#உங்களுக்குத்_தெரியுமா?
மலேசியாவின் கெடா (கடாரம்) மாநிலத்தில் நிலைபெற்றிருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு பண்டைய இந்து நாகரீகத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது. புஜங்கம் என்றால் நாகம் எனப் பொருள்படும். இந்தப் பண்டைய நாகரீகம் அமைந்திருக்கும் பள்ளத்தாக்கில் உள்ள 'மெர்போக் ஆறு' நாகத்தைப் போல வளைந்து இருப்பதால், இந்த நாகரீகத்திற்கு புஜங்க பள்ளத்தாக்கு என்ற பெயர் வழங்கலாயிற்று.
சுமார் 224 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பண்டைய நாகரீக தளம், 'ஜெராய்' எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த நாகரீகத்தின் வடக்கில், மெர்போக் எனும் ஆறும், தெற்கில் 'முடா' எனும் ஆறும் செழிப்பாக ஓடுகின்றன.
இந்தப் பள்ளத்தாக்கில், 2,535 ஆண்டுகளுக்கும் பழமையான 50-க்கும் மேற்பட்ட பண்டைய கோயில்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்கள் எல்லாமே சிதைந்த நிலையில் உள்ளன.
இந்த இடத்தில் இருந்து பல்வேறு தெய்வச் சிலைகளும் கல்வெட்டுகளும் அகழ்வாராய்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதால், இந்த நாகரீகத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
இங்கிருந்து அகழ்வாராய்ந்து எடுக்கப்பட்ட விநாயகர் சிலை, சிவன் சிலை, நந்தி சிலை, துர்க்கை சிலை, பெருமாளின் செப்புச் சிலை ஆகியவை மலேசியாவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு சிதைந்த பொற்றகடுகளும், செப்புகளும், மணிகளும், கற்சிலைகளும், மண் பாத்திரங்களும், பொருட்களும், பேழைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ் பிரம்மி எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நாகரிகத்தின் அருகாமையில் இருக்கும் ஆற்றங்கரைகளில், பண்டைய படகுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளத்தாக்கின் அருகில் அமைந்திருக்கும் மலையிலும் குகைகளிலும் ஏராளனமான பொன், மாணிக்கம், தங்க ரதம் போன்றவை இருக்கலாம் என உள்ளூர்வாசிகளால் நம்பப்படுகின்றது.
பாரத தேசத்திலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவோடு வணிகம் நியத்தமாக கடல்வழி பயணம் புரிந்தவர்கள், இந்த கடாரத்தில் சில காலங்கள் தங்கியிருக்க, பின்னர் இங்கு தங்களின் நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் பரப்பியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
No comments:
Post a Comment