பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்_கீதை 16:1-3 ஸ்லோகங்களில், மனிதர்கள் கொண்டிருக்க வேண்டிய 26 தெய்வீக குணங்களை எடுத்துக் கூறுகிறார். அவை பின்வருமாறு:
1) அபயம் – பயமின்மை/அஞ்சாமை,
2) சத்வ சம்சுத்தி – நற்குணம் நிறைந்த தூய உள்ளம்,
3) ஞானயோக வியவஸ்திதி – இறைவன் மற்றும் ஆன்மாவைப் பற்றிய அறிவை பெருக்கும் ஞானயோகத்தில் ஈடுபடுதல்,
4) தானம் – தானம்/ கொடை
5) தமம் – அடக்கமுடைமை
6) யக்ஞம் – வேள்வி/ தியாகம் (ஈகை)
7) ஸ்வத்யாயம் – சமய நூல்களைக் கற்றல் (எ.கா. திருமுறை, பகவத் கீதை)
8) தபம் – தவம்
9) ஆர்ஜவம் – எளிமை (பகட்டைக் காட்டிக் கொள்ளாமல் இருத்தல்)
10) அஹிம்சை – இன்னா செய்யாமை (எந்த உயிரையும் துன்பப்படுத்தாமல் இருத்தல்)
11) சத்யம் – வாய்மை (உண்மைக்குப் புறம்பான சொற்களைப் பேசாமல் இருத்தல்)
12) அக்ரோதம் – சினங்கொள்ளாமை/வெகுளாமை (மூடத்தனமான காரணத்துக்காக கோபித்துக் கொள்ளாமல் இருப்பது)
13) தியாகம் – துறவறம் (பொருள்களின் மீது கொள்ளும் பற்றைத் துறத்தல்)
14) ஷாந்தி – அமைதி/பொறையுடைமை (பொறுமையாக இருத்தல்)
15) அபைஷுனம் – தீவினையச்சம் (துன்பம் விளைவிக்கும் தீயசெயல்கள், தீயசொற்கள் போன்றவற்றை தவிர்த்தல்)
16) தயை பூதேஷு – அருளுடைமை (எல்லா உயிர்களிடமும் கருணை காட்டுதல்)
17) அலோலுப்த்வம் – வெஃகாமை (பேராசை இல்லாமை; பிறர்பொருளைக் கவராமை)
18) மார்தவம் – பெருந்தன்மை/முரட்டுத்தனமில்லாமல் இருத்தல்
19) ஹ்ரீரம் – நாணுடைமை (ஆரவாரமின்றி அடக்க ஒடுக்கமாக இருத்தல்)
20) அசாபலம் – அசையா உறுதியுடைமை
21) தேஜஸ் – ஊக்கமுடைமை
22) க்ஷாமம் – மன்னிக்கும் குணம் கொண்டிருத்தல்
23) த்ரீதி – இடுக்கண் அழியாமை (எத்தகைய துன்பம் வந்தாலும், மனம்தளராமல் இருத்தல்)
24) ஷௌச்சம் – தூய்மை (உள்ளம், உடல், செயல் தூய்மை)
25) அத்ரோஹம் – அழுக்காறாமை (பொறாமை குணத்தில் இருந்து நீங்கியிருத்தல்)
26) அதிமானிதம் – புகழுடைமை (நல்லவர்கள் பழிக்கும்படி நடந்து கொள்ளக் கூடாது)
இந்த 26 தெய்வீக குணங்களை ஆங்கிலத்தில் (26 divine qualities) எனக் குறிக்கின்றனர்.
வேதாந்தம்
யஜுர்வேதத்தின் மிகப் பழைமையான பிருகதாரண்யக உபநிடதத்தில் (5.2.3) பிரம்மதேவர் மனிதர்களுக்காக அளித்த மூன்று உபதேசங்கள் உள்ளன. அவை:
- அடக்கமுடைமை (தமம்)
- ஈகை (தானம்)
- அருளுடைமை (தயை)
இம்மூன்றும் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுக்கநெறிகளாக உள்ளன. இவை மனிதர்களின் வாழ்வியல் மேன்மைக்கும் உலக நிலைப்பாட்டிற்கும் ஒத்திசைக்கின்றன.
திருக்குறள்
திருக்குறளிலும் மேற்கண்ட பண்புகள் விளக்கப்படுகின்றன. ஒருவர் திருக்குறளைப் படித்தாலே மேற்கூறிய பண்புகளை விரிவாக விளங்கி கொள்ளலாம். அடக்கமுடைமை (அதி.13), ஈகை (அதி.23), தவம் (அதி.27), இன்னா செய்யாமை (அதி.32), வாய்மை (அதி.30), துறவு (அதி.35), தீவினையச்சம் (அதி.21), அருளுடைமை (அதி.25), வெஃகாமை (அதி.18), நாணுடைமை (அதி.102), ஊக்கமுடைமை (அதி.60), இடுக்கண் அழியாமை (அதி.63), அழுக்காறாமை (அதி.17), புகழ் (அதி.24). வள்ளுவர் மற்ற குணநலன்களையும் விளக்கியுள்ளார். உதாரணமாக, தூய்மை- வினைத்தூய்மை (அதி.66), உறுதியுடைமை- வினைத்திட்பம் (அதி.67), பொறையுடைமை (அதி.16), சினங்கொள்ளாமை- வெகுளாமை (அதி.31), அவா அறுத்தல், மெய்யுணர்தல், அவை அஞ்சாமை (சொற்களத்தில் பேசும் துணிவு) போன்ற இன்னும் பல அதிகாரங்களில் மற்ற தெய்வீக குணங்களைப் பற்றி வள்ளுவர் விளக்கியுள்ளார்.
ஒருவர் பகவத் கீதையை தன் ஆன்மீக ஈடேற்றத்திற்காகவும், திருக்குறளை சமூக வாழ்வியல் நெறிக்காகவும் கற்க வேண்டும். ஆன்மீகத்திலும் சமூக வாழ்வியல் நெறிகளிலும் சிறந்தவன், மேன்மையான இறைவனை அடைகின்றான்.
Thanks. V WL try to follows geethai
ReplyDelete