Thursday, 31 March 2016

திருக்குறள் (தவம்)

தவம் (அதிகாரம் 27)


உற்றநோய் தோன்றல் உயிர்க்கும்உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு. (261)தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது. (262)துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்? (263)ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (264)வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயல்ப் படும். (265)தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு. (266)சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (267)தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும். (268)கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (269)இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (270)

Wednesday, 30 March 2016

அனுமன் சீதையைக் கண்டு பிடித்தது எப்படி ?


இலங்கையில் சீதையைக் கண்டு விட்டு வரும் அனுமன்

"கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்,"

என்று தெரிவித்ததாகக் கம்பன் பாடியிருக்கிறார். 'கண்களால் கண்டனன்' என்று சொல்வதில் என்ன விசேஷம்? அனுமன் மாத்திரமல்ல, யாருமே கண்களால் தானே பார்க்கமுடியும்?

விளக்கம்: சீதையைத் தேடப் புறப்பட்ட போது சீதை எப்படி இருப்பாள் என்பது அனுமனுக்குத் தெரியாது. ஆகவே அனுமன் ஒரு காரியம் செய்தார். மனைவியைப் பிரிந்து தவிக்கும் ஸ்ரீராமனின் கண்களை நன்றாகப் பார்த்து வைத்துக் கொண்டார். அந்த கண்களில் எத்தனை சோகம் தேங்கியிருக்கிறதோ அதே அளவு சோகம் எந்தப் பெண்ணின் கண்களில் இருக்கிறதோ அவள்தான் சீதையாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். அவ்வாறே அசோகவனத்தில் சீதையைப் பார்த்ததும் அவள்தான் சீதை என்பதை , அந்தக் கண்களின் சோகத்தால் 'கண்களால்' -- கண்டு கொண்டார்.

விருக்ஷாசனம் (மரம் போன்ற ஆசனம்)

விருக்ஷாசனம்
(மரம் போன்ற ஆசனம்)விருக்‌ஷாசனம்

விருக்‌ஷம் என்றால் மரம் எனப் பொருள்படும். ஆசனம் என்றால் இருக்கை அல்லது பாவனை எனப் பொருள்படும். எனவே விருக்‌ஷாசனம் என்பதை மரம் போன்ற பாவனை எனப் பொருள் கொள்ளலாம். விருக்‌ஷாசனம் மிகவும் பிரபலமான ஒரு யோகாசனம் ஆகும்.

|| செய்முறை ||


 1. ஒற்றைக் காலில் நின்றபடி கைகள் இரண்டையும் மேலே தூக்கிக் காதுகளை ஒட்டி கூப்பிக்கொள்ள வேண்டும்.
 2. நிற்கும் கால் நிலையாக, நேராக இருக்க வேண்டும்.
 3. நிற்கும் காலின் தொடை மீது மடித்துவைக்கப்பட்ட கால் பாதம் கீழ்நோக்கி இருக்க வேண்டும்.
 4. மடித்துவைக்கப்பட்ட கால் பாதம், நிற்கும் காலின் மீது முழுமையாகப் படிந்திருக்க வேண்டும்.
 5. மடித்துவைக்கப்பட்ட கால் 90 பாகை (டிகிரி) அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும்.
 6. மடித்துவைக்கப்பட்ட காலின் தொடைக்கும் குதிகாலுக்கும் இடையில் இடைவெளி இல்லாத நிலையே ஆகச் சிறந்த நிலை (குதிகால் மூட்டுக்காலை தள்ளும்படி நிற்பதை தவிர்த்து விடவும். குதிகால் மூட்டுக்கு மேலே பதிந்திருப்பது சாலச் சிறப்பு)
 7. இதேபோன்று 30 முதல் 60 நொடி வரை பயின்றி, பின்னர் கால்களை மாற்றி பயிலவும்.

|| பலன்கள் ||

 • கால்களின் வலிமையையும் தாங்கும் திறனையும் கூட்டுகிறது.
 • பாதங்களின் இணைப்புகள், ஜவ்வுகளுக்கும் திசுக்களுக்கும் வலிமை ஊட்டுகிறது.
 • இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்துவந்தால் பாதம் முதல் முதுகெலும்பு வரையில் முழு காலுக்கும் வலிமை கூடும்.
 • காலின் வடிவத்தில் அழகு கூடும்.
 • இடுப்புப் பகுதியின் ஸ்திரத்தன்மையைக் கூட்ட உதவும்.
 • இடுப்பெலும்புகளின் வலிமை கூடும்.
 • விருக்ஷாசனம் உடலின் சமநிலையைக் கூட்டி, தடுமாற்றத்தைப் போக்குகிறது.
 • கவனக் குவிப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது.
 • தொடர்ந்து செய்துவந்தால் மனதின் தடுமாற்றங்களும் பதற்றங்களும் குறைந்து மனச் சமநிலை கிடைக்கும். படிப்படியாக நம் வாழ்விலும் சமநிலை கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

Tuesday, 29 March 2016

இந்துக்கள் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறிப் பண்புகள்இந்துக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிப் பண்புகளை இந்து தர்ம நூல்கள் இயமம் மற்றும் நியமம் என்று குறிப்பிடுகின்றன. நன்னெறி பண்புமிக்க ஒரு மனிதனை உருவாக்கவும், ஆன்மிக வளர்ச்சியின் ஆரம்பப்படியாகவும் இவை அமைந்துள்ளன. ரிக்வேதம் முதற்கொண்டு ஐம்பதிற்கும் அதிகமான இந்துதர்ம நூல்கள் இயம-நியமங்களை விளக்குகின்றன. எனவே, இந்துதர்மத்தின் மிக முக்கியமான போதனைகளில் ஒன்றாக இயம-நியமம் விளங்குகின்றது.
 1. இயமம்செய்யக்கூடாதவை (தவிர்க்க வேண்டியவைகள்)
 2. நியமம்செய்யக்கூடியவை (கடைப்பிடிக்க வேண்டியவைகள்)


இயமம்

பதஞ்சலி யோகசூத்திரம் (2:30) குறிப்பிடும் ஐந்து இயமங்கள்

 1. அஹிம்சை – கொல்லாமை/இன்னா செய்யாமை
 2. சத்தியம் – வாய்மை/பொய்யாமை
 3. அஸ்தேயம் – கள்ளாமை/திருடாமை
 4. பிரம்மச்சரியம் - அடக்கமுடைமை
 5. அபரிகிரஹம் – வெஃகாமை/பிறர்பொருளை அபகரிக்காமை

நியமம்

பதஞ்சலி யோகசூத்திரம் (2:32) குறிப்பிடும் ஐந்து நியமங்கள்

 1. ஷௌச்சம் - தூய்மை
 2. சந்தோஷம் – மனநிறைவு
 3. தபஸ் – தவம்
 4. ஸ்வாத்யாயம் – நூல்கற்றல்
 5. ஈஷ்வரபிரணிதானம் – ஈஸ்வரனிடம் சரண்புகுதல்

செய்யக் கூடாத ஐந்து

 1. அப்பாவி உயிர்களை துன்புறுத்தல்/கொல்லுதல்
 2. பொய் பேசுதல்
 3. திருடுதல்
 4. அடக்கமின்றி நடத்தல்
 5. மற்றவர் பொருளை அபகரித்தல்

செய்ய வேண்டிய ஐந்து

 1. தூய்மையைப் பேணுதல்
 2. மனதிருப்தி கொண்டிருத்தல்
 3. விரதம், தவம் மேற்கொள்தல்
 4. நல்ல நூல்களைக் கற்றல்
 5. இறைவனிடம் சரணடைதல்

திருமூலர்

திருமூலர் பத்து இயமங்களையும், பத்து நியமங்களையும் குறிப்பிடுகிறார்.

இயமங்கள் : கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, அடக்கமுடைமை, வெஃகாமை, பொறையுடைமை, உறுதியுடைமை, அருளுடைமை, நேர்மை, மிதமான உணவுமுறை. 

நியமங்கள் : தவம், நாமஜெபம், மனநிறைவு, இறைநம்பிக்கை, தானம், விரதம், நூல்கற்றல், தியாகம், சிவபூஜை, பேரொளி தரிசனம்.

Monday, 28 March 2016

ஐந்து நிலை தூய்மை

ஐந்து நிலையிலான தூய்மைதூய்மை என்பது சுத்தம் அல்லது ஷௌச்சம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இந்துதர்மத்தைப் பொறுத்தவரை தூய்மை என்பது ஐந்து நிலைகளில் அமைந்துள்ளது.

அவை:

1) சுற்றுச்சூழல்
2) உடல்
3) மனம்
4) செயல்/வினை
5) வாக்குசுற்றுச்சூழல் தூய்மை


ஒருவர் வசிக்கும் பகுதி தான் சுற்றுச்சூழல் எனப்படுகின்றது. இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவனின் சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தூய்மையான சுற்றுச்சூழல் தான் ஒருவனுக்கு மனநிம்மதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது. ஒருவன் தன்னுடைய வீடு, தெரு, வசிப்பிடம், ஊர் போன்றவற்றை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை உலகம் உயிருடையது. இந்த உலகத்தின் ஒவ்வொரு அங்கமும் உயிரோட்டம் உடையது. இயற்கையால் வாய்திறந்து பேசமுடியாவிட்டாலும் அதற்கு உயிர் உள்ளது. உயிரோட்டம் இருப்பதால் தான் மனிதர்கள் உட்பட இதர ஜீவராசிகளும் இந்த புவியில் நிலைபெற்று வாழ்கின்றனர். ஆதலால் இந்த பூமியை தூய்மையாக பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.


கோயில் வளாகத்தை சுத்தபடுத்தல்


கோயில், குளங்கள் மற்றும் இதர பொது இடங்களை சுத்தம் செய்யும் நற்பணியில் ஈடுபடுவதால் ஒருவனுக்கு நிறைய நல்வினைகள் வந்து சேர்கின்றன. கோயிலை சுத்தபடுத்துவதால் அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் தங்கள் வழிபாட்டை மேற்கொள்வார்கள். இதனால் கோயிலை சுத்தபடுத்திய செயல் அந்த பக்தர்கள் அனைவருக்கும் செய்த சேவையாக அமையும். ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பது பொன்மொழி.

ஒவ்வொரு மனிதனும் குப்பைகளை முறையான வழியில் அப்புறப்படுத்தவேண்டும். ஆற்றில் வீசுதல், தெருவில் வீசுதல், கண்ட இடங்களில் வீசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவதால் அவை முறையான வழியில் நீக்கப்படுகின்றன. இதனால் நாம் இயற்கைக்கு எந்தவொரு இம்சையும் விளைவிப்பதில்லை. இயற்கைக்கு இம்சை விளைவித்தல் இந்துதர்மம் குறிப்பிடும் மிக கொடிய தீவினைகளில் ஒன்றாகும். இயற்கைக்கு நாம் இம்சை விளைவித்தால் அதன் விளைவு மோசமாக இருக்கும். எனவே நம்முடைய சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.


உடல் தூய்மை


உடல் தூய்மை எனப்படுவது பொருள் உடலை சுத்தமாக பராமரித்தல் எனப் பொருள்படும். தினசரி தவறாமல் உடலைத் தேய்த்து குளித்தல், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்தல், போதுமான யோகாசன பயிற்சி மேற்கொள்தல் ஆகியவை உடலைத் தூய்மைப்படுத்தும் வழிகளாகும். ஆரோக்கியமான உணவு என்பது ஒருவனுக்கு உடல்நலம், வலிமை, திருப்தி மற்றும் மகிழ்ச்சியை தரக்கூடிய உணவே ஆகும். (பகவத் கீதை) யோகாசனப் பயிற்சியால் உடலிலிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் மாசுக்களும் நீங்கி புத்துணர்ச்சி அடைகிறோம்.

காய்கறிகளும் பழங்களும்

மதுப்பழக்கம், புகைப்பழக்கம், உடலை சீரழிக்கும் மற்றப் பழக்கங்கள் யாவும் தவிர்க்கப்படவேண்டியவை. எப்படியும் இறக்க தான் போகிறோம் என்ற எண்ணத்தில் உடலை முறையாக பராமரிக்காமல் இருப்பது தவறாகும். எப்படியும் இறக்க தான் போகிறோம் என்பதை விட எப்படி இறக்கப் போகிறோம் என்பது தான் முக்கியம். நோய்வாய்ப்பட்டு, துன்பப்பட்டு, மோசமான நிலையில் இறக்க யாரும் விரும்புவதில்லை. வாழ்க்கையில் சாதிக்கவேண்டியது ஏராளமானவை உள்ளன. அதையெல்லாம் நிறைவேற்ற ஆரோக்கியமான உடல் தேவையாகும். சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது; எனவே உடலுக்கு கேட்டை விளைவிக்கு தீயப் பழக்கங்களை எல்லாம் நீக்கிவிட்டு ஆரோக்கியமான மற்றும் தூய்மையான ஒரு வாழ்க்கைநெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.


மனத் தூய்மை


பொறாமை, பேராசை, கோபம், பயம், பழியுணர்ச்சி, பகைமை, வெறுப்பு போன்றவை மனத்தில் இருக்கும் அழுக்குகளாகும். இவற்றை நீக்கிவிட்டு அன்பு, கருணை, அறிவு, பக்தி, சமநோக்கு, பிறர்பொருள் மீது ஆசை கொள்ளாமை, துணிச்சல் போன்ற நற்குணங்களை மனத்தில் விதைக்க வேண்டும்.


“உடல் நீரால் தூய்மை அடைகின்றது. மனம் தியானத்தால் தூய்மை அடைகின்றது”


மனத்தை சுத்தபடுத்தும் தியானப் பயிற்சி


என தர்மநூல்கள் தெரிவிக்கின்றன. முறையான தியானத்தால் ஒருவனின் மனம் தூயநிலை அடைகின்றது. பல நாட்கள் குளிக்காமல் இருப்பதால் எத்தகைய விளைவுகள் நேரிடுமோ அதைவிட மோசமான விளைவுகள் ஒருவன் தன் மனத்தை தூய்மைப்படுத்தாதலால் நேரிடும். கைகளில் அழுக்குப் பட்டுவிட்டால் எப்படி நீரைக் கொண்டு சுத்தம் செய்கிறோமோ அவ்வாறு மனத்தில் தீய எண்ணங்கள் எழும்போதெல்லாம் “நமசிவாய”, “நாராயணாய” என சொல்லி நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும்.


“மனத்தைக் கட்டுப்படுத்தியவனுக்கு மனம் சிறந்த நண்பன், கட்டுப்படுத்த தெரியாதவனுக்கு மனம் தான் கொடிய பகைவன்”
என பகவத் கீதை கூறுகின்றது.


வினைத் தூய்மை


வினைத் தூய்மை எனப்படுவது செய்யும் செயல்களில் இருக்கவேண்டிய தூய்மையைக் குறிக்கும். மற்றவர் பொருள்களை அபகரிக்க கூடாது, அப்பாவி உயிர்களுக்கு துன்பம் விளைவிக்க கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும், கடமையிலிருந்து பின்வாங்க கூடாது போன்றவை வினைத் தூய்மை ஆகும்.

ஒருவரின் தொழில் கழிவறையைக் கழுவுவதாக இருந்தாலும் அதில் அவர் நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்பட்டால் அதுதான் தூய்மையானது எனப்படுகின்றது. அதேவேளை ஒருவர் காவல்துறை அதிகாரியாக வேலை செய்தாலும் அவர் நேர்மையில்லாமலும் கடமையை நிறைவேற்றாமலும் செயல்பட்டால் அது தூய்மையற்றதாகும். தூய்மையற்ற செயல்களை செய்வதால் ஒருவன் பின்னாளில் அதை எண்ணி வருந்தும்படியான நிலைக்கு ஆளாகுவான் என கூறப்படுகின்றது. செயல்கள் தான் ஒருவனுடைய உண்மையான சொத்து என்ற பட்சத்தில், வினைத்தூய்மை இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது.


வாக்கு தூய்மை


வாக்கு தூய்மை என்பதை தமிழில் ‘வாய்மை’ என்பர். இதுவே ‘சத்தியம்’ எனவும் சொல்லப்படுகின்றது. எது நன்மையானதோ, எது இனிமையானதோ, எது நல்லவர்களுக்கு துன்பம் தராததோ, எது உண்மையானதோ அதுதான் ‘சத்தியம்’ எனப்படுகின்றது. ஒருவன் இனிமையான சொற்களை உபயோகித்துப் பேசவேண்டும். ஒருவருடன் பேசும்போது கசப்பான வார்த்தைகளை முற்றிலும் தவிர்த்து விடவேண்டும்.

மேலும் மற்றவர்களுக்கு நன்மையைத் தரக் கூடியதை பேசவேண்டும். தன்னுடைய சுயலாபத்திற்காக யாருக்கும் எந்தவொரு நன்மையும் விளைவிக்காத ஒன்றைப் பேசுவது பயனற்ற செயலாகும். இவ்வாறு பலர் முன்னிலையில் பயனற்ற சொற்களைப் பேசுபவர் எல்லோராலும் இகழப்படுவார் என வள்ளுவர் கூறுகிறார்.


“ஒருவன் நல்ல செயல்களை செய்வதால் அவன் மட்டுமே நன்மையை அடைகின்றான்; ஆனால் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்குக் கூறுவதால் அவற்றைக் கடைப்பிடிக்கும் மற்றவர்களும் நன்மையை அடைகின்றனர்.”
என சாணக்கியர் தம் அர்த்தசாஸ்திர நூலில் கூறுகின்றார்.

நன்மைகள் செய்வோருக்கு துன்பம் விளைவிக்கும் வார்த்தைகளைப் பேசக் கூடாது. ஒருவன் நெருப்பினால் சுட்ட காயம் கூட ஆறலாம் ஆனால் சொல்லினால் சுட்ட காயம் ஆறாது என்பர்.


முடிவுரை


இந்துக்கள் சுற்றுச்சூழல், உடல், மனம், செயல், வாக்கு ஆகிய ஐந்தையும் எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால், தூயநிலை தான் ஒருவனை இறைநிலைக்கு கொண்டு செல்கின்றது.

கணவன் மனைவி உறவு

கணவன் மனைவி உறவு


திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம் மட்டுமல்ல. இரு மனம் ஒன்றாகி ஒரு மனமாக கலப்பதே திருமணம் எனப்படுகின்றது. ஓரிருநாள் சடங்கில் முடிந்து போவது திருமணம் அல்ல. வாழ்க்கை முழுவதும் ‘திரு’வாளனும் ‘திரு’மதியும் சில நெறிகளைக் கடைப்பிடித்து வாழ வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை தான், தெய்வீக நறுமணம் வீசும் திருமண வாழ்க்கையாக அமையும்.


திருமணம்

ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையின் முதல் பருவமான பிரம்மச்சரிய பருவத்தில் ஆற்றவேண்டிய கடமைகளையும் கற்கவேண்டிய பாடங்களையும் சிறப்பாக முடித்து விட்டு, இரண்டாவது பருவமான கிரகஸ்த (குடும்பவாழ்க்கை) பருவத்தில் அடியெடுத்து வைப்பதே திருமணம் ஆகும். திருமணத்தின் போது ஒவ்வொருவரின் மரபுவழியிலும் நிறைய சடங்குகள் இருந்தாலும், சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை சப்தபதி எனப்படும் சடங்கு மிக முக்கியமாகும். இந்த சடங்கில், கணவனும் மனைவியும் அக்கினி சாட்சியாக கைக்கோர்த்து ஏழு அடிகள் அல்லது ஏழு சுற்றுப்பாதைகள் வலம் வருவர். இந்த ஏழு அடிகளும் ஏழு வாக்குறுதிகளைக் குறிக்கின்றன.

அவை:

1) கணவனும் மனைவியும் எப்போதும் சுகதுக்கங்களையும் குடும்ப சுமையையும் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

2) கணவனும் மனைவியும் ஒரே மனதாக இணைந்திருக்கவேண்டும், மனைவிக்கு விருப்பமில்லாததை கணவனும், கணவனுக்கு விருப்பமில்லாததை மனைவியும் விட்டுவிடவேண்டும்.

3) கணவன் மனைவியின் குடும்பத்தினரையும், மனைவி கணவனின் குடும்பத்தினரையும் மதிக்க வேண்டும்.

4) கணவனும் மனைவியும் ஒன்றாக இருந்து தம் மக்களை வளர்த்து, குழந்தைகளுக்கு நிறைவான கல்வியை தரவேண்டும்.

5) கணவனும் மனைவியும் குடும்ப பொருளாதாரத்தை சரிசமமாக இருந்து பேணவேண்டும்.

6) மனைவியைத் தவிர மற்ற பெண்ணிடமும், கணவனைத் தவிர மற்ற ஆணிடமும் தகாத உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.

7) கணவன் தன் மனைவியை (வாக்காலும், மனத்தாலும், செயலாலும்) நோகடிக்க கூடாது, மனைவியும் தன் கணவனை (வாக்காலும், மனத்தாலும், செயலாலும்) நோகடிக்க கூடாது.

சப்தபதி - ஏழு வாக்குறுதிகள்
இந்த ஏழு வாக்குறுதிகளையும் ஒவ்வொரு கணவனும் மனைவியும் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும்.

குடும்பவாழ்க்கை

ஒரு குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் உடல்ரீதியில் மட்டுமல்லாமல் மனத்தாலும், செயலாலும், வாக்காலும் ஒன்றாகியவர்கள் ஆவர். கணவன் மனைவியைத் துன்புறுத்துவதும், மனைவி கணவனை துன்புறுத்துவதும் உண்மையில் தம்மை தாமே துன்புறுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும். ஒரு குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சில முக்கிய உறவுகளைப் பிரதிபலிக்கின்றனர்.

உதாரணமாக:

1) தோழன் தோழி = கணவனும் மனைவியும் எப்போதும் எந்தவொரு ஒளிவும் மறைவும் இல்லாமல், தங்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழ வேண்டும்.

2) மறுமகன் மறுமகள் = மனைவி என்பவள் தன் கணவனின் பெற்றோருக்கு இன்னொரு மகளாகவும், கணவன் என்பவன் தன் மனைவியின் பெற்றோருக்கு இன்னொரு மகனாகவும் இருந்து அவர்களை நல்ல முறையில் அன்புடனும் அரவணைப்புடனும் பாதுகாக்க வேண்டும்.

3) குரு சிஷ்ய = குடும்பவாழ்க்கையை துவங்குவதற்கு முன்னரே, பிரம்மச்சரிய பருவத்தில் குடும்பவாழ்க்கையைப் பற்றிய போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். எனவே, கணவனும் மனைவியும் தம் துணையார் வழிதவறி போனால் அவருக்கு நல்லறிவைப் புகட்டி மீண்டும் நல்ல பாதைக்குத் திருப்பி கொண்டு வர வேண்டும். ’கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்று வாழாமல், கணவன் தப்பு செய்தால் மனைவி அவனைக் கண்டிக்க வேண்டும்.

4) தலைவன் தலைவி = ஒரு குடும்பத்தைப் பொருளாதார அளவில் உயர்த்த கணவனும் மனைவியும் சேர்ந்தே பாடுபட வேண்டும். எப்படி ஒரு நாட்டை அரசனும் அரசியும் நல்ல முறையில் வழிநடத்துவார்களோ, அதுபோல ஒரு குடும்பத்தை கணவனும் மனைவியும் வழிநடத்த வேண்டும். நம்முடைய பாரம்பரியத்தில், ஒரு குடும்பம் ஒரு நாட்டின் பிரதிபலிப்பாக திகழ்கின்றது. கணவனும் மனைவியும் அந்த குடும்பத்தின் அரசனாகவும், அரசியாகவும் அமைந்துள்ளனர். அவர்களின் பிள்ளைகளே அக்குடும்பத்தின் ‘மக்கள்’ ஆவர். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

5) தாய் சேய் = குடும்பவாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அரவணிப்புடனும் அன்புடனும் வாழவேண்டும். கணவனுக்கு முடியாத நிலையில் மனைவி அவனுக்கு பணிவிடை செய்தலும், மனைவிக்கு முடியாத நிலையில் கணவன் அவளுக்குப் பணிவிடை செய்தலும் வேண்டும். இதனாலே திருமண சடங்கின் போது, புரோகிதர் சொல்லித்தர கணவனும் மனைவியும் சேர்ந்து மனதார உச்சரிக்கும் மந்திரத்தில் “சுபஹே த்வம் ஜீவ சரத சதம்” என காலம்வரை உடனிருந்து (தன் துணையை) கவனித்துக் கொள்வேன் என வாக்குறுதி எடுத்துக் கொள்கின்றனர்.

6) சகோதரன் சகோதரி = சண்டைகளும் மனசஞ்சலங்களும் இல்லா குடும்பவாழ்க்கை கிடையாது. எவ்வளவு சண்டைகள் போட்டாலும், எப்போதும் தன் துணையை விட்டுக் கொடுக்க கூடாது. கணவன் மனைவி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் மனமிறங்கி வந்து சமாதானம் பேசவேண்டும். இருவரும் ஒத்த மனத்துடன் கலந்துரையாடி பிரச்சனையைக் கலைந்து இனிதான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

7) தாய் தந்தை = குடும்பவாழ்க்கையின் மிக முக்கிய நிலை தாய் தந்தை உறவு ஆகும். கணவனும் மனைவியும் குழந்தையை ஈன்றெடுத்தப் பின்னர் (அல்லது தத்தெடுத்தப் பின்னர்) அவர்கள் தாய் தந்தை என்ற நிலையை அடைகின்றனர். அந்த குழந்தைக்கு தேவையானவற்றையும் முழுமையான அறிவையும் அளிக்கவேண்டிய கடமையில் அவர்கள் ஈடுபடுவர். தம் மக்களைச் சான்றோர் மத்தியில் மதிக்க தக்கவர்களாக ஆக்கவேண்டியது பெற்றோர்களின் மிக முக்கிய கடமையாகும்.

8) மாமனார் மாமியார் = ஒரு தம்பதியரின் மக்களின் துணை அவர்களுக்கு மறுமக்கள் ஆகின்றனர். இதனாலே நம் பாரம்பரியத்தில், மகளின் கணவன் மறுமகன் என்றும் மகனின் மனைவி மறுமகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒருவர் தன் மகன் அல்லது மகளிடம் எவ்வளவு அன்பும் அரவணைப்பும் செலுத்துவாரோ அதேபோல தன் மறுமக்களிடமும் செலுத்த வேண்டும்.

இதுபோல குடும்பவாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய நெறிகள் உள்ளன. இவை ஒரு சிறப்பான குடும்பவாழ்க்கையைப் பேண ஒரு வழிகாட்டல்களாக அமைக்கப்பட்டவை ஆகும். புராண கதைகளிலும் நம் முன்னோர்கள், தெய்வங்களை மையமாகக் கொண்டு சில நன்னெறிகளை உரைத்திருப்பார்கள். ஒரு குடும்பத்தின் பதி-தர்மத்தை கணவனும், பதினி-தர்மத்தை மனைவியும் கடைப்பிடிக்க வேண்டும். பிறனில் நோக்காமல் தன் துணையை உயிராக நேசிப்பவரே கற்புடையர் எனப்படுவர்.

இந்துதர்மத்தில் தூய்மை

இந்து தர்மம் : தூய்மை


இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய 10 ஒழுக்கநெறிகளை பதஞ்சலி யோகசூத்திரம் உட்பட இதர சனாதன தர்ம நூல்கள் பகர்கின்றன. அந்த பத்து ஒழுக்கநெறிகளில் ஒன்றுதான் “தூய்மை”. தூய்மை என்பது சுத்தம் அல்லது ஷௌச்சம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இந்துதர்மத்தைப் பொறுத்தவரை தூய்மை என்பது ஐந்து நிலைகளில் அமைந்துள்ளது.

அவை:சுற்றுச்சூழல்
1) வசிப்பிடத்தை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்
2) கண்ட இடங்களில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும்
3) கோயில்களை மாசுபடுத்தாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும்

உடல்
1) தினந்தோறும் தவறாமல் குளிக்க வேண்டும்
2) ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்
3) புகை/மது போன்ற உடலுக்குப் பாதிப்பை தரும் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்
4) யோகாசனம் போன்ற உடலுக்கு வலிமை தரும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்

மனம்
1) மன அழுக்குகள் என சொல்லப்படும் பொறாமை, பேராசை, கோபம், பயம், வெறுப்பு, பழியுணர்வு, பகைமை ஆகிய ஏழு குணங்களையும் நீக்க வேண்டும்
2) அன்பு, கருணை, பொறுமை, சாந்தம், சமநிலை, திருப்தி, திடம் ஆகிய ஏழு நற்பண்புகளை மனதில் விதைத்திட வேண்டும்

செயல்
1) மற்றவர்களுக்கு சொந்தமான பொருள்களை அவர்களிடமிருந்து அபகரிக்க கூடாது
2) அப்பாவி உயிர்களுக்கு எந்தவகையிலும் துன்பம் விளைவிக்க கூடாது
3) எல்லா செயல்களிலும் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்
4) கடமையை செய்வதில் கருத்தாக இருக்க வேண்டும்

வாக்கு
1) நன்மை, இனிமை, உண்மை – ஆகிய மூன்றையும் மட்டுமே பேச வேண்டும்
2) தீமை, கடுமை, பொய்மை – ஆகிய மூன்றையும் பேசக் கூடாது


அஷ்டாங்க யோகத்தின் நியமங்களில் ஒன்றாக தூய்மை விளங்குகின்றது. இந்து தர்மநூல்களிலும் தூய்மையைப் பற்றிய ஏராளமான குறிப்புகள் உள்ளன. பகவத் கீதையின் படி, தூய்மை எனப்படுவது ஒருவன் உடலால், மனதால், வாக்கால் மேற்கொள்ள வேண்டிய தவம் (ஆன்மீகப் பயிற்சி) எனக் கூறப்படுகின்றது.


தூய்மை ஏன் அவசியம்?

உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் தரமான வாழ்க்கை ஆகிய மூன்றிற்கும் தூய்மை என்பது அவசியமான ஒன்றாகும். மகாபாரதத்தில் பல இடங்களில் தூய்மையின் அவசியத்தைப் பற்றி விளக்கப்படுகின்றது. அஷ்வமேதிக பர்வத்தின் 14:38:5-8-இல் இடம்பெறும் கூற்று தூய்மை என்றால் என்ன என்பதை மிக துல்லியமாக விளக்குகின்றது.

“உண்மையில் தூய்மையானவன் என்பவன் யாரென்றால் - பேராசைகுணத்தில் இருந்து விடுபட்டவன், இறுமாப்பில் இருந்து விடுபட்டவன், எதிலும் குற்றத்தையே காணும் குணத்தில் இருந்து விடுபட்டவன், ஏற்றத்தாழ்வுகளை விடுத்து எல்லாரையும் சமநோக்குடன் அரவணிப்பவன், அது வேண்டும் இது வேண்டும் என்ற தீராத ஆசைகளில் இருந்து விடுபட்டவன் - ஆவான். அவனிடம் தன்னம்பிக்கை, பரிசுத்தம், மனவலிமை, பொறுமை, திருப்தி, அன்புடைமை, மயக்கமின்மை, எல்லா உயிர்களிடமும் அருளுடைமை போன்ற நற்குணங்கள் நிறைந்திருக்கும். அவன் அமைதியானவன், அவன் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுவதில்லை. எது சரி எது தவறு, எது செய்யத்தக்கது எது செய்யத்தகாதது என்பதில் தெளிவான புத்தியையுடைய அவனின் செயல், வாக்கு மற்றும் மனம் ஆகிய மூன்றும் மிக தூய்மையான நிலையை அடைந்து தூயவடிவான பரம்பொருளுடன் நிலைபெற்று விடுகின்றது.” 
(மகாபாரதம் 14:38:5-8)

விபீஷணரைக் ”கட்டிய” ஸ்ரீ ராமர்இராவணனின் சகோதரர் தான் விபீஷணர். ஒரு மனிதன் எப்போதும் நன்மைக்கே துணைபோக வேண்டும் என்ற நன்னெறியை விபீஷணர் அவரின் இராமாயண கதாபாத்திரத்தின் மூலமாகப் புகட்டுகிறார். விபீஷணர் தன் தமயன் இராவணனுக்குப் பலமுறை தர்மத்தை எடுத்துக் கூறி நல்வழிக்கு கொண்டுவர முயற்சித்தார். எனினும் இராவணன் மாயையின் பிடியில் சிக்கிக் கொண்டு பல பிழைகளைத் தொடர்ந்து செய்துவந்தான். ஈசனின் எச்சரிக்கையையும் மீறி தனக்கு கிடைத்த வரத்தை தவறான வழியில் உபயோகித்தான்.

”சீதாதேவியை மரியாதையுடன் அனுப்பி வைத்துவிடுங்கள். பிறர் மனைவியை அபகரித்துக் கொண்டு வருவது மிக கொடிய பாவமாகும்” என இராவணனிடம் விபீஷணர் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.

இராவணனோ, “என்னை விட வயதில் இளையவன் எனக்கு அறிவுரை கூறுவதா?” என்று ஆணவத்துடன் தன் தம்பியாரை அவமதித்து அவையில் பலர் மத்தியில் கேலிசெய்தான்.

தன் தமயன் செய்வது முற்றிலும் குற்றம் என தெரிந்து அவனை திருத்த முயன்றும் அது வெற்றி பெறவில்லை என்பதால் என்ன நடந்தாலும் சரி நான் எப்போதும் தர்மத்தின் பக்கம் தான் நிற்பேன் என்று விபீஷணர் ஸ்ரீராமரை நாடிச் சென்றார். விபீஷணர் கண்டிப்பாக இப்படியொரு முடிவை எடுப்பார் என முன்னரே அறிந்துகொண்ட ஸ்ரீராமர் சுக்ரீவனிடம் “சுக்ரீவா, விபீஷணனைப் பற்றி நீர் என்ன கருதுகிறீர்? அவன் என்னை நாடி வருகின்றான். நாம் அவனை ஏற்றுக் கொள்ளலாமா?” எனக் கேட்டார். ”விபீஷணரின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அவன் இராவணனின் உளவாளியைப் போல என் கண்களுக்குத் தோன்றுகிறான். அவன் உங்களை நாடி வந்தால் அவனைக் கட்டி விடுங்கள்” என சுக்ரீவன் சொன்னார். ஸ்ரீராமரும் புன்னகைத்தபடியே “அப்படியே ஆகட்டும்” என்றார்.

விபீஷணர் ஸ்ரீராமரை நாடி வந்து வணங்கினார். ஸ்ரீராமர் உடனே விபீஷணரை நட்போடு கட்டியணைத்துக் கொண்டார். இதைக் கண்டு சுக்ரீவன் வியப்படைந்து போனார். “ராமா? நீங்கள் என்னிடம் ஆலோசனை கேட்டபோது நான் என்ன சொன்னேன். ஆனால் நீங்கள் அதற்கு மாறான ஒன்றை செய்கிறீர்களே?” என சுக்ரீவன் கேட்டார். உடனே ஸ்ரீராமர் தன்னுடைய பணிவான குரலால் “என்ன சொன்னீர்?” எனக் கேட்டார். “விபீஷணரைக் கட்ட சொன்னேன்” என்றார் சுக்ரீவர். “நானும் அப்படியே கட்டினேன் அல்லவா?” என்று சொல்லி சுக்ரீவரை வாயடைக்க செய்தார்.

இருந்தாலும் சுக்ரீவனுக்கு திருப்தியில்லை. ஸ்ரீராமர் சுக்ரீவனிடம் “சுக்ரீவா, விபீஷணன் வாழ்ந்த சூழலை வைத்து நீ அவனை எடைபோட்டு விட்டாய். அதனால் அவனை கயிற்றால் கட்டிப் போட சொன்னாய். ஆனால் நான் விபீஷணனின் குணநலன்களை ஆராய்ந்து அவன் தர்மத்துக்காக தன் தமயனைப் பகைத்துக் கொண்டு வருவதை புரிந்துகொண்டேன். இனி உன்னைப் போல் அவனும் எனக்கு சகோதரனே. அதனால் தான் அவனை என் கரங்களால் கட்டினேன்” என்று கூறினார். சுக்ரீவனும் ஸ்ரீராமரை கைக்கூப்பி வணங்கியபடி விபீஷணரை ஏற்றுக் கொண்டார்.

நன்னெறி: எந்தவொரு காலத்திலும் நாம் யாரையும் அவர் வாழும் சூழலை மட்டுமே வைத்து எடைபோட்டு விடக் கூடாது. யாராக இருந்தாலும் அவரின் உண்மையான குணநலன்களை ஆராய்ந்து அவரைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். இதுவே இந்த நிகழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நன்னெறியாகும்.

Sunday, 27 March 2016

கர்மா

கர்மா

கர்மா என்பது மிக எளிதான, அதேவேளையில் மிக நுட்பமான வகையில் நிலைபெற்றிருக்கும் பிரபஞ்ச நியதி ஆகும். சனாதன தர்மத்தின் அடிப்படை போதனைகளுள் ஒன்றுதான் 'கர்மநியதி'.

"நல்லதை செய்தால், நல்லதே நடக்கும்.
கெட்டதை செய்தால், கெட்டதே நடக்கும்"

இது கர்மாவைப் பற்றிய எளிதான விளக்கம். நம்மில் அனைவரும் இந்த விளக்கத்தை நன்கு அறிந்திருப்போம். ஆனால், கர்மாவைப் பற்றிய நுட்பமான அறிவியல் என்ன? இதை ஆங்கிலத்தில் 'The Science of Action' (செயல் அறிவியல்) என்பார்கள். இப்போது அதை நாம் அறிவோம்.


கர்மா என்றால் செயல் அல்லது வினை எனப் பொருள்படும். 'எண்ணித் துணிக கருமம்' என்றார் ஐயன் வள்ளுவர். ஒரு செயலை செய்வதற்கு முன்னர், அச்செயலின் நோக்கத்தை நன்கு ஆராய்ந்து உணரவேண்டும். ஒரு செயலை விட அதன் நோக்கமே மிக முக்கியமாகும்.

காரணமும் விளைவும்

காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டு விதிகளையும் அடிப்படையாகக் கொண்டு கர்மநியதி இயங்குகின்றது.

காரணம் (ஆங். cause) என்றால் ஒரு செயலின் பின்னால் இருக்கும் காரணம் அல்லது நோக்கம்

விளைவு (ஆங். effect) என்றால் ஒரு செயலை ஆற்றிய பின்னர் அச்செயலைப் பொறுத்து வருங்காலத்தில் ஏற்படும் விளைவுகள்

செயலாற்ற ஆறு விதிமுறைகள்

ஒரு செயலை செய்வதற்கு முன்னர், 'இதை நான் ஏன் செய்கிறேன்?' என்று தன்னிடம் கேட்டுக் கொள்வதன் மூலமாக ஒரு செயலின் காரணத்தை நாம் அறியலாம். அந்த காரணம் ஆறு விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவை:

அ) தர்மமுடைய செயல்

ஆ) பிறர் பொருளை அபகரிக்காத செயல்

இ) சுயநலமற்ற செயல்

ஈ) தனக்கும் மற்ற அப்பாவி உயிர்களுக்கும் தீமை விளைவிக்காத செயல்

உ) விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட செயல்

ஊ) பிறருக்கு நன்மை பயக்கும் செயல்

*விதிமுறைகள் என்பவை ஒரு நாட்டின் சட்டத் திட்டங்களைக் குறிக்கும்*

இவ்வாறு ஆறு விதிமுறைகளுக்கும் உட்பட்ட செயலை காலம் தாழ்த்தாமல் மன உறுதியுடன் செய்ய வேண்டும்.

உதாரணமாக, நம் தேசத்தைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் தீவிரவாதிகளைக் கொல்கிறார்கள். கொல்வது தீவினை என்ற பட்சத்தில் அவர்களை தீவினை சூழ்வதில்லை. 'தீயவரை அழிப்பதே வீரனுக்கு அறம்' ஆகும். நம் நாட்டு மக்களைக் காக்க வேண்டிய நன்நோக்கத்தில், சுயநலமின்றி, தியாக மனப்பான்மையுடன் நம் இராணுவ வீரர்கள் செயல்படுகின்றனர். நாட்டைக் காப்பதும் கொடியவர்களை அழிப்பதும் அவர்களின் கடமையாகும். கடமையை செய்வதால் அவர்கள் கர்ம வீரர்களாகின்றனர்.

மூன்று வகை கர்மா

ஒரு செயலின் விளைவுகள் பெரும்பாலும் உடனுக்குடனே விளைவதில்லை. பல பிறவிகளுக்கு பின் கூட விளையலாம். ஒருவன் பல பிறவிகளில் செய்த செயல்களின் மொத்த விளைவுகள் 'சஞ்சித கர்மா' எனப்படுகின்றன. இப்பிறவியில் புதிதாக சேர்க்கும் விளைவுகள் 'ஆகாமி கர்மா' எனப்படுகின்றன. ஒருவன் தற்போதைய பிறவியில் அனுபவிக்கும் விளைவுகள் 'பிராரப்த கர்மா' எனப்படுகின்றன.

ஒரு பழமரத்தின் விதையை விதைத்த உடனே கனி கிடைத்துவிடாது. விதை முளைத்து செடியாகி, செடி மரமாகி, மரம் பூத்து அதன்பின்னரே கனி வரும். அதுபோல ஒரு செயலை செய்தவுடன் அதற்கான விளைவு, காலம் தாழ்த்தினாலும் கண்டிப்பாக விளையும். ஒருவன் தன் வாழ்நாளில் அனுபவிக்கும் இன்பதுன்பங்களுக்கு பெரும்பாலும் அவனின் முந்தைய கருமங்களே முக்கிய காரணமாகும்.

செயல் சுதந்திரம்

தாவரங்கள், மிருகங்கள் போன்ற மற்ற உயிரினங்களுக்கு செயல் சுதந்திம் கிடையாது. அவை தன்னுடைய மரபணுவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் 'விதிக்கப்பட்ட செயல்களை' ஆற்றிவிட்டு உடலிலிருந்து விடைபெறும். இதனால் மற்ற உயிரினங்களை கர்மநியதி சீண்டுவதில்லை. ஆனால், மனிதர்களுக்கு செயல் சுதந்திரம் உள்ளது. மனிதனுக்கு தன் விருப்பப்படி செயல்பட சுதந்திரம் இருக்கின்றது. அளவற்ற அறிவுத்திறன் உடைய மனிதன் பலவிதமான செயல்களை செய்கிறான். மனிதன் தன் அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி ஆக்கமுடைய செயல்களை ஆற்றவேண்டுமே தவிர அழிவை ஏற்படுத்தும் செயல்களை அல்ல. மனிதனுக்கு செயல் சுதந்திரம் இருந்தாலும் செயலின் விளைவுகளை மாற்றும் வலிமை கிடையாது. இதை தான் 'விதியை மாற்ற முடியாது' என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயலின் விளைவுகளை அனுபவித்து, அதனால் பக்குவநிலை அடையவே மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பிக்கப்படுகின்றான். மனிதனுக்கு 'விதி' என சொல்லப்படும் கர்ம விளைவுகளை மாற்றிட ஆற்றல் இல்லை; ஆனால் மனிதன் ஆன்மிக ஈடேற்றம் அடைந்து ஆன்மநிலை எய்துவிட்டால் கர்ம விளைவுகளை தன் பக்குவநிலையின் சக்தியால் 'சாம்பலாக்கிவிடும்' வல்லமையை அடைவான்.

பக்தி, யோகம், தியானம், ஞானம் - ஆகிய நான்கு வழிகளைப் பின்பற்றுவதால் ஒருவன் கர்மவிளைவுகளிலிருந்து மீளலாம். எப்போதும் தவறாமல் இந்த நான்கையும் பயிற்சிப்பதே கர்மவிளைவுகளிலிருந்து மீள்வதற்கான வழியாகும்.

"ஞானம் எனும் தீயில் கர்மவிளைவுகள் எல்லாம் சாம்பலாகிவிடும்"
(பகவத் கீதை)

ஐக்கிய அமெரிக்காவில் 450 கோயில்கள்ஐக்கிய அமெரிக்காவில் 450-க்கும் அதிகமான இந்து ஆலயங்கள் உள்ளன. இவற்றுள் 135-க்கும் அதிகமான இந்து ஆலயங்கள் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளன.

ஐக்கிய அமெரிக்காவில் 23 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர் என 2014-ஆம் ஆண்டு மக்கள்தொகை அறிக்கை தெரிவிக்கின்றது. இவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி போன்ற மொழிகளைப் பேசுபவர்கள். அமெரிக்க இந்துக்களில் இரண்டில் ஒருவர் உயர்நிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள். அமெரிக்காவின் மற்ற மதத்தினரை விட இந்துக்களே அதிகம படித்தவர்கள் மற்றும் அதிக வருமானம் பெறுபவர்கள் ஆவர்.

சுவாமி விவேகானந்தரின் விஜயத்தால் 1893-ஆம் ஆண்டு இந்துதர்மம் அமெரிக்காவில் ஒளியேற்றியது. அதன்பிறகு நிறைய வேதாந்த சமூகங்கள் உருவாகின. 1906-ஆம் ஆண்டு துவங்கி நிறைய வேதாந்த சமூக கூடங்கள் எழுப்பப்பட்டன. அதன்பிறகு 1957-ஆம் ஆண்டு கலிபோர்னியாவில், சிவமுருகன் ஆலயம் எழுப்பப்பட்டது. 1977-ஆம் ஆண்டு நியூயார்க்கில், மகா வல்லப கணபதி ஆலயம் எழுப்பப்பட்டது. 1981-ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் சிவவிஷ்ணு ஆலயம் எழுப்பப்பட்டது. மேலும் நிறைய இடங்களில் சுவாமிநாராயணர் ஆலயமும் அமைந்துள்ளன. டெக்ஸாஸில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜேஸ்வரி ராதாராணி ஆலயமும் மிகவும் புகழ்ப்பெற்ற ஓர் ஆலயமாகும்.

மிச்சிகன் நகரில் அமைந்திருக்கும் பராசக்தி ஆலயமும் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த ஆலயம் டாக்டர். கிருஷ்ண குமார் அவர்களால் எழுப்பப்பட்டதாகும். அவர் ஆழ்ந்த தியானத்தில் வீற்றிருந்த போது, ஆதிசக்தியின் தரிசனத்தைப் பெற்றார். அதன்பின்னரே இந்த கோயிலை எழுப்பினார். மேலும் அமெரிக்காவின் இண்டியானாவில் அமைந்திருக்கும் பாரதியா ஆலயமும் தனித்த சிறப்புமிக்கதாக விளங்குகின்றது.