இந்துதர்ம போதனைகளில் அரிஷத்வர்கம் என்று சொல்லப்படும் மனிதனின் ஆறு எதிரிகளில் ஒன்றுதான் கோபம். அதைப் பற்றி மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் சிறப்பாக விளக்குகின்றார்.
கானகத்திற்கு நாடு கடத்தப்பட்ட பாண்டவர்கள், மாலைப்பொழுதில் திரௌபதியுடன் அமர்ந்து, துயரத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.“யுதிஷ்டிரரே, உண்மையில் உமக்கு கோபம் என்பதே இல்லை. இல்லாவிட்டால், உமது தம்பிகள் மற்றும் எனது (துன்ப) நிலையைக் கண்டும், உமது மனம் ஏன் அசையவில்லை? உமக்கு கோபமே வராதா?” என திரௌபதி யுதிஷ்டிரரிடம் கேட்கிறாள்.
யுதிஷ்டிரர் சொன்னார், "கோபமே மனிதனைக் கொல்லும், அதே வேளை கோபமே மனிதனை வளம்பெற வைக்கும். ஓ திரௌபதியே, கோபமே செழிப்பு மற்றும் துரதிர்ஷ்டங்களுக்கு வேர்க்காரணமாகும். எவன் கோபத்தை அடக்குகிறானோ அவன் செழிப்பை அடைகிறான். கோபத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் மனிதன், தனது கடும் கோபத்தின் விளைவாக துரதிர்ஷ்டத்தை வரவழைத்துக் கொள்கிறான். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் அழிவுக்கும் கோபமே காரணமாக இருக்கிறது. உலகத்திற்கே அழிவைக் கொண்டுவரும் கோபத்தை நான் எப்படி விரும்பி ஏற்பேன்? கோபம் கொள்ளும் மனிதன் பாவம் இழைக்கிறான்.
கோபம் கொண்ட மனிதன் தனது குருவைக் கூட கொல்வான். கோபம் கொண்ட மனிதன் தன்னை விட அறிவில் சிறந்தவர்களைக் கூட கடுஞ்சொற்களால் அவமதிப்பான். கோபம் கொண்ட மனிதன் எது சொல்லப்பட வேண்டும் எது சொல்லப்படக்கூடாது என்பதற்குண்டான வேறுபாட்டை அறியாமல் போகிறான். கோபம் கொண்ட மனிதன் செய்ய தகாத செயல்களையும் செய்வான். கோபம் கொண்ட மனிதனால் சொல்ல தகாத வார்த்தைகளையும் சொல்வான். கோபத்தின் காரணமாக ஒரு மனிதன், அப்பாவிகளையும் தயங்காமல் கொன்றுவிடுவான். இக்குறைபாடுகளைக் கண்டே, ஞானமுள்ளோர், உயர்ந்த செழிப்பை இப்பிறவியிலும் மறு பிறவியிலும் அடைய தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே அமைதியான ஆன்மா கொண்டோர் கோபத்தைத் தங்களிடம் இருந்து விரட்டுகின்றனர். இப்படி இருக்கும் போது எங்களைப் போன்றோர் எப்படி கோபத்திற்கு ஆளாகுவோம்?
ஓ திரௌபதியே, இதையெல்லாம் கருதியே எனது கோபம் தூண்டப்படவில்லை. இதன் காரணமாக அறம்சார்ந்தவர்கள் கோபத்தை வென்றவர்களைப் பாராட்டுகிறார்கள். உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்களின் கருத்து.
உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. என்னைப்போன்ற ஒருவன், துரியோதனனைக் கொல்லும் காரணத்திற்காக, பல குறைகளையுடையதும், அறம்சார்ந்தவர்கள் தங்கள் ஆன்மாவில் இருந்து விரட்டும் கோபத்தை மேற்கொள்வது, எங்ஙனம்? பொங்கி வரும் கோபத்தை தனது ஞானத்தால் அடக்குபவனே பலம் கொண்ட மனிதன் என்று உண்மையை அறிந்த கற்றவர்கள் சொல்கிறார்கள்.
திரௌபதியே, கோபம் கொண்ட மனிதன் நடைபெறும் காரியங்களை அதன் உண்மைத் தன்மையுடன் பார்ப்பதில்லை. கோபம் கொண்ட மனிதன் தனது வழியைக் காண்பதில்லை. அவன் மனிதர்களையும் மதிக்க மாட்டான். ஆகையால், புத்தி கொண்ட மனிதன் கோபத்தை தூரத்தில் விலக்கி வைக்க வேண்டும். கோபத்தில் மூழ்கிய மனிதன் பராக்கிரமசாலிக்கே உரிய பெருந்தன்மை, கண்ணியம், தைரியம், திறமை மற்றும் பிற குணங்களை எளிதாக அடைவதில்லை. கோபத்தைக் கைவிடுவதால் ஒரு மனிதன் சரியான சக்தியை வெளிப்படுத்த முடியும்.
திரௌபதியே, காயப்பட்டவர்கள் தங்கள் காயங்களுக்கு பதிலடி கொடுப்பதும், மற்றொருவனால் தண்டிக்கப்பட்டவன் அந்த மற்றொருவனை பதிலுக்கு தண்டிப்பதும் அனைத்து உயிர்களின் அழிவுக்கும் காரணமாக இருக்கும். உலகத்தில் பாவம் அதிகரிக்கும். வேறு மனிதனிடம் தீய வார்த்தைகளைக் கேட்கும் மனிதன், பதிலுக்கு அந்த வார்த்தைகளைத் திருப்பிச் சொல்வதும், தந்தையர் மகன்களையும், மகன்கள் தந்தைகளையும், கணவர்கள் மனைவியரையும், மனைவியர் கணவர்களையும் கொல்லும் நிலை ஏற்படும்.
ஓ திரௌபதி, இப்படிப்பட்ட கோபம் நிலவும் உலகத்தில் பிறப்பு எப்படி ஏற்படும்! உயிர்களின் பிறப்பு சமாதானத்தால் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள். மன்னர்களும் கோபத்திற்க்குத் தங்களை ஒப்புக் கொடுத்தால், குடிமக்கள் விரைவில் அழிவைச் சந்திப்பர். ஆகையால், கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே ஞானி. அவனே பலவான். கோபத்தை வெல்லும் சக்தி படைத்த மனிதன், பல எண்ணற்ற மகிழ்ச்சி நிறைந்த இன்பகரமான உலகங்களுக்கு சொந்தக்காரனாவான். அதேவேளையில் கோபம் கொண்ட மனிதன் முட்டாள் என்று அழைக்கப்பட்டு, இப்பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் துன்பத்தைச் சந்திக்கிறான்.
ஓ திரௌபதி, பொறுமை குறித்த இந்த வரிகளைக்கேட்ட பிறகு உனக்குள் உள்ளடங்கு. கோபத்திற்கு ஆளாகாதே. மன்னிப்பும் , மென்மையும் சுயமாக ஒருவன் அடைய வேண்டும். அவர்களின் நித்தியமான தன்மையையே பிரதிபலிக்கிறது. ஆகையால் உண்மையில் நான் அந்தக் குணங்களை என்னிடம் சேர்த்துக் கொள்வேன்.”
இவ்வாறு யுதிஷ்டிரர் திரௌபதிக்கு விளக்குகின்றார். எனவே, நமக்குள்ளேயே இருந்து நம்மை அழித்திடும் ஆறு எதிரிகளில் ஒன்றான "கோபத்தை" அடக்கிக் கொள்வோம். பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்வோம்.
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை” (குறள் 151)
மேலும் படிக்க:
அரிஷத்வர்கம் - http://dharmafacts.blogspot.my/2016/04/blog-post_15.html
No comments:
Post a Comment