Monday, 22 February 2016

பெற்றோரை தோளில் சுமந்த மகன்

பெற்றோரை தோளில் சுமந்த மகன்
சிரவண குமார் இராமாயணத்தில் இடம்பெறும் சிறப்புமிக்கவர்களில் ஒருவராக திகழ்கிறார். பெற்றோருக்கு ஆற்றவேண்டிய நன்றிக்கு வித்தாக சிரவண குமார் காட்டப்படுகிறார். இவர் தசரத மன்னராட்சியில் அயோத்தியில் வாழ்ந்தவர்.
சாந்தாவன் மற்றும் ஞானவதி எனும் கண்பார்வையற்ற ஏழை தம்பதியரின் மகன் சிரவண குமார். இவர் வயது முதிர்ந்த கண்பார்வையற்ற தன் பெற்றோருக்கு வாழ்க்கை ஆதாரமாக விளங்கியவர். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை இந்துக்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தீர்த்த யாத்திரை மேற்கொள்வது முக்கிய கடமையாகும். எனவே சிரவணனின் பெற்றோரும் தீர்த்த யாத்திரை மேற்கொள்ள முடிவெடுத்தனர். ஆனால் கண்பார்வையற்ற நிலையில், வறுமையும் முதுமையும் சேர்ந்திருக்க அவர்களால் தங்களின் கடமையை நிறைவேற்ற இயலாமல் போனது.

தன் பெற்றோரின் நல்லாசைகளை நிறைவேற்ற வேண்டியது ஒரு பிள்ளையின் கடமையாகும். ஆயினும் பெற்றோரை தீர்த்த யாத்திரைக்கு அனுப்ப போதுமான பணம் சிரவணனிடமும் இல்லை. எனவே அவர் தன் தாய் தந்தையரை இரு வலுவான கூடைகளில் அமர்த்தி ஒரு மூங்கிலால் இணைத்து தன் தோள்பட்டையில் தாங்கிகொண்டு (காவடியைப் போல்) தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்.

தீர்த்த யாத்திரை பயணத்தின் போது தம் பெற்றோர் சிரவணனை தாகம் காரணமாக குடிநீர் கொண்டுவர பணித்தனர். சிரவணனும் ஆற்றங்கரை அருகில் சென்று ஒரு பெட்டகத்தில் நீரை எடுத்துக் கொண்டிருந்தார். அச்சமயம் துல்லிய செவியுணர்வு கொண்ட தசரத சக்கிரவர்த்தி அங்கு வேட்டையாட வந்திருந்தார். நீர் பெட்டகத்தில் நிறையும் ஒலி கேட்டு மான் ஒன்று நீர் அருந்த வந்திருக்கும் என்று நினைத்து அந்த திக்கை நோக்கி அம்பெய்தார். பெற்றோர் தாகம் தீர்க்க தண்ணீர் எடுக்கச் சென்ற சிரவணன் தசரதரின் அம்பு தாக்கி கீழே விழுந்தார். தன்னுடைய கவனக்குறைவால் தான் இளைத்த பெரும்பாவ செயலை எண்ணி தசரதர் துடிதுடித்துப் போனார். வேகமாக ஓடிச்சென்று சிரவணனிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடினார்.

உயிர்போகும் தருவாயிலும் தன் தாய்தந்தையரின் தாகம் தீர்க்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் மட்டுமே சிரவணனின் மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது. தசரதரிடம் தன் பெற்றோரின் தாகத்தை தீர்க்க இந்த தண்ணீரைக் கொண்டுசென்று தரும்படி வேண்டினார். நீர் பெட்டகத்தை தசரதரிடம் தர சிரவணனின் உயிரும் உடலை விட்டு நீங்கியது. தசரதர் தன் கண்ணீரை துடைத்தபடியே தாங்கமுடியாத மனவேதனையுடன் நீர்பெட்டகத்தை எடுத்துக் கொண்டு சிரவணனின் பெற்றோரை நோக்கிச் சென்றார்.

அங்கு தசரதர் அவர்களின் தாகத்தை தணித்துவிட்டு நடந்தவற்றை எல்லாம் அவர்களுக்குத் தெரிவித்தார். தன்னுடைய கவனக்குறைவால் அவர்களுடைய மகனின் மீது அம்பெய்தி கொன்றுவிட்டதைக் கூறி அவர்களிடம் மன்னிப்பு கோரி மன்றாடினார். ஆயினும் தசரதரின் மீது கடுங்கோபம் கொண்ட சிரவணனின் பெற்றோர் தசரதனுக்கு விமோஷனமே இல்லா ஒரு மிகப்பெரிய சாபத்தை அளித்தனர்.

“இன்று நாங்கள் எங்களின் மகனைப் பிரிந்து அனுபவிக்கும் வேதனையைப் போலவே நீயும் உன் மகனைப் பிரிந்து புத்திரசோகத்தை அனுபவிப்பாய்!” என சாபமளித்தனர். தசரதர் இளைத்த கர்மவினை பலனாலும் அவர் பெற்ற சாபத்தாலும் அன்புமகன் ஸ்ரீராமரை பதிநான்கு ஆண்டுகள் பிரிந்து புத்திரசோகம் அனுபவித்து உயிரிழந்தார்.

இராமாயணத்தின் ஒவ்வொரு கதாபத்திரமும் ஒவ்வொரு சிறப்பை உடையவர் போல சிரவணன் கடமைமிக்க ஒரு மகனாக போற்றப்படுகின்றார். தன் உயிர்போகும் தருவாயிலும் தன் பெற்றோருக்கு ஆற்றவேண்டிய கடமையை அவர் மறக்கவில்லை. ஆனால் இன்றைய காலத்தில் சில பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டுசென்று சேர்க்கின்றனர். தன் பெற்றோரை முதுமை காலத்தில் கூட இருந்து பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். இதுவே புத்திர தர்மம் என்று சொல்லப்படுகின்றது.

“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்” (குறள் 70)

No comments:

Post a Comment