Followers

Saturday 21 January 2017

நேபாளத்தின் ‘குகுர் திஹார்’




நேபாளத்தில் தீபாவளி திருநாளை ‘திஹார்’ என்றும் அழைப்பார்கள். அங்கு தீபாவளி பண்டிகை ஏறக்குறைய ஐந்து நாட்களுக்கு அனுசரிக்கப்படுகின்றது. நேபாளத்தைச் சேர்ந்த இந்துக்களும் பௌத்தர்களும் இந்நாளை களிப்போடு கொண்டாடி மகிழ்வர்.

நேபாளத்தில் தீபாவளியின் முதல் நாள் காக் திஹார் என்றழைக்கப்படுகின்றது. இந்நாளன்று, நேபாள இந்துக்கள் காக்கைகளுக்கு உணவளிப்பர். காக்கைகள் மிகவும் புத்திசாலித் தனமான பறவைகள். அவை மனிதர்களின் முகங்களை நினைவு கொள்ளும் திறனுடையவை. அவை தமக்கு உணவளித்தவர்களை நெடுநாட்களுக்கு நினைவில் கொள்ளும். மேலும் காக்கைகள் பகிர்ந்து உண்ணும் பண்புடையவை. காக்கைகளுக்கு உணவளிப்பதால், மனிதர்களும் எப்போதும் நன்றி மறவா நற்குணத்தோடும் பகிர்ந்து உண்ணும் பண்போடும் வாழவேண்டும் என்ற நன்னெறி புகட்டப்படுகின்றது.

நேபாளத்தில் தீபாவளியின் இரண்டாவது நாள் குகுர் திஹார் என்றழைக்கப்படுகின்றது. இந்நாள் பெரும்பாலான மக்களிடையே மகத்தான வரவேற்புமிக்க ஒரு நன்னாளாக அமைந்துள்ளது. இந்நாளன்று நாய்களின் சேவைகளுக்கும் அவற்றின் விசுவாசமிக்க குணத்திற்கும் நன்றி செலுத்தப்படுகின்றது. நாய்களுக்கு மாலைகள் அணிவித்து, திலகமிட்டு, உணவுகள் அளிக்கப்படுகின்றன. மனிதர்களாகிய நாம் நன்றி விசுவாசத்தை நாய்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

மூன்றாவது நாள் காய் திஹார் என்றழைக்கப்படுகின்றது. இந்நாளில் பசுக்களுக்கு நன்றி செலுத்தப்படுகின்றது. மனிதர்கள் பசுக்களிடம் இருந்து பாலை பெற்றுக் கொண்டு, நன்றிகடனாக பசுக்களுக்கு பாதுகாப்பை தருகின்றனர். சாதுவான குணத்திற்கும் தியாக உணர்விற்கும் எடுத்துக்காட்டாக பசு திகழ்கின்றது. மனிதர்கள் பசுக்களிடம் இருந்து இந்த நல்ல குணங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என நேபாள மக்கள் நம்புகின்றனர்.

தீபாவளி கொண்டாட்டம் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் வெவ்வேறு விதமாக கொண்டாடப்பட்டாலும், இருளைப் போக்கி ஒளியை ஏற்றும் அருமை மிக்க தத்துவத்தை உணர்த்தும் திருநாளாக தான் அமைந்துள்ளது. அர்த்தமுடைய நம் பண்டிகைகளை நாம் அர்த்தம் மாறாது கொண்டாடி வாழ்வில் வளம் பெறுவோம்.

No comments:

Post a Comment