Followers

Thursday, 24 March 2016

மனிதப் பிறவி எடுத்ததன் பயன்




மனிதப் பிறவி எடுத்ததன் பயனே அன்பு செலுத்துவதுதான். அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. தனக்கென்று பொருள் சேர்ப்பதில், புகழ் சேர்ப்பதில், அலங்காரம் செய்து கொள்வதில் தற்காலிகமாக இன்பம் கிட்டலாம். ஆனாலும் இவற்றில் உள்ளம் நிறைவு பெறுவதில்லை. உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது. அன்பு செலுத்தும் போது நமக்கு எத்தனை க்ஷ்டம் வந்தாலும், தேக சிரமம் வந்தாலும், பணச் செலவானாலும் இதெல்லாம் தெரிவதேயில்லை. அன்பின் ஆனந்தமும் நிறைவுமே இந்த துன்பத்துக்கெல்லாம் மேலாகத் தெரிகிறது. அன்பு செலுத்தாத வாழ்க்கை வியர்த்தமே.

அன்பு செலுத்தும் போது துன்பமே தெரிவதில்லை என்கிறேன். ஆனால் கடைசியில் ஒரு நாள் அன்பு செலுத்தப்பட்ட வஸ்துவே நமக்குப் பெரிய துன்பத்தைக் கொடுத்து விடுகிறது. நாம் ஒருவரிடம் அன்பு வைக்கிறோம். கடைசியில் ஒரு நாள் அவர் நம்மை விட்டுப் போயே போய் விடுகிறார் அல்லது நாமாவது அவரை விட்டு ஒரு நாள் போகத்தான் போகிறோம். அப்போது, "அய்யோ, நம்மிடமிருந்து போய்விட்டாரே! என்றோ அல்லது "அய்யோ, நாம் இவரை விட்டுப் போகிறோமே என்றோ பெரிய துக்கம் உண்டாகிறது. இத்தனை காலமாக அன்பு தந்த ஆனந்தமும் நிறைவும் கடைசியில் பொய்யாகி, இந்தத் துன்பத்தில்தானே முடிந்தது என்று மனம் கலங்குகிறோம். அன்பின் முடிவான பலம் துன்பம்தானா என்று பெரிய சலிப்பு உண்டாகி விடுகிறது. எவ்வளவு அன்பு வைத்தோமோ, அவ்வளவு துன்பம் பிரிவின் பொது உண்டாவதைப் பார்க்கிறோம்.

அன்பே செலுத்தாமல் சுய காரியவாதியாகவோ அல்லது ஜடமாகவோ இருக்கிற ஜன்மாவே சிலாக்கியமானதோ என்று கூடத் தோன்றிவிடும். அப்படிப்பட்டவனுக்கு இந்தப் பிரிவு துன்பமே இல்லை அல்லவா? ஆனால் உண்மையில் சுய காரியவாதி பாபத்தைத்தான் மூட்டை கட்டுகிறான். மனிதப் பிறவி எடுத்துவிட்டு, ஆனந்தம், நிறைவு முதலியன் இல்லாமல் மரம், மட்டை, கல் மாதிரி ஜடமாக இருப்பதும் பயனில்லை. அன்பு செய்தாலும் முடிவில் துன்பம், அன்பு இல்லாமல் இருந்தாலோ வாழ்க்கையில் ருசியே இல்லை. இப்படியானால் என்ன செய்வது? மாறாத, மாளாத அன்பை உண்டாக்கிக் கொள்வதே வழி. நம்முடைய அன்புக்குரிய வஸ்து நம்மை விட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வஸ்து இருந்து, அதனிடம் அன்பை வைத்து விட்டால் நாமும் அதுவும் ஒரு நாளும் பிரியப் போவதில்லை. எப்போதும் ஆனந்தமாக, நிறைவாக இருக்கலாம். அதாவது, என்றும் மாறாமல் இருக்கிற ஒரே வஸ்துவான பரமாத்மாவிடம் அன்பைப் பூரணமாக வைத்துவிட வேண்டும். பரமாத்மா நம்மை விட்டு ஒரு போதும் நீங்குவதில்லை. நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும், பிரிகிற உயிர் பரமாத்மாவிடமிருந்து பிரியாமல் அவரிடமே கலந்து விடும். அவரிடம் வைக்கிற அன்பே சாசுவதமாக இருக்க முடியும்.

அழியாத பரமாத்மாவிடம் அன்பாக இருக்க வேண்டும் என்றால் வேறு யாரிடமும் அன்பாக இருக்கக் கூடாதா, மற்ற எல்லோரும் என்றோ ஒரு நாள் நசிப்பவர்கள்தானே என்ற கேள்வி எழலாம். பரமாத்மாவிடம் அன்பை நாம் மேலும் மேலும் வளர்த்துக் கொண்டால் அவருக்கு வேறாக யாருமே இல்லை என்று தெரியும். மரணமடைகிற மனிதர்களாக எண்ணி, அதுவரை யாரிடமெல்லாம் துக்க ஹேதுவான அன்பை வைத்திருந்தோமோ அவர்களும் கூட இப்போது அழியாத பரமாத்மா ஸ்வரூபமாகவே தெரிவார்கள். இப்படி உலகம் முழுவதையும் பரமாத்மாவாகவே பார்த்து அன்பு செலுத்த வேண்டும். அப்போது நம் அன்பு ஒரு நாளும் துக்கத்துக்கு மூலமாக ஆகாமலே இருக்கும்.

எல்லோரையும் பரமாத்மா ஸ்வரூபமாகப் பார்த்து அன்பு செலுத்த முடியா விட்டாலும், ஆத்ம குணம் நிறைந்த பெரியவர்கள், நல்ல ஞானமும் அருளும் நிறைந்த சத்குரு ஆகியோரைப் பரமாத்மாவாகக் கருதி, அன்பு செலுத்துவது சுலபமாக முடிகிறது. அப்படிப்பட்டவர்களிடம் அன்பு வைத்து ஆத்மார்ப்பணம் செய்துவிட்டால் போதும். அவர்கள் மூலமாக பரமாத்மா நமக்கு அனுக்கிரகம் பண்ணி விடுவார். நம் அன்புக்குப் பாத்திரமானவர் மரணமடைந்தாலும் கூட, "பரமாத்மா வேடமாகப் போட்டுக் கொண்ட ஒரு சரீரத்துக்குத்தான் அழிவு உண்டாயிற்று. இப்போது சரீரி பரமாத்மாவோடு ஒன்றாகி விட்டார்." என்ற ஞானத்தோடு பிரிவுத் துன்பத்துக்கு ஆளாகாமல் இருப்போம். நம் அன்பு கொஞ்சம் கூடக் குறையாமல் அப்படியே எந்நாளும் நிற்கும். ஈஸ்வரனிடம், சாதுக்களிடம் இந்த அன்பை அப்பியசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அதுவே மனிதப் பிறவி எடுத்ததன் பயன்.

No comments:

Post a Comment