Followers

Monday 28 March 2016

ஐந்து நிலை தூய்மை

ஐந்து நிலையிலான தூய்மை



தூய்மை என்பது சுத்தம் அல்லது ஷௌச்சம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இந்துதர்மத்தைப் பொறுத்தவரை தூய்மை என்பது ஐந்து நிலைகளில் அமைந்துள்ளது.

அவை:

1) சுற்றுச்சூழல்
2) உடல்
3) மனம்
4) செயல்/வினை
5) வாக்கு



சுற்றுச்சூழல் தூய்மை


ஒருவர் வசிக்கும் பகுதி தான் சுற்றுச்சூழல் எனப்படுகின்றது. இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவனின் சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தூய்மையான சுற்றுச்சூழல் தான் ஒருவனுக்கு மனநிம்மதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது. ஒருவன் தன்னுடைய வீடு, தெரு, வசிப்பிடம், ஊர் போன்றவற்றை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை உலகம் உயிருடையது. இந்த உலகத்தின் ஒவ்வொரு அங்கமும் உயிரோட்டம் உடையது. இயற்கையால் வாய்திறந்து பேசமுடியாவிட்டாலும் அதற்கு உயிர் உள்ளது. உயிரோட்டம் இருப்பதால் தான் மனிதர்கள் உட்பட இதர ஜீவராசிகளும் இந்த புவியில் நிலைபெற்று வாழ்கின்றனர். ஆதலால் இந்த பூமியை தூய்மையாக பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.


கோயில் வளாகத்தை சுத்தபடுத்தல்


கோயில், குளங்கள் மற்றும் இதர பொது இடங்களை சுத்தம் செய்யும் நற்பணியில் ஈடுபடுவதால் ஒருவனுக்கு நிறைய நல்வினைகள் வந்து சேர்கின்றன. கோயிலை சுத்தபடுத்துவதால் அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் தங்கள் வழிபாட்டை மேற்கொள்வார்கள். இதனால் கோயிலை சுத்தபடுத்திய செயல் அந்த பக்தர்கள் அனைவருக்கும் செய்த சேவையாக அமையும். ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பது பொன்மொழி.

ஒவ்வொரு மனிதனும் குப்பைகளை முறையான வழியில் அப்புறப்படுத்தவேண்டும். ஆற்றில் வீசுதல், தெருவில் வீசுதல், கண்ட இடங்களில் வீசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவதால் அவை முறையான வழியில் நீக்கப்படுகின்றன. இதனால் நாம் இயற்கைக்கு எந்தவொரு இம்சையும் விளைவிப்பதில்லை. இயற்கைக்கு இம்சை விளைவித்தல் இந்துதர்மம் குறிப்பிடும் மிக கொடிய தீவினைகளில் ஒன்றாகும். இயற்கைக்கு நாம் இம்சை விளைவித்தால் அதன் விளைவு மோசமாக இருக்கும். எனவே நம்முடைய சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.


உடல் தூய்மை


உடல் தூய்மை எனப்படுவது பொருள் உடலை சுத்தமாக பராமரித்தல் எனப் பொருள்படும். தினசரி தவறாமல் உடலைத் தேய்த்து குளித்தல், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்தல், போதுமான யோகாசன பயிற்சி மேற்கொள்தல் ஆகியவை உடலைத் தூய்மைப்படுத்தும் வழிகளாகும். ஆரோக்கியமான உணவு என்பது ஒருவனுக்கு உடல்நலம், வலிமை, திருப்தி மற்றும் மகிழ்ச்சியை தரக்கூடிய உணவே ஆகும். (பகவத் கீதை) யோகாசனப் பயிற்சியால் உடலிலிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் மாசுக்களும் நீங்கி புத்துணர்ச்சி அடைகிறோம்.

காய்கறிகளும் பழங்களும்

மதுப்பழக்கம், புகைப்பழக்கம், உடலை சீரழிக்கும் மற்றப் பழக்கங்கள் யாவும் தவிர்க்கப்படவேண்டியவை. எப்படியும் இறக்க தான் போகிறோம் என்ற எண்ணத்தில் உடலை முறையாக பராமரிக்காமல் இருப்பது தவறாகும். எப்படியும் இறக்க தான் போகிறோம் என்பதை விட எப்படி இறக்கப் போகிறோம் என்பது தான் முக்கியம். நோய்வாய்ப்பட்டு, துன்பப்பட்டு, மோசமான நிலையில் இறக்க யாரும் விரும்புவதில்லை. வாழ்க்கையில் சாதிக்கவேண்டியது ஏராளமானவை உள்ளன. அதையெல்லாம் நிறைவேற்ற ஆரோக்கியமான உடல் தேவையாகும். சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது; எனவே உடலுக்கு கேட்டை விளைவிக்கு தீயப் பழக்கங்களை எல்லாம் நீக்கிவிட்டு ஆரோக்கியமான மற்றும் தூய்மையான ஒரு வாழ்க்கைநெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.


மனத் தூய்மை


பொறாமை, பேராசை, கோபம், பயம், பழியுணர்ச்சி, பகைமை, வெறுப்பு போன்றவை மனத்தில் இருக்கும் அழுக்குகளாகும். இவற்றை நீக்கிவிட்டு அன்பு, கருணை, அறிவு, பக்தி, சமநோக்கு, பிறர்பொருள் மீது ஆசை கொள்ளாமை, துணிச்சல் போன்ற நற்குணங்களை மனத்தில் விதைக்க வேண்டும்.


“உடல் நீரால் தூய்மை அடைகின்றது. மனம் தியானத்தால் தூய்மை அடைகின்றது”


மனத்தை சுத்தபடுத்தும் தியானப் பயிற்சி


என தர்மநூல்கள் தெரிவிக்கின்றன. முறையான தியானத்தால் ஒருவனின் மனம் தூயநிலை அடைகின்றது. பல நாட்கள் குளிக்காமல் இருப்பதால் எத்தகைய விளைவுகள் நேரிடுமோ அதைவிட மோசமான விளைவுகள் ஒருவன் தன் மனத்தை தூய்மைப்படுத்தாதலால் நேரிடும். கைகளில் அழுக்குப் பட்டுவிட்டால் எப்படி நீரைக் கொண்டு சுத்தம் செய்கிறோமோ அவ்வாறு மனத்தில் தீய எண்ணங்கள் எழும்போதெல்லாம் “நமசிவாய”, “நாராயணாய” என சொல்லி நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும்.


“மனத்தைக் கட்டுப்படுத்தியவனுக்கு மனம் சிறந்த நண்பன், கட்டுப்படுத்த தெரியாதவனுக்கு மனம் தான் கொடிய பகைவன்”
என பகவத் கீதை கூறுகின்றது.


வினைத் தூய்மை


வினைத் தூய்மை எனப்படுவது செய்யும் செயல்களில் இருக்கவேண்டிய தூய்மையைக் குறிக்கும். மற்றவர் பொருள்களை அபகரிக்க கூடாது, அப்பாவி உயிர்களுக்கு துன்பம் விளைவிக்க கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும், கடமையிலிருந்து பின்வாங்க கூடாது போன்றவை வினைத் தூய்மை ஆகும்.

ஒருவரின் தொழில் கழிவறையைக் கழுவுவதாக இருந்தாலும் அதில் அவர் நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்பட்டால் அதுதான் தூய்மையானது எனப்படுகின்றது. அதேவேளை ஒருவர் காவல்துறை அதிகாரியாக வேலை செய்தாலும் அவர் நேர்மையில்லாமலும் கடமையை நிறைவேற்றாமலும் செயல்பட்டால் அது தூய்மையற்றதாகும். தூய்மையற்ற செயல்களை செய்வதால் ஒருவன் பின்னாளில் அதை எண்ணி வருந்தும்படியான நிலைக்கு ஆளாகுவான் என கூறப்படுகின்றது. செயல்கள் தான் ஒருவனுடைய உண்மையான சொத்து என்ற பட்சத்தில், வினைத்தூய்மை இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது.


வாக்கு தூய்மை


வாக்கு தூய்மை என்பதை தமிழில் ‘வாய்மை’ என்பர். இதுவே ‘சத்தியம்’ எனவும் சொல்லப்படுகின்றது. எது நன்மையானதோ, எது இனிமையானதோ, எது நல்லவர்களுக்கு துன்பம் தராததோ, எது உண்மையானதோ அதுதான் ‘சத்தியம்’ எனப்படுகின்றது. ஒருவன் இனிமையான சொற்களை உபயோகித்துப் பேசவேண்டும். ஒருவருடன் பேசும்போது கசப்பான வார்த்தைகளை முற்றிலும் தவிர்த்து விடவேண்டும்.

மேலும் மற்றவர்களுக்கு நன்மையைத் தரக் கூடியதை பேசவேண்டும். தன்னுடைய சுயலாபத்திற்காக யாருக்கும் எந்தவொரு நன்மையும் விளைவிக்காத ஒன்றைப் பேசுவது பயனற்ற செயலாகும். இவ்வாறு பலர் முன்னிலையில் பயனற்ற சொற்களைப் பேசுபவர் எல்லோராலும் இகழப்படுவார் என வள்ளுவர் கூறுகிறார்.


“ஒருவன் நல்ல செயல்களை செய்வதால் அவன் மட்டுமே நன்மையை அடைகின்றான்; ஆனால் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்குக் கூறுவதால் அவற்றைக் கடைப்பிடிக்கும் மற்றவர்களும் நன்மையை அடைகின்றனர்.”
என சாணக்கியர் தம் அர்த்தசாஸ்திர நூலில் கூறுகின்றார்.

நன்மைகள் செய்வோருக்கு துன்பம் விளைவிக்கும் வார்த்தைகளைப் பேசக் கூடாது. ஒருவன் நெருப்பினால் சுட்ட காயம் கூட ஆறலாம் ஆனால் சொல்லினால் சுட்ட காயம் ஆறாது என்பர்.


முடிவுரை


இந்துக்கள் சுற்றுச்சூழல், உடல், மனம், செயல், வாக்கு ஆகிய ஐந்தையும் எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால், தூயநிலை தான் ஒருவனை இறைநிலைக்கு கொண்டு செல்கின்றது.

No comments:

Post a Comment