திருவாசகம்
சிவபுராணம் (2)
பொருள்:
என்னுடைய (மனம் கண்டபடி உழலும்) வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும். பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும். இறைவனை இல்லை என்று மறுத்து (ஒதுங்கி) நிற்பவர்களுக்கு, வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக இருக்கும்) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும். கைகளைக் கூப்பி வழிபடுவர்களுக்கு (மிக அருகில்) உள்ளத்திலே மகிழ்ந்து இருக்கும் இறைவனுடைய கழல்கள் வெல்லட்டும். தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.
விளக்கம்:
மன ஓட்டத்தை தவிர்ப்பவனும், பிறவித் துன்பத்தை நீக்குபவனும் இறைவனே என்பது, “வேகங் கெடுத்தாண்ட வேந்தன்”, “பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்” என்பவற்றால் விளங்கும். பிஞ்ஞகன் என்றால் தலைக்கோலம் உடையவன். அதாவது, பிறைநிலா, கங்கை, அரவம் முதலியன தலைக்கோலங்கள்.
இறைவனை இல்லை என்று மறுத்து, ஒதுங்கி நிற்பவர்களுக்கு இல்லாதவராகவே இருப்பார். அதையே “புறத்தார்க்குச் சேயோன்” என்றார். இறைவன் குடியிருக்கும் இரண்டு இடங்களாக நெஞ்சத்தாமரையும், துவாதசாந்தப் பெருவெளியும் குறிக்கப்படுகின்றது. துவாதசாந்தப் பெருவெளி என்பது தலைக்கு பன்னிரண்டு அங்குலத்திற்கு மேல் அமைந்திருக்கும் இடமாகும். இவ்விரண்டு இடங்களிலும் இறைவனை நினைத்து வழிபடவேண்டும் என்பதற்காக மாணிக்கவாசகர், “கரம் குவிவார், சிரம் குவிவார்” எனக் குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment