Followers

Monday 23 May 2016

கஷ்டங்களுக்கு கடவுளா காரணம்?


வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி மட்டும் தான் வேண்டுமென நினைப்பவர்கள் ஏராளமானோர் வாழ்கின்றனர். இன்பம் வரும்போது இறைவனை எண்ணாதவர், துன்பம் வருங்கால் மட்டுமே இறைவனை நாடுவர். துன்பம் வரும்போது, “கடவுளே என்னை மட்டும் ஏன் இப்படி சோதிக்கிறாய்?” என்ற கேள்வியும் கேட்பர். கடவுள் தம் பக்தர்களைச் சோதிப்பது உண்டு; ஆனால் எல்லா மனிதர்களையும் சோதிப்பது இல்லை. ஆதலால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு கடவுள் காரணம் இல்லை.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் இன்ப-துன்பங்களுக்கு நீங்கள் தான் முழு பொறுப்பு. இதுதான் வேதங்களில் கூறப்படும் உண்மை. யஜுர்வேதத்தைச் சேர்ந்த மைத்ராயணீய உபநிடதம் கூறுவது என்னவென்றால்,

“ஆசை, பேராசை, கோபம், வெறுப்பு, மருட்சி, பயம், மனத்தளர்ச்சி, பிறருக்கு கொடுத்து உதவாத மனம், பசி, தாகம், பிணி, மூப்பு, துக்கம், இன்னும் ஏராளமான வேறுபட்ட உணர்ச்சிகளின் உறைவிடம் மனிதனின் உடல். இவ்வாறு பல உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் உன்னால் எவ்வாறு மகிழ்ச்சியை மட்டுமே உணர முடியும்? செழித்து ஓடும் நதிகள் கூட சில காலங்களுக்குப் பின்னர் வற்றிபோய் விடுகின்றன; ஓங்கி நிற்கும் மலைகள் கூட சில காலங்களுக்குப் பின்னர் சரிந்து விடுகின்றன; வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் கூட குறிப்பிட காலத்திற்குப் பின்னர் மறைந்து விடுகின்றன; அழகாக உருண்டோடும் அலைகளும் கொடூரமாகி கரையை விழுங்குகின்றன; இதமான காற்று சிலவேளைகளில் பலமாகி தாக்குகின்றன. இவ்வாறு இன்பமும் துன்பமும் நிறைந்தது தான் இந்த உலகம். இன்பமும் துன்பமும் ஒருசேர அடங்கியுள்ள இந்த உலகத்தில், நீ இன்பத்தை மட்டுமே உணர முடியுமா?” (1:3-4)

உயர்ந்த உண்மைகளின் உறைவிடமான உபநிடதங்கள் நமக்கு உண்மைகளை வெள்ளிடை மலையாக காட்ட ஒருபோதும் தவறியதில்லை. இந்த உலகத்தில் இன்பமும் துன்பமும் கலந்து உள்ளது. இன்று இன்பமாக இருப்பவன், நாளை துன்பப்படலாம். இன்று துன்பப்படுபவன், நாளை இன்பமாக வாழலாம். மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்பமும் துன்பமும், சீதோஷ்ண நிலையில் ஏற்படும் வெயில்-குளிர் போன்ற பருவகாலங்களுக்கு சமமானவை. இதனாலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், “

”இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன; எனவே, இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.” (பகவத் கீதை 2:14)

ஒருவனின் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் எப்போதும் மாறிமாறி ஏற்படுகின்றன. ஆனால் இவை இரண்டுமே நிலையானவை அல்ல. இன்பமும் துன்பமும் ஒருவனின் கர்மவினை மற்றும் வாழ்க்கை நிலை ஆகிய இரண்டையும் பொறுத்து நேர்கின்றன. ஒருவனின் விதி அவனின் கையில் தான் அமைந்துள்ளது. இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்க பழகிக் கொள்ளவேண்டும். திருவள்ளுவர் ஒரு சிறப்பான அறிவுரையைக் கூறுகின்றார்,

“இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்திற்கு மயங்கி விடாதவன், துன்பம் வரும் காலத்தில் அந்த துன்பத்தால் பாதிக்கப்படுவதும் இல்லை” (குறள் 628)

நாம் அனுபவிக்கும் இஷ்டங்களுக்கும் கஷ்டங்களுக்கும் கடவுள் ஒருபோதும் காரணகர்த்தா ஆகமாட்டார். நம்முடைய செயல்களே நாம் போகும் பாதையை வடிவமைக்கின்றன. இறைவழிபாட்டில் ஈடுபடுதல், மற்றவருக்கு உதவுதல், யோகாசனம் பயில்தல், ஆன்மீக நூல்களைக் கற்றல் போன்ற நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். கடவுளிடம் தூய்மையான பக்தியும் அன்பும் கொண்டிருத்தல் தான் உண்மையான மகிழ்ச்சியாகும். மற்றவை யாவும் தற்காலிக இன்பத்தை தருபவை. தற்காலிகமான இன்பம் அனைத்திலும் துன்பமும் அடங்கியிருக்கும். இதுவே ஜகத் சத்யம் (உலகத்தின் உண்மையான இயல்பு).

No comments:

Post a Comment