத்தி, மனத்தை சாந்தநிலைக்கு கொண்டுவரும். இதனால் மாணவர்கள் கல்வியில் அதிக கவனத்தை செலுத்திடலாம்.
அதிவித்யம் – தேர்ச்சிபெற்ற ஆசிரியர்
ஆசிரியரை
“ஆச்சார்யர்” என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. ஆச்சார்யர் என்றால் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்தவர். ஆச்சார்யர் என்பவர் வெறும் கற்பித்தல் மட்டுமல்லாமல், தான் போதிக்கும் நல்ல நெறிகளையே தன் வாழ்க்கையாக கொண்டு வாழ்பவர். நன்னெறிகளோடு வாழும் ஆச்சார்யர் கல்விக்கு ஆதாரமாக கூறப்படுகின்றார். எனவே, ஒழுக்கமும் நிறைவான அறிவும் உடைய ஆசிரியர் தான் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமைய முடியும்.
அதிப்ரஜம் – சிறந்த பெற்றோர்
|
வித்யாரம்பம் - கல்வி ஆரம்பம் |
வீட்டில் இருந்து தான் கல்வி தொடங்குகின்றது. இந்த கருத்தை சுட்டிக் காட்டவே இந்துக்களின் 16 சடங்குகளில் ஒன்றாக
“வித்யாரம்பம்” எனும் சடங்கு அமைந்துள்ளது. ஒருவனுக்கு அவனின் வீடு தான் முதல் பள்ளிக்கூடம், அவனின் பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள். அதிப்ரஜம் எனும் சொல் நல்ல நெறிகளும் மேன்மையான குணங்களும் உடைய பெற்றோர்களை அல்லது குடும்பத்தினரைக் குறிப்பிடுகின்றது. கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த பிள்ளைகளே பெற்றோர்களுக்கு நீண்ட ஆயுளை அளிப்பவர்கள். தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பெற்றோர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. நம்முடைய பாரத பாரம்பரியத்தில் கதைகளின் மூலமாகவும், பாடல்களின் மூலமாகவும் குழந்தைகளுக்கு நல்ல நெறிகளை கற்பிக்கும் வழக்கம் இருக்கின்றது. அவ்வாறு குழந்தைகளுக்கு சிறுவயதிலே நன்னெறிகளையும் சமய ஒழுக்கங்களையும் கற்பிக்க வேண்டியது பெற்றோரின் அல்லது குடும்பத்தினரின் கடமையாகும்.
அதியாத்மம் – சரியான உடல்நிலை
|
பழங்களும் காய்கறிகளும் |
|
யோகாசனம் புரியும் சிறுவர்கள் |
கல்வியில் கவனம் சிதறாமல் இருப்பதற்கு மாணவர்களின் உடல்நிலை மிகவும் அவசியமாகும். இதனால் மாணவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் உடல்பயிற்சி ஆகிய இரண்டிற்கும் அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை மாணவர்கள் அதிகமாக உட்கொள்ள வேண்டும். காரம், உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாணவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் யோகாசனப் பயிற்சி செய்வதால், உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? மேலும், மாணவர்களின் கேட்டல் திறன் மற்றும் பேச்சுத்திறன் அதிகரிக்க வேண்டும். மந்திரங்கள், தேவாரங்கள் போன்றவற்றை கேட்பதாலும் அவற்றை செப்புவதாலும் மாணவர்களின் கேட்டல் திறன் மற்றும் பேச்சுத்திறன் அதிகரிக்கின்றது.
முடிவுரை
தகுந்த சூழல், தியானம், தேர்ச்சிபெற்ற ஆசிரியர், சிறந்த பெற்றோர் மற்றும் சரியான உடல்நலம் ஆகிய ஐந்தும்
“பஞ்சஸ் அதிகரணம்” என்றழைக்கப்படுகின்றன. இன்று ஐரோப்பிய நாடுகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு இத்தகைய யுக்திகளே கையாளப்படுகின்றன. ஆனால் இவ்வழிகள் யாவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. முடிந்தவரை நம் பிள்ளைகளுக்கு சமய நெறிகளையும், ஒழுக்கங்களையும் வீட்டிலே கற்றுத் தருவோம். ஓம் ஷாந்தி