இலங்கையே தீக்கிரை ஆகியும் சீதையைத் தீ தீண்டவில்லை
தூதுவனாக வந்த ஹனுமானைக் கட்டிப் போட்டு, வாலில் தீ வைத்து, நகரம் முழுவதும் எல்லாத் தெருக்களிலும் அழைத்துச் செல்லுமாறு இராவணன் ஆணையிட்டான். கைகள் கட்டப்பட்ட நிலையில், ஹனுமானின் வாலில் துணிகள் சுற்றப்பட்டு, எண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டு தெருத்தெருவாக அழைத்துச் செல்லப்பட்டார். அரக்கர்கள் அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். மேளங்கள் இசைத்து, சங்கங்கள் முழங்கி ஆரவாரமாக ஹனுமானை அழைத்துச் சென்றனர். ஹனுமானும் அமைதியாக இருந்தார். சற்றும் மனம் தளராமல், புன்னகையோடு ஹனுமான் வீதியில் வலம் வந்தார். அப்போது ஹனுமான் தம்முடைய மனத்தில் பின்வருமாறு எண்ணினார்.
"என்னால் இந்தக் கயிற்றை அறுத்துக் கொண்டு, இந்த அரக்கர்கள் அனைவரையும் அழித்து விட்டு, உடனடியாக வானத்தில் பறந்து சென்று விட முடியும். ஆயினும், அவ்வாறு செய்வதில் எனக்கு இப்போதைக்கு ஈடுபாடு இல்லை. இரவில் இலங்கையை என்னால் தெளிவாக நோக்க இயலவில்லை. இப்போது வெளிச்சத்தில் இலங்கையை நான் நன்றாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கையின் நெளிவு சுளிவுகளை அறிந்து கொள்ள எனக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக வாய்த்துள்ளது. தன்னுடைய காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பவன், புறத்தால் ஏற்படும் இன்ப துன்பங்களால் பாதிக்கப்பட மாட்டான். இந்த அரக்கர்கள் என்னுடைய வாலில் தீ வைத்து, என்னை எவ்வாறு துன்புறுத்தினாலும் என்னுடைய மனம் ஒருபோதும் கலங்காது." என்று மன தைரியத்தோடு இருந்தார்.
ஹனுமான் அவ்வாறு துன்புறுத்தப்படும் சம்பவத்தைக் கண்ட அரக்கிகள், அசோக வனத்தில் இருக்கும் சீதையிடம் விரைந்தோடி சென்று தெரிவித்தனர். இதைக் கேட்ட சீதை மிகவும் மனம் நொந்து போனார். ஹனுமானுக்கு வெப்பத்தைக் கொடுத்து வருத்தாமல், குளிர்ச்சியை அளிக்குமாறு அக்கினி தேவனிடம் சீதை பிரார்த்தனை புரிய ஆரம்பித்தார். உடனே, ஹனுமானின் வாலில் எரிந்து கொண்டிருந்த அக்கினியின் பிரகாசம் அதிகரித்தது. பிரகாசம் அதிகரித்தப் போதிலும் சுட்டெரிக்கும் தன்மையுடைய அக்கினி, ஹனுமானுக்குச் சற்றும் வெப்பத்தைக் கொடுத்து வருத்தாமல் மாறாகக் குளிர்ச்சியை அளித்தது. ஹனுமானின் தந்தையான வாயுதேவரும் தன்னுடைய இதமான காற்றால், ஹனுமானுக்கு மேலும் குளிர்ச்சியை அளித்தார்.
சுட்டெரிக்கும் தன்மையுடைய நெருப்பு தன்னை சிறிதும் வருத்தவில்லை என்பதை ஹனுமான் உணர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஹனுமான் எண்ணினார். இலங்கையின் நுழைவாயிலை அடைந்த போது, அந்த அரக்கர்களை எல்லாம் அழித்தார். அப்போது ஹனுமானின் வாலில் எரிந்து கொண்டிருந்த அக்கினி, சூரியனைப் போல பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஹனுமான் வாலில் சுடர்விட்டு எரியும் தீயைக் கொண்டு இராவணனின் ராஜ்ஜியத்தை தீக்கிரை ஆக்கினார்.
திரிகுடை மலையில் நின்று கொண்டு ஹனுமான் இலங்கை நகரம் தீக்கிரை ஆவதைக் கண்டு கொண்டிருந்தார். அப்போது ஹனுமானின் வால் அவருக்கு அக்கினி மாலையைப் போலவும் அதில் எரிந்து கொண்டிருந்த அக்கினி, அவருக்குப் பின்னால் பிரகாசித்துக் கொண்டிருந்த சூரியனைப் போலவும் காட்சியளித்தது என வால்மீகி கூறுகிறார். அன்று அந்த மகாத்மா உலகையே அழிக்க உதித காலாக்னியைப் போல காட்சியளித்தார் எனவும் வால்மீகி கூறுகிறார்.
“த்ரிகூட ஷ்ருங்காக்ரதலே விசித்ரே ப்ரதிஷ்டிதோ வானர ராஜஸிம்ஹ: ப்ரடீப்த லாங்கூல க்ருதார்சிமாலீ வ்யராஜதாதித்ய இவாம் ஷுமாலீ” (5:54:44)
“காலாக்னிரிதி ஸம்சிந்த்ய ஸர்வபூதானி தத்ரஸு:” (5:54:49)
ஆயினும், அப்போது ஹனுமான் இலங்கையே தீக்கிரை ஆகிவிட்டது, சீதைக்கும் விபரீதமாக எதுவும் நிகழ்ந்திருக்கக் கூடும் என எண்ணிச் சிந்தித்தார். இந்தத் தீயில் சீதையும் மாண்டிருக்கக் கூடும் என ஹனுமான் எண்ணி மனம் குழம்பினார். ஒருவேளை சீதை உயிர் பிரிந்தால், ராமனும் அக்கணமே உயிர் நீத்து விடுவார். பின்னர், மதனியையும் தமையனையும் பிரிந்து லக்ஷ்மணரும் உயிர் நீத்து விடுவார் என எண்ணி ஹனுமான் தன்னைத் தானே சாடினார்.
இவ்வாறு தன்னைத் தானே கடிந்து கொண்ட ஹனுமான் சிறிது நேரம் சிந்தித்தார். நெருப்பால் நெருப்பை அழிக்க முடியாது என ஹனுமான் உணர்ந்தார். தன்னுடைய வாலில் கொளுத்தப்பட்ட நெருப்பு தன்னையே சிறிதும் பாதிக்கவில்லை. அதற்கு காரணம் சீதை தாயாரின் தவ வலிமை தான். சீதை இந்த மண்ணில் இருப்பதால், சுட்டெரிக்கும் தீ கூட அறமுடைய நல்லவர்களை ஒருபோதும் பாதிக்காத வண்ணம் செயல்படுகின்றது. அப்படிப்பட்ட நெருப்பு சீதையை என்ன செய்து விட முடியும்? சீதை தன்னுடைய தவ வலிமையாலும், சத்திய வாக்காலும், தம் கணவர் மீது கொண்டிருக்கும் இணைப்பிரியா அன்பாலும் நெருப்பைக் கூட சுட்டுப் பொசுக்கி விடும் வல்லமை கொண்டவர். இவ்வாறு உணர்ந்த ஹனுமான் தன்னைத் தானே மனத்தால் தேற்றிக் கொண்டார்.
ஆயினும், சீதையை மீண்டும் நேரில் கண்டு விட்டப் பின்னர் தான் இலங்கை நகரை விட்டுப் போவதாக ஹனுமான் உறுதிக் கொண்டு அசோக வனத்திற்கு மீண்டும் சென்று சீதையைக் கண்டார்.
சீதை தீயினால் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு ஹனுமான் மனம் நிம்மதி அடைந்தார். ஹனுமானின் வீரச் செயல்களை உணர்ந்த சீதை ஹனுமானைப் பாராட்டினார். சீக்கிரமே இராமர் வந்து சீதையை மீட்பார் என சீதைக்கு மனதைரியத்தைக் கொடுத்து விட்டு ஹனுமான் அங்கிருந்து விடைபெற்றார்.
(வால்மீகி இராமாயணம், சுந்தர காண்டம் 53-56 ஆவது அத்தியாயம்)
No comments:
Post a Comment