Friday, 25 March 2016

ஸ்ரீ ராமர் கற்றுத்தரும் பாடம்

ஸ்ரீ இராமரும் சபரி அம்மையாரும்

ஸ்ரீ ராமரின் புகழ் போற்றப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றுள் இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக உள்ளது. நம்முடைய சமுதாயத்தில் தேவையற்ற ஏராளமான பிரிவினைகள் உள்ளது. இதனால் நமக்கு எந்தவொரு பலமும் இல்லை, ஆயினும் இவை நமக்கு பலவீனத்தையே தருகின்றன. இந்த பிரிவினைகளால் தான் நாம் 1000 ஆண்டுகள் அடிமையாக ஆக்கப்பட்டோம். ஆனால், அயோத்தி சக்கரவர்த்தி ஸ்ரீராமர் நமக்கு சபரி என்னும் மூதாட்டியின் மூலமாக ஒரு நல்லப் பாடத்தைக் கற்றுத் தருகின்றார்.

இராமாயண இதிகாச கதை

சபரி அம்மையார் ஒரு வேடனின் மகளாவார். அம்மையாரின் இளம் வயதில், திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது அவரின் தந்தை ஆயிரக்கணக்கான ஆடுகளை விருந்துக்காக கொண்டு வந்திருந்தார். அவை கொல்லப்படுவதை எண்ணி அம்மையார் மிகவும் மனம் நொந்து போனார். உலக வாழ்க்கையின் மீது ஈடுபாடின்றி அவர் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். எனவே, அம்மையார் தமக்கு திருமண வாழ்வு வேண்டாம் என்று எண்ணி வனபிரஸ்தம் (தவமிருக்கும் வாழ்க்கை) மேற்கொண்டார்.

வனபிரஸ்தம் பூண்ட சபரி அம்மையார், ஆன்மீக வாழ்வுக்காக தன்னை அர்ப்பணம் செய்ய முடிவு எடுத்தார். மதங்கர் என்னும் முனிவர், அம்மையாரை தன் சிஷ்யையாக ஏற்றுக் கொண்டு அவருக்கு ‘பிரம்ம ஞானம்’ கற்றுத் தந்தார். குரு-பரம்பரை மரபு படி, மதங்க முனிவர் சபரி அம்மையாரை தன் மகளாக ஏற்றுக் கொண்டார். எனினும், அங்கு வாழ்ந்த ஒருசில மக்கள் மதங்க முனிவரின் செயலை ‘ஆச்சாரமற்ற’ செயல் என்று கருதி அவரைப் பழித்தனர். அவர் ஒரு வேடனின் மகளை தன் சீடராக ஏற்றுக் கொண்ட செயலைக் கண்டித்தனர். எனினும், முழுமையான இறைஞானம் பெற்ற மதங்க முனிவர் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. எனினும் இதை எண்ணி சபரி அம்மையார் மிகவும் வருத்தப்பட்டார்.

“ஐயனே, என் குற்றம் தான் யாதோ? ஒரு வேடரின் மகளாகப் பிறந்ததுவோ? என்னால் உங்களுக்கு கலங்கம் வருவதை எண்ணி என் மனம் வாடுகின்றது” என்று அம்மையார் மதங்க முனிவரிடம் கூறினார்.

“கலங்காதே மகளே. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எல்லா உயிர்களும் சமம் தான் என்பதையும் பிறப்பால் யாவரும் தாழ்ந்தவர் இல்லை என்பதையும் இவர்கள் உணராதவரை இப்படி தான் பேசிக் கொண்டு தம்மையும் தம்மை சார்ந்தவரையும் துன்பத்தில் ஆழ்த்துவார்கள். இவர்களைப் பற்றி சிந்திப்பதை விடுத்து இறைவனைப் பற்றி சிந்திப்பாயாக.” என மதங்க முனிவர் சபரி அம்மையாருக்கு உபதேசம் செய்தார். 


காலங்கள் கடந்தன. சபரி அம்மையும் அந்த ஆசிரமத்தில் மதங்க முனிவரின் மகளாகவும் சிஷ்யையாகவும் இருந்து பல ஆன்மீக அறிவுகளைக் கற்று தேர்ந்தார். முனிவரின் மகளாக இருந்து அவரின் பசுக்களைப் பராமரித்தல், உணவு தயாரித்தல், பூஜை செய்தல் போன்ற கடமைகளையும் செய்து வந்தார்.

ஒருநாள் மதங்க முனிவர், சபரியிடம் வந்து “மகளே, இறைவனிடம் செல்லும் காலம் எனக்கு நெருங்கிவிட்டது. இதுவரை என் சிஷ்யையாக உனக்கு ஆன்மீக அறிவை தந்த நான் என் மகளாக உனக்கு ஒன்றுமே கொடுத்ததில்லை...என்ன வேண்டும் கேள்?” என்றார்.
சபரி அம்மையும், “தந்தையே, இறைவனைக் காண எனக்கும் ஆரவமுண்டு, எனவே என்னையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள்...” என்று கேட்டார்.
ஆனால், மதங்க முனிவர் “இல்லை மகளே, நீ வாழவேண்டும்... யாருக்கும் கிட்டாத பெரும்பேறு உனக்கு கிட்டும்...உன்னுடைய தூய்மையான பண்புக்கும் பக்திக்கும் இறைவன் உன்னை கான வருவார்.. அதுவரை நீ காத்திருக்கவேண்டும்” என்று கூறி விடைபெற்றார்.
சபரி அம்மையார் சுவைத்து தந்த கனியை உண்ட ஸ்ரீ ராமர்
அந்த நாள்முதல் சபரி அம்மையும் இறைவனின் வருகைக்காக சளிக்காமல் காத்து கிடந்தார். நாள்தோறும் வைகறையில் துயில் எழுந்து நீராடுவார். இறைவன் இன்று கண்டிப்பாக வருவார் என்ற உறுதியான நம்பிக்கையுடன், தூய்மையான அன்போடும் பக்தியோடும் இறைவனுக்காக மலர்களும் பழங்களும் பறித்து வருவார். காலங்களும் வேகமாக கடந்தன. சபரி அம்மையார் முதுமை நிலையை அடைந்தார். அவரின் உடல் வலிமை குன்றியது. கண்பார்வையும் மங்கியது. ஆயினும் அம்மையாரின் இறைநம்பிக்கை ஒருபோதும் குறையவே இல்லை.

ஒருநாள் சபரி அம்மையார் ஆற்றில் நீர் எடுக்க சென்றார். ஆற்றங்கரையின் பாறை மீது ஒரு மூடன் அமர்ந்து கொண்டிருந்தான். அந்த மூடன் வேத மந்திரங்களைப் பிழைப் பிழையாக ஓதுவதைக் கேட்ட சபரி அம்மையார் புன்னகைத்தபடி குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டிருந்தார். தன்னுடைய வேத உச்சாடனத்தில் இருக்கும் குறையை அறிந்த மூதாட்டி நகைப்பதைக் கண்ட அந்த மூடன் சிறிதளவும் கருணையின்றி சபரி அம்மையாரின் மீது ஒரு கல்லைக் கொண்டு எறிந்தான். சபரி அம்மையாரின் மீது கல் பட்டவுடன் ஒரு சொட்டு இரத்தம் ஆற்றில் விழுந்தது. உடனே, ஆறு முழுவதும் இரத்தம் ஆகிவிட்டது. இரத்த ஆற்றைக் கண்டு அந்த மூடன் திகைத்துப் போனான். சபரி அம்மையார் வேதனையோடு தன் ஆசிரமத்திற்கு திரும்பி விட்டார்.

ஆற்று நீர் இரத்தமாக மாறிவிட்டதால் யாருக்கும் குடிநீர் இல்லாமல் போய்விட்டது. ஊர்மக்களும் பல யாகங்கள் செய்தனர், வேத மந்திரங்கள் ஓதினர். எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. இரத்த ஆறு அப்படியே தான் இருந்தது. முனிவர் ஒருவர் கங்கை நீரைக் கொண்டு வந்து ஆற்றில் கலந்தார், ஒரு மாற்றமும் இல்லை. யமுனை நீரைக் கொண்டு வந்து கலந்தார், அப்போதும் ஒரு மாற்றமும் இல்லை. இவ்வாறு பல முயற்சிகள் செய்து மன்றாடியும் ஆற்று நீர் தூய்மையாக மாறவில்லை. சபரி அம்மையாரைக் கல்லால் தாக்கிய மூடனும் தாகத்தில் வாடி வதங்கி போனான்.

அப்போது அவ்வழியே ஸ்ரீ இராமர் வந்து கொண்டிருந்தார். அவரின் வருகையை அறிந்த அந்த மூடன், அவரிடம் சென்று மன்றாடி எப்படியாவது ஆற்று நீரை தூய்மைப்படுத்த வழிக் கேட்டார்.

ஸ்ரீ இராமரும் புன்னகைத்தபடியே. “கண்டிப்பாக. ஆற்றுநீரை தூய்மைப்படுத்த யான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
“இராமபிரானே, உங்களின் திருவடிகள் பட்டாலே போதும். நீர் தூய்மையாகி விடும்.” என்று அம்மூடன் மன்றாடினான்.

ஒரு மாற்றமும் நிகழவில்லை. இவ்வாறு அந்த மூடனின் வேண்டுகோளுக்கு இணங்க, சற்றும் முகம் சுளிக்காமல் பல முறை ஸ்ரீ இராமர் தம் திருவடிகளை நீருக்குள் வைத்தார். மீண்டும் ஒரு மாற்றமும் நிகழவில்லை. அனைவரும் குழப்பத்தோடு நின்றனர்.

அனைத்தையும் அறிந்த ஸ்ரீ இராமர், “இந்த ஆற்று நீர் எப்படி ரத்தமானது?” என பணிவுடன் கேட்டார்.
உடனே அந்த மூடன் “வேடர் குலத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி இங்கே வந்து நீர் எடுத்துக் கொண்டிருந்தாள். அவளை நான் கல்லால் தாக்கினேன். அவளின் ரத்தம் பட்டு இந்த ஆறு ரத்தமாகியது.” என நிக்ழந்த எல்லாவற்றையும் பெருமையாக விளக்கினான்.
இதைக் கேட்ட ஸ்ரீ இராமபிரான், தன் கைகளை இதயத்தின் மீது வைத்தபடியே “அப்படி என்றால், அந்த தாயின் ஒரு சொட்டு இரத்தத்தால் தான் இந்த ஆறு மொத்தமும் ரத்தமாக மாறியது என்று நினைத்தீரா?” என்று மூடனிடம் வினவுகிறார்.

மூடன் சற்றுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தான்.

ராமபிரான் தொடர்ந்தார் “வரும் வழியில் என் இருதயத்தின் மீது யாரோ கல்லெறிந்ததை உணர்ந்தேன். அதில் ஏற்பட்ட ரத்தம் தான் இந்த ஆற்றையே ரத்தமாக ஆக்கியது” என்றார்.

இதைக் கேட்ட அந்த மூடன் மனம் உடைந்து போனான். தன்னுடைய அறியாமையை எண்ணி மனம்கலங்கி ஸ்ரீ இராமரிடம் மன்றாடினார்.

“என் தப்பை எல்லாம் உணர்ந்துவிட்டேன் ராமா. இழிகுலத்தார் என்று எண்ணி அந்த தாயின் மீது எறிந்த சிறு கல் உன் இருதயத்தையே நோகடித்து விட்டதே. என்னுடைய இந்த பாவத்தை எப்படி போக்குவேன்” என்று கதறினான்.
“யான் இங்கு வந்ததே அந்த தாயை சந்திக்கத் தான். அந்த அம்மையாரை யான் காணவேண்டும்.” என்று ஸ்ரீ இராமர் அன்போடு கேட்டார்.

 ஸ்ரீ இராமரின் பெயரைக் கேட்ட சபரி அம்மையார் தன் ஆசிரமத்தில் இருந்து ஓடி வந்தார். ஆற்று கரையில் நின்று கொண்டிருந்த இராமரைக் காண ஓடி வந்த சபரி அம்மையாரின் காலடி மணல் பட்டு ஆற்று நீர் மீண்டும் தூய்மையானது. இதைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.

“கண்டீரோ? இப்போது சொல்லுங்கள், யார் தீண்டத் தகாதவர் என்று” என அங்கிருந்த மக்களிடம் ராமபிரான் கேட்டார்.

அனைவரும் வெட்கி தலை குனிந்து நின்றனர். பலரும் ராமபிரானை தம் இல்லத்திற்கு அழைத்தனர் ஆயினும் சபரியின் அழைப்பிற்கு இணங்கி அவரின் ஆசிரமத்திற்குச் சென்றார் ஸ்ரீ இராமர். தம் ஆசிரமத்திற்கு வந்த ஸ்ரீ இராமருக்கு, இலைகளால் ஆன ஒரு பாத்திரத்தில் பழங்களை வைத்து வழங்கினார் சபரி அம்மையார்.

“கண்பார்வை மங்கிய கிழவி நான், இந்த பழம் பழுத்ததா அல்லது காயா” என அறிந்து கொள்ள சபரி அம்மையார் பழத்தை எடுத்துக் கடித்துப் சுவைத்தார்.
“ஆம், இது பழுத்த கனி தான்.” என்றபடி ஸ்ரீ இராமருக்கு அன்போடு அவற்றை அளித்தார்.
ராமபிரானும் “அம்மையே, இக்கனிகளை போல் சுவையான கனிகளை இதற்கு முன்னர் யாம் உண்டது இல்லை. இக்கனிகளில் உம்முடைய அசையா நம்பிக்கையும் தூய்மையான பக்தியும் கலந்திருப்பதே அதற்கு காரணம்.” என புன்னகை மலர அப்பழங்களை ஸ்ரீ இராமர் உண்டார்.

சபரி அம்மையாரைக் கடிந்தவர்களும் இதைக் கண்டு திகைத்து போனார்கள். சபரி அம்மையாரின் அசையா நம்பிக்கைக்கும் தூய்மையான பக்திக்கும் மனம் உருகி அவருக்கு அருள்பாலித்தார் ஸ்ரீஇராமர்.


நன்னெறி

ஸ்ரீ இராமரைப் போல், சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களோடு நெருங்கி அவர்களோடு உணவுகளைப் பங்கிட்டு கொள்ள சொல்லவில்லை. முடிந்தவரை உங்கள் மனதில் இருக்கும், தீண்டாமை, சாதி, அந்தஸ்து போன்ற ஒழுக்கமற்ற பண்புகளை ஒதுக்கி வைத்து விடலாமே?

1 comment:

  1. பாமர மக்களுக்கு பயனுள்ள கருத்து
    நன்றி

    ReplyDelete