Followers

Wednesday, 23 March 2016

கணேசர் கற்றுத் தந்த பாடம்




புராணக் கதைகள் தெய்வங்களை மையமாகக் கொண்டு நன்னெறிப் பண்புகளையும், ஆன்மிக தத்துவங்களையும் மக்களிடம் எளிதான முறையில் எடுத்துரைப்பதற்காக இயற்றப்பட்டவை ஆகும். அந்த வகையில் தடைகளை நீக்கும் தெய்வமான கணபதியைக் கொண்டு ஓர் அருமையான பண்பை நமக்கு எடுத்துக் கூறும் நன்னெறி கதை இது.

செல்வங்கள் அனைத்தும் அளவில்லாமல் பெற்றிருந்த குபேரனுக்குத் தன்னிடம் இருந்த செல்வங்களைப் பற்றி ஒரே பெருமை. இந்தப் பிரபஞ்சத்தில் தன்னைப் போல் செல்வச் செழிப்புள்ளவர்கள் யாரும் இல்லை என்ற கர்வம் தலை தூக்கியது. தன்னிடம் இருக்கும் செல்வங்கள் அனைத்தையும் இறைவன் சிவபெருமானை அழைத்து வந்து காட்டி, அதில் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என எண்ணினான் குபேரன்.

ஒருநாள் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட கைலாயத்துக்குச் சென்று சிவபெருமான், பார்வதி தேவி ஆகியோரை வணங்கினான். அவர்களைத் தன் இல்லத்திற்கு ஒரு முறை வந்து விருந்து சாப்பிட்டுச் செல்லும்படி அழைத்தான். குபேரனது உள் நோக்கத்தைப் புரிந்துகொண்ட சிவபெருமான், "என்னால் உடனடியாக அங்கு வர முடியாது; நீ வேண்டுமானால் என் மகன் கணபதியைத் தற்போது அழைத்துச் செல். அவனுக்கு விருந்தளித்துத் திருப்திபடுத்தி அனுப்பி வை. பின்னொரு நாளில் நானும் பார்வதியும் உன் இல்லத்திற்கு வந்து விருந்து சாப்பிடுகிறோம்" என்றார்.

குபேரனும் அதற்குச் சம்மதித்து சிவபெருமானிடம், “விநாயகருக்குத் தேவையான உணவளித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்புகிறேன்” என்று வாக்களித்து விநாயகரைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்தான். விநாயகரைத் திருப்திப்படுத்தும்படியாகவும், குபேரனின் செல்வச் செழிப்பை அவர் அறிந்து கொள்ளும்படியாகவும் பல்வேறு வகையான உணவு வகைகள் ஆடம்பரமாகச் செய்யப்பட்டன.

விநாயகர் விருந்துண்ணுவதற்காக வந்து அமர்ந்தார். உணவு வகைகள் ஒவ்வொன்றாகப் பரிமாறப்பட்டன. விநாயகரும் பரிமாறப்பட்ட உணவு ஒவ்வொன்றையும் விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். குபேரன் அவர் சாப்பிடுவதை ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

குபேரன் அச்சத்தின்படியே, அவன் வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவு அனைத்தும் காலியாகி விட்டது. குபேரன் தன் வீட்டிற்கு அருகில் இருந்த அனைத்துக் கிராமங்களிலுமிருந்து உணவை வரவழைத்துக் கொடுத்தான். இருப்பினும் விநாயகரின் பசி அடங்கவில்லை. பசி அடங்காத விநாயகர் குபேரன் வீட்டிலிருந்த விலை மதிப்புமிக்க பொருட்களையெல்லாம் விழுங்க தொடங்கினார். இப்படியே போனால் வீட்டில் ஒன்றுமே மிஞ்சாது என்ற நிலை குபேரனுக்கு உண்டாயிற்று. குபேரன் எவ்வளவு முயன்றும் விநாயகரைத் தடுக்க முடியவில்லை.

பதற்றமடைந்த குபேரன், "ஈஸ்வரா அபயம்! அபயம்!" என கைலாயத்திற்கு ஓடினான். சிவபெருமானிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். அப்போது சிவபெருமான் அவனிடம்,"குபேரா, உம்மிடமிருக்கும் தான் ஒருவனே மிகப்பெரும் செல்வந்தன் என்கிற கர்வத்தை விட்டுவிட்டு விநாயகனுக்கு ஒரு கைப்பிடி சாதம் கொடு, அவன் பசி அடங்கிவிடும்" என்றார். தன் தவற்றை உணர்ந்த குபேரன் தன் கர்வத்தை விட்டுவிட்டு ஒரு பிடி சாதத்தை விநாயகருக்கு அளித்தான். அதைச் சாப்பிட்ட விநாயகரின் பசி அடங்கியது. குபேரனின் கர்வமும் காணாமல் போனது.

இந்த கதையில் ஏராளமான தத்துவங்கள் அடங்கியுள்ளன.

1) நாம் எப்போதும் நம்மிடம் இருக்கும் பொருள் மற்றும் அறிவு ஆகிய இரண்டையும் கொண்டு கர்வம் கொள்ளக் கூடாது. அவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்க வேண்டும்.

2) அதேபோல நம் செல்வ வளத்தை ஊரறிய செய்வதற்காக தெய்வங்களுக்கு பலவகை பதார்த்தங்களை படைத்தலை விட, உள்ளன்போடும் தூயபக்தியோடும் ஒருபிடி சாதம் படைத்தாலும் அதுவே நிறைவானது.

இத்தகைய புராண கதைகளின் பால் பற்றுதல் கொள்ளாமல், அதன் தத்துவங்களை உள்வாங்கி கொண்டு செயல்படுதலே சாலச் சிறப்பாகும். மலரின் எழில்கண்டு வண்டு மயங்கினாலும் அது மலரிலுள்ள தேனைத் தான் பருகும். அதுபோல புராண கதைகளின் சுவாரசியத்தில் மயங்கினாலும் அதன் ஆழ்ந்த தத்துவங்களை உணர்வதே மிக முக்கியம்.

No comments:

Post a Comment