இராவணன்
சீதையை வலுக்கட்டாயமாக அபகரித்துக் கொண்டு சென்று அசோக வனத்தில் சிறைப்பிடித்து
வைத்திருந்த சமயத்தில். சுக்ரீவரின் பணித்தலுக்கு இணங்கி மஹாபலியான ஹனுமான் இலங்கைக்கு விஜயம் புரிந்திருந்தார். இலங்கையில் அசோக வனத்தில், சீதை
பிராட்டியாரை
சந்தித்தப் பின், ஹனுமான் இராவணனின் சபைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஹனுமான் இராவணனுக்கு இராமர்-சீதை புகழையும் வரலாற்றையும்
எடுத்து உரைத்து, சீதையை இராமரிடமே ஒப்படைக்குமாறு பணிக்கிறார். அவ்வாறு செய்ய தவறினால், இராவணனின் சாம்ராஜ்யமே சிதைந்து போகும் எனவும் ஹனுமான் அறிவுரை செய்தார். இந்த சம்பவங்கள் வால்மீகி
இராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சுந்தர
காண்டத்தின், 51-ஆவது அத்தியாயத்தில் ஹனுமான்
இராவணனிடம் பேசுகிறார்.
"தசரத
மன்னரின் மூத்த மைந்தனான இராமன், தம் மனைவி சீதை
மற்றும் சகோதரர் லக்ஷ்மணரோடு வனவாசம் புரிந்திருந்தார். சீதை, ஜனக மன்னரின் புதல்வி.
தம் தந்தையார் தசரதரின் பணித்தலுக்கு இணங்கி இவர்கள் 14 ஆண்டுகள் தண்டக வனத்தில் வனவாசம் மேற்கொண்டுள்ளனர். ஒருநாள் இராமரும் லக்ஷ்மணரும் வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்த போது, சீதையைக் காணவில்லை. இப்போது நான் சீதை பிராட்டியாரை
உங்களுடைய அசோக வனத்தில் கண்டேன். சீதை தாயார் உங்களால்
சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதையும்
உணர்ந்தேன். அறம்பொருள் கற்று தவங்களில் மேன்மை அடைந்த மஹா பண்டிதர் நீங்கள்.
மாற்றானின் மனைவியை அபகரித்துக் கொண்டு வந்து சிறைப்பிடித்து வைத்திருப்பது உங்களுக்குப் பொருத்தமான செயல் அல்ல. தர்மத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவது உங்களைப் போன்ற புத்திமான்களுக்கு தகுந்தது அல்ல. இது மோசமான பின்விளைவுகளை
ஏற்படுத்தி உங்களின் மூலத்தையே அழித்து விடக் கூடும். ஆதலால், என் அறிவுரையைக் கேளுங்கள்.
சீதையை இராமரிடம் ஒப்படைத்து விடுங்கள்." என ஹனுமான் இராவணனுக்கு
எடுத்துரைத்தார்.
மேலும்
ஹனுமான் தொடர்ந்தார்,
"நன்மையோ
தீமையோ, கர்மாவின் பலன்கள் ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொருவனையும் தொடர்ந்து வரும். உலகத்தில் பிறவியெடுக்கும் ஒவ்வொருவரும் நல்ல மற்றும் தீய
கர்மாவின் பலன்களை அனுபவித்து தீரவேண்டும் என்பது நியதி. ஒருவன் தான் செய்த நல்ல
கர்மாவின் பலன்களை அனுபவிக்கும் போது, அவன் செய்த தீய
கர்மாவின் பலன்கள் காத்துக் கொண்டிருக்கிறது என்று பொருள்படும். காத்துக் கொண்டிருக்கும் தீய கர்மாவின் பலன்கள்
எப்போது வேண்டுமானாலும் ஒருவனை வாட்டலாம். எனவே, நல்ல கர்மாவின் பலன்களை
அனுபவிக்கும் போது, முடிந்தவரை மேலும் நல்ல பலன்களை அளிக்க
கூடிய செயல்களில் தான் ஈடுபட வேண்டும்.
இதனால், வருங்காலத்தில் தீய கர்மாவின் பலன்கள்
குறைய வாய்ப்புள்ளது. தீய கர்மாவின் பலன்களை
அனுபவிக்கும் போதும், மறந்தும் தீய பலன்களைத் தரக்கூடிய
செயல்களில் ஈடுபடக் கூடாது. இது மேலும் மேலும்
தீய கர்மபலன்களை அளிக்கும்."
"நீங்கள்
சிறைப்பிடித்து வைத்திருக்கும் சீதை வேறுயாரும் இல்லை.
காலராத்திரி எனப்படும் காளி. ஒட்டுமொத்த இலங்கையையும் சொற்பநொடியில் சர்வநாசமாக்க கூடிய சர்வ வல்லமை பெற்றவர்."
(5-51-34)
யாம்
சீதா இதி அபிஜானாஸி யா
இயம் திஷ்ததி தே வஸே
கால
ராத்ரீ இதி தாம் வித்தி
ஸர்வ லங்கா வினாஷினீம் (5:51:34)
"ஆதலால்,
சீதையை சிறைப்பிடித்து வைத்திருப்பது தங்களுடைய கழுத்தைச் சுற்றி நீங்களே பாசக்கயிறு போட்டிருப்பதற்கு ஒப்பாகும். உங்களின் மித்திரர்கள், மந்திரிகள், உறவினர்கள், சகோதரர்கள், மைந்தர்கள், நலன்விரும்பிகள், மனைவியர்கள் மற்றும் இந்த இலங்கை தேசம்
ஆகியவை நாசத்தை அடைய நீங்களே வழியமைத்து
விடாதீர்கள். இராம நாமத்தை செபிக்கும்
என்னுடைய நாவிலிருந்து வரும் இந்த சத்திய வாக்கை
செவிமடுத்துக் கேளுங்கள். நீங்கள் பகைத்துக் கொள்ள நினைப்பது வேறு யாருமில்லை. சர்வ
லோகங்களையும் உருத்தெரியாமல் முற்றிலும் அழித்து, பின் மீண்டும் அனைத்தையும்
அதே நிலைக்கு கொண்டு வரும் வல்லமை படைத்த மஹாவிஷ்ணு. அவரிடம் விரோதம் கொண்டு வாழ்வது கடினம்."
என ஹனுமான் கூறினார். இதைக் கேட்டு இராவணன் கடும் கோபத்திற்கு ஆளாகினான். உடனடியாக ஹனுமானை வதம் செய்யுமாறு பணித்தான்.
ஹனுமானுக்கு மரணத்தண்டனை அளிக்க உத்தரவிடப் பட்டது.
அப்போது
சபையில் இருந்த விபீஷணர் இராவணனின் செயலை ஆமோதிக்கவில்லை. தூதுவனாக வந்தவரைக் கொலை செய்வது ராஜ
தர்மத்திற்கும் உலக நடைமுறைக்கும் எதிரானது.
ஆதலால், அவ்வாறு செய்ய வேண்டாம் என விபீஷணர் அறிவுரை
செய்தார். ஆயினும், இராவணன் ஹனுமானைக் கொலைத் தண்டனையால் அழித்தே தீரவேண்டும் என கோபம் கொண்டு
பேசினான். விபீஷணர் மீண்டும் எடுத்துரைத்தார். ஒற்றனாக வந்தவன் கர்வத்துடன் பேசி சில தொந்தரவுகளைச்
செய்துள்ளான் என்பதால், அவனைக் கொலை செய்வதை சாஸ்திரங்கள்
ஏற்காது. சாஸ்திரங்களைக் கற்று உணர்ந்த பண்டிதராகிய இராவணன் இதை ஒருபோதும் செய்யக்
கூடாது. கோபத்தால் எடுக்கும் முடிவு ஒருபோதும் சரியாக இருக்காது. ஆதலால், கோபத்தை தணித்துக் கொண்டு நீங்கள் கற்றுணர்ந்த உலக நடைமுறை மற்றும்
சாஸ்திர விதிமுறைகளுக்குத் தக்கபடி ஒரு முடிவை எடுங்கள்
என விபீஷணர் வேண்டுகோள் விடுத்தார்.
இதைக்
கேட்டு சினம் குறைந்த இராவணன் விபீஷனரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆமோதித்தான். மரணத்தண்டனையைக் காட்டிலும் குறைந்த தண்டனையை வழங்க திட்டமிட்டான். “ஒரு வானரத்திற்கு இஷ்டமான
பூஷணம் (விருப்பமான அணிகலன்) அதனுடைய வால் எனக் கூறப்படுகின்றது.
ஆதலால், சீக்கிரமே ஹனுமானுடைய வாலில் தீ மூட்டுங்கள். எரிந்த
வாலுடன் ஹனுமான் தன்னுடைய இருப்பிடத்திற்குத்
திரும்பி ஓடட்டும்.
காயமுற்ற உடல் உறுப்புடன் திரும்பி ஓடி வரும் அவனைக் கண்டு அவனுடைய நண்பர்களும் சகோதரர்களும் நகைக்கட்டும்.” என இராவணன் ஆணையிட்டான்.
(5:53:1-4)
ஹனுமான் சாதாரண மனிதனோ வானரமோ கிடையாது. அன்று இராவணன் ஹனுமானுக்கு கொடுத்த தண்டனை, அவனுக்கு அவனே வழங்கிய தண்டனை ஆகியது.
No comments:
Post a Comment