Followers

Monday, 28 March 2016

விபீஷணரைக் ”கட்டிய” ஸ்ரீ ராமர்



இராவணனின் சகோதரர் தான் விபீஷணர். ஒரு மனிதன் எப்போதும் நன்மைக்கே துணைபோக வேண்டும் என்ற நன்னெறியை விபீஷணர் அவரின் இராமாயண கதாபாத்திரத்தின் மூலமாகப் புகட்டுகிறார். விபீஷணர் தன் தமயன் இராவணனுக்குப் பலமுறை தர்மத்தை எடுத்துக் கூறி நல்வழிக்கு கொண்டுவர முயற்சித்தார். எனினும் இராவணன் மாயையின் பிடியில் சிக்கிக் கொண்டு பல பிழைகளைத் தொடர்ந்து செய்துவந்தான். ஈசனின் எச்சரிக்கையையும் மீறி தனக்கு கிடைத்த வரத்தை தவறான வழியில் உபயோகித்தான்.

”சீதாதேவியை மரியாதையுடன் அனுப்பி வைத்துவிடுங்கள். பிறர் மனைவியை அபகரித்துக் கொண்டு வருவது மிக கொடிய பாவமாகும்” என இராவணனிடம் விபீஷணர் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.

இராவணனோ, “என்னை விட வயதில் இளையவன் எனக்கு அறிவுரை கூறுவதா?” என்று ஆணவத்துடன் தன் தம்பியாரை அவமதித்து அவையில் பலர் மத்தியில் கேலிசெய்தான்.

தன் தமயன் செய்வது முற்றிலும் குற்றம் என தெரிந்து அவனை திருத்த முயன்றும் அது வெற்றி பெறவில்லை என்பதால் என்ன நடந்தாலும் சரி நான் எப்போதும் தர்மத்தின் பக்கம் தான் நிற்பேன் என்று விபீஷணர் ஸ்ரீராமரை நாடிச் சென்றார். விபீஷணர் கண்டிப்பாக இப்படியொரு முடிவை எடுப்பார் என முன்னரே அறிந்துகொண்ட ஸ்ரீராமர் சுக்ரீவனிடம் “சுக்ரீவா, விபீஷணனைப் பற்றி நீர் என்ன கருதுகிறீர்? அவன் என்னை நாடி வருகின்றான். நாம் அவனை ஏற்றுக் கொள்ளலாமா?” எனக் கேட்டார். ”விபீஷணரின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அவன் இராவணனின் உளவாளியைப் போல என் கண்களுக்குத் தோன்றுகிறான். அவன் உங்களை நாடி வந்தால் அவனைக் கட்டி விடுங்கள்” என சுக்ரீவன் சொன்னார். ஸ்ரீராமரும் புன்னகைத்தபடியே “அப்படியே ஆகட்டும்” என்றார்.

விபீஷணர் ஸ்ரீராமரை நாடி வந்து வணங்கினார். ஸ்ரீராமர் உடனே விபீஷணரை நட்போடு கட்டியணைத்துக் கொண்டார். இதைக் கண்டு சுக்ரீவன் வியப்படைந்து போனார். “ராமா? நீங்கள் என்னிடம் ஆலோசனை கேட்டபோது நான் என்ன சொன்னேன். ஆனால் நீங்கள் அதற்கு மாறான ஒன்றை செய்கிறீர்களே?” என சுக்ரீவன் கேட்டார். உடனே ஸ்ரீராமர் தன்னுடைய பணிவான குரலால் “என்ன சொன்னீர்?” எனக் கேட்டார். “விபீஷணரைக் கட்ட சொன்னேன்” என்றார் சுக்ரீவர். “நானும் அப்படியே கட்டினேன் அல்லவா?” என்று சொல்லி சுக்ரீவரை வாயடைக்க செய்தார்.

இருந்தாலும் சுக்ரீவனுக்கு திருப்தியில்லை. ஸ்ரீராமர் சுக்ரீவனிடம் “சுக்ரீவா, விபீஷணன் வாழ்ந்த சூழலை வைத்து நீ அவனை எடைபோட்டு விட்டாய். அதனால் அவனை கயிற்றால் கட்டிப் போட சொன்னாய். ஆனால் நான் விபீஷணனின் குணநலன்களை ஆராய்ந்து அவன் தர்மத்துக்காக தன் தமயனைப் பகைத்துக் கொண்டு வருவதை புரிந்துகொண்டேன். இனி உன்னைப் போல் அவனும் எனக்கு சகோதரனே. அதனால் தான் அவனை என் கரங்களால் கட்டினேன்” என்று கூறினார். சுக்ரீவனும் ஸ்ரீராமரை கைக்கூப்பி வணங்கியபடி விபீஷணரை ஏற்றுக் கொண்டார்.

நன்னெறி: எந்தவொரு காலத்திலும் நாம் யாரையும் அவர் வாழும் சூழலை மட்டுமே வைத்து எடைபோட்டு விடக் கூடாது. யாராக இருந்தாலும் அவரின் உண்மையான குணநலன்களை ஆராய்ந்து அவரைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும். இதுவே இந்த நிகழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நன்னெறியாகும்.

No comments:

Post a Comment