Followers

Saturday 21 January 2017

பாலியின் ‘மௌன தினம்’




இந்தோனேசியாவின் பாலித் தீவில் வாழும் இந்துக்கள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் பாலி வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றனர். இந்நாள் பாலி மொழியில் ’ஞெபி’ அல்லது ‘இஸகாவர்ஸம்’ என்றழைக்கப்படுகின்றது. தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதியும் பாலி வருடப்பிறப்பும் ஒரே நாளில் அனுசரிக்கப்படுகின்றன.

பாலி வருடப்பிறப்பு கொண்டாட்டம் மிகவும் தனித்த சிறப்புமிக்கதாக திகழ்கின்றது. இந்நாள் ஆங்கிலத்தில் ‘தெ டே ஆஃப் ஸைலன்ஸ்’ என்றழைக்கப்படுகின்றது. அதற்கு காரணம், பாலியில் ஒவ்வொரு புத்தாண்டின் முதல் நாளும் பூரண அமைதி அமல்படுத்தப்படுகின்றது. வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும் அமைதியையும் அடக்கத்தையும் இந்நாளில் கடைப்பிடிக்கின்றனர்.

வருடப்பிறப்பின் முதல் நாள் பாலியில் பொது விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்நாளில் பாலி இந்துக்கள் எந்தவொரு ஆராவாரமுமின்றி அமைதியாக தவமிருப்பர். பாலியின் பட்டணங்களும் சுற்றுலாத் தலங்களும் கூட இந்நாளில் எந்தவொரு சத்தமும் இல்லாமல் அமைதியான நிலையில் இருக்கும். பாலி இந்துக்கள் இந்நாளில் மிதமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள்.

செயற்கையான எந்தவொரு சத்தமும் இந்நாளில் தவிர்க்கப்படுகின்றது. இயற்கையின் சத்தம் மட்டுமே எங்கும் நிறைந்திருக்க, எல்லோரும் வழிபாட்டிலும் தவத்திலும் ஈடுபடுகின்றனர். இந்நாளன்று அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் விடுமுறை அமல்படுத்தப்படுகின்றது. ஆபத்து அவசர தேவைகளுக்கு மருத்துவ மற்றும் காவல்துறை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பாலி வருடப்பிறப்பின் இரண்டாவது நாள், மன்னிப்பு நாளாக அமைந்துள்ளது. இந்நாளில் அனைவரும் தங்களின் தவறுகளை கூறி, அதற்கு மன்னிப்பு கேட்பார்கள். இனி அத்தகைய தவறுகளை மீண்டும் செய்யாதவாறு வாக்குறுதிகளும் எடுத்துக் கொள்வார்கள்.

அதன்பின்னர் குடும்பத்தினர், உறவினர், நண்பர், அண்டை அயலார் என அனைவரும் ஒன்றாக கூடி, உள்ளம் கனிய அன்போடு பேசி மகிழ்வார்கள். 2017-இல் மார்ச் 28ஆம் நாள், பாலி புதுவருடப் பிறப்பு அனுசரிக்கப்படும்.

No comments:

Post a Comment