Sunday, 8 May 2016

பெண்ணுரிமை காத்த அம்மையார்

பெண்ணுரிமை காத்த அம்மையார்
தரிகொண்டா வேங்கமாம்பாஇறைத்தொண்டில் ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமையும் பெண்ணுக்கும் உள்ளது. அந்த உரிமையைக் காக்கவும் உணர்த்தவும் தோன்றியவரே வேங்கமாம்பா அம்மையார்.

தரிகொண்டா வேங்கமாம்பா என்பவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு பக்தை ஆவார். திருமலை வேங்கடேசன் மீது கொண்ட அளவற்ற பக்தியாலும் அன்பாலும் பல கவிதைகளும் பாடல்களும் இயற்றியுள்ளார். வேங்கமாம்பா எனும் பெயர் கொண்ட இந்த அம்மையார், ஆந்திராவின் தரிகொண்டா எனும் ஊரைச் சேர்ந்தவர். கிருஷ்ணயமத்தியர் மற்றும் மங்கமாம்பா எனும் தம்பதியருக்கு ஒரே தவப் புதல்வியாக பிறந்தார். தன்னுடைய சிறு வயதிலே பகவான் மீது அளவுக்கடந்த பக்தி கொண்டு திகழ்ந்தார். இதனால் சில ஊர்மக்கள் வேங்கமாம்பாவை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று பழிக்கவும் செய்தனர்.

|| இளமைக் காலம் ||

வேங்கமாம்பா, தன்னுடைய இளம் வயதிலே பௌதீகப் பொருள்களின் மீது கொண்டுள்ள பற்றுகளைத் துறந்து எப்போதும் வேதாந்தம் பேசுவதைக் கண்டு அவரின் பெற்றோர்கள் பதற்றம் கொண்டனர். தன்னுடைய ஒரே புதல்வி துறவி ஆவதை அவர்கள் விரும்பவில்லை. ஆதலால் வேங்கமாம்பாவுக்கு வேங்கடாசலபதி எனும் ஒருவரை திருமணம் செய்து வைத்தனர். வேங்கமாம்பாவின் தூய பக்தியையும் அளவற்ற ஆன்மீக ஆற்றலையும் உணர்ந்துகொண்ட வேங்கடாசலபதி தன் மனைவியை தாய்க்கு நிகராகப் போற்றினார். இதனால் வேங்கடாசலபதி வேங்கமாம்பாவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஒருவேளை வேங்கடாசலபதி உயிரிழந்தாலும் வேங்கமாம்பா தன் சுமங்கலித் தன்மையை விட்டுக் கொடுக்க கூடாது என கேட்டுக் கொண்டார். சில நாட்களிலே வேங்கடாசலபதி ஒரு விபத்தில் காலமானார்.

|| பெரும் புரட்சி ||

அக்காலத்தின் மரபுக்கு எதிரான ஒரு பெரும் புரட்சியை வேங்கமாம்பா அம்மையார் ஆரம்பித்தார். ”பூவும் பொட்டும் ஒவ்வொரு பெண்ணின் உரிமை. அதை ஊர்மக்கள் வந்தாலும், அந்த வானுலக தேவர்கள் வந்தாலும் கூட விட்டுக் கொடுக்க மாட்டேன்” என சபதமிட்டார். அதேபோல காலம் முழுவதும் அவர் சுமங்கலியாகவே வாழ்ந்தார். வேங்கமாம்பாவின் குடும்பத்தினரும் வேங்கடாசலபதியின் குடும்பத்தினரும் எப்போதும் வேங்கமாம்பாவுக்கு உறுதுணையாக இருந்தனர். அம்மையார் குருகுலத்தில் சேர்ந்து ஆன்மீக கல்வியைப் பெறுவதற்கு அவரின் உறவினர் உதவி செய்தனர்.

|| யோக சாஸ்திரம் கற்றல் ||

வேங்கமாம்பா அம்மையார், சுப்பிரமணியர் எனும் ஆச்சாரியாரை தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் யோக சாஸ்திரங்களைக் கற்று தேர்ந்தார். வெகு சில நாட்களிலே தலைச்சிறந்த யோகினியாகவும் தேர்ச்சிப் பெற்றார். அதன்பின்னர், திருமலைக்குச் சென்றார். திருமலையில் அண்ணமாச்சாரியாரின் வாரிசுகள் வேங்கமாம்பா அம்மையை வரவேற்றனர். அம்மையாரின் பக்தியையும் அறிவையும் கேட்டுணர்ந்த அவர்கள் அம்மையை போற்றினர்.

|| திருமலை ஆரத்தி ||

வேங்கமாம்பா அம்மையார் ஒவ்வொரு நாளும் கருவறையில் இருக்கும் வேங்கடேச பெருமானுக்கு தான் தொடுத்த துளசி மாலையை அணிவித்து ஆரத்தி எடுப்பார். இதைக் கண்டு பொறுக்காத ஒரு தீட்சிதர் அம்மையின் மீது பெரும்பழி போட்டு அம்மையை கோயிலை விட்டு விரட்டினார். எனினும் வேங்கடேச பெருமான் வேங்கமாம்பா அம்மையை நாடிச் சென்று துளசி மாலையும் ஆரத்தியும் பெற்றார் என கூறப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு நாளும் பூஜைக்கு முன்னரே திருமலையான் துளசி மாலை அணிந்திருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தவறு செய்த தீட்சிதரும் கடும் நோயால் பாதிக்கப்பட்டு தன் தவற்றை ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் வேங்கமாம்பா அம்மையாரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் திருமலைக்கு அழைத்து வந்தனர்.

|| ஆறு ஆண்டுகள் தவம் ||

திருமலையில் இருந்து வெளியேற்றப்பட்ட வேங்கமாம்பா அம்மையார் ஆறு ஆண்டுகள் ஹரி நாமம் ஜெபித்து கடும் தவம் புரிந்தார். அம்மையார் திருமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தும்புரகோணம் எனும் வனத்தில் வேடர் இன மக்களோடு தங்கியிருந்து தவம் புரிந்ததாக குறிப்புகள் உள்ளன. அக்காலத்தின் மிகச் சிறந்த ஹரி பக்தையாக அம்மையார் திகழ்ந்தார்.

|| படைப்புகள் ||

விஷ்ணு பாரிஜாதம், முக்தி கந்தி விலாசம், ராம பரிணயம், ஸ்ரீ பாகவதம், ஸ்ரீ கிருஷ்ண மஞ்சரி, வசிஷ்ட ராமாயணம், ஸ்ரீ வேங்கடாசல மஹாத்யம், அஷ்டாங்க யோக சாரம் போன்ற அரிய பல நூல்களை வேங்கமாம்பா அம்மையார் இயற்றியுள்ளார்.

|| சேவைகள் ||

அம்மையார் திருமலையில் மூன்று மடங்கள் அமைத்து ஏழைகளுக்கு நீர், உணவு போன்ற அடிப்படை தேவைகளை ஏற்படுத்தி தந்துள்ளார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கு ஏற்ப திருமலையை சேர்ந்த மக்களுக்கு பல நல்ல உபதேசங்களும் செய்துள்ளார். இப்போதும் திருமலையில், தரிகொண்டா வேங்கமாம்பா அம்மையாரின் பெயரில் அன்னபிரசாத மையம் அமைந்துள்ளது.

|| மறைவு ||

19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அம்மையார் இறைவனின் திருவடியை அடைந்தார். அம்மையாரின் சமாதி வேங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தின் அருகே அமைந்துள்ளது. அக்காலக்கட்டத்தில் ஆன்மீகத்திலும் பக்தியிலும் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது என்பதை உணர்த்துவதற்காக வேங்கமாம்பா அம்மையார் பிறவி எடுத்தார் என்று கூறப்படுகின்றது.

~ தத் விஷ்ணோ பரமம் பதம் ~

No comments:

Post a Comment