Followers

Tuesday, 23 June 2020

இராமாயணத்தின் மிதக்கும் கற்கள்


#உங்களுக்குத்_தெரியுமா?

இராமாயணத்தில் இராமர் பாலத்தைக் கட்ட பயன்படுத்திய மிதக்கும் கற்கள் தற்போது இராமேஸ்வரத்தின் கடலோரப் பகுதிகளில் கிடைக்கப் பெறுகின்றன. இராமர் பாலம் தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே அமைந்துள்ளது. இந்தப் பாலம் சுமார் 48 கி.மீ. (30 மைல்) நீளம் கொண்டதாகும். 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரிடரால் இராமர் பாலத்தில் இருந்து சில கற்கள் இராமேஸ்வரத்தின் கடலோரப் பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன.

இந்தக் கற்கள், மற்றக் கற்களைப் போலவே பார்ப்பதற்குப் புலப்பட்டாலும், வியக்க வைக்கும் விதமாக நீரில் மிதக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. இந்தக் கற்களைப் பற்றிய பல ஆய்வுகள் நடந்துள்ளன. அதைப் பற்றி பார்ப்பதற்கு முன், இந்தக் கற்களைப் பற்றி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதைக் காண்போம்.

== இராமாயணம் ==

வால்மீகியின் இராமாயணத்தில் தான் முதன் முதலில் இராமர் பாலத்தைப் பற்றியும், அஃது அமைந்திருக்கும் இடத்தைப் பற்றியும், மேலும் அந்த பாலம் கற்களாலும் பாறைகளாலும் ஆனது என்றும் கூறப்பட்டுள்ளது. (யுத்த காண்டம், 22-ஆவது ஸர்க்கம்)

விஷ்வகர்மரின் மைந்தனான நளனும் வானரப் படைத் தலைவர்களில் ஒருவனான நீலனும் தலைமை வகிக்க நூறாயிரம் வானரங்கள் ஒன்றிணைந்து இராமேஸ்வரம் முதல் இலங்கை வரை கடற்பாலம் நிறுவப்பட்டது. பல பாறைகள், மலைகள், கற்கள், பெரிய மரங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து அந்தப் பாலம் கட்டப்பட்டது. முதலில், வானரங்கள் பெரிய பெரிய மரங்களைக் கொண்டு வந்து போட்டு பாலத்தின் அடிப்பாகத்தை உருவாக்கின. பின்னர், அதை அஸ்திவாரமாகக் கொண்டு, அதன் மீது கற்களையும் பாறைகளையும் கொண்டு வந்து போட்டு பாலத்தை அமைத்தன. அந்தப் பாலம் நேர்க்கோட்டில் அமைந்திருப்பதை உறுதி செய்வதற்காக 100 யோஜனம் நீளம் கொண்ட கயிற்றை வைத்து அளவெடுத்தனர்.

பாலம் நிறுவப்பட்டு ஆரம்பித்து முதல் நாளில், 14 யோஜனம் நீளம் பாலம் அமைக்கப்பட்டது. இரண்டாவது நாள், 20 யோஜனமும் மூன்றாவது நாள் 21 யோஜனமும், நான்காவது நாள் 22 யோஜனமும், ஐந்தாவது நாள் 23 யோஜனமும் நிறுவப்பட்டது. இவ்வாறு ஐந்து நாட்களில், 100 யோஜனம் நீளமும் 10 யோஜனம் அகலமும் உடைய அப்பாலம் நிறுவப்பட்டது.

இதைத் தவிர்த்து, இராமரின் பெயர்கள் எழுதப்பட்டதால் தான் கற்கள் மிதந்தன என்ற கூற்று வால்மீகியின் இராமாயணத்தில் இல்லை. அணில் உதவிய கதையும் வால்மீகி இராமாயணத்தில் கிடையாது.

== மிதவைத் திறம் கொண்ட கற்கள் ==

தற்போது அந்தப் பாலத்தில் இருந்து கிடைத்த கற்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து, சில தகவல்களைச் சேகரித்து உள்ளனர்.

1) பவளப் பாறை - இராமர் பாலத்தின் கற்கள் பவளப் பாறைகளால் உருவான கற்கள் என்று கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் பின்னர் தவறு என்று மறுக்கப்பட்டது. பவளப் பாறைகள் கால்ஸியம் கார்பனேட் எனும் வேதியியல் கனிமத்தால் ஆனது. இது நீரைக் காட்டிலும் அதிக திட்பம் கொண்டது. ஆதலால், நீரில் மிதக்காது; மாறாக, மூழ்கி விடும். எனவே, இது பவளப் பாறை கற்கள் அல்ல.

2) பூமிஸ் கற்கள் – இராமர் பாலத்தின் கற்கள் பூமிஸ் வகை கற்கள் எனப்படும் எரிமலைக் கற்கள் எனக் கருதப்படுகின்றன. பூமிஸ் வகை எரிமலைக் கற்கள் ’ஸிலிக்கா’ எனப்படும் கனிமத்தால் ஆனது. கொதிக்கும் எரிமலைக் குழம்பு குளிர்ந்த நீரில் கலக்கும் போது, காற்றுக் குமிழிகள் நிறைந்த கற்களையும் பாறைகளையும் உருவாக்குகின்றன. இதனால், அந்தக் கற்கள் மிதக்கும் தன்மையைப் பெறுகின்றன. பூமிஸ் கற்களுக்குள் அமைந்திருக்கும் காற்றுக் குமிழிகளுக்குள் நாளடைவில் நீர் புகுந்துவிட அந்த கற்கள் மிதவைத் திறனை இழந்து நீருக்குள் மூழ்கத் தொடங்கும். இராமேஸ்வரத்திற்கு அருகாமையில் எரிமலைகள் கிடையாது. அந்தமான் தீவுகளில் தான் எரிமலைகள் அமைந்துள்ளன. மேலும், இந்தோனேசியாவிலும் ஏராளமான எரிமலைகள் அமைந்துள்ளன. இந்த எரிமலைகளின் அருகாமையில் பூமிஸ் வகைக் கற்களையும் பாறைகளையும் காணலாம். இவை சமீபத்தில் வெடித்த எரிமலையின் கற்கள். இவை நாளடைவில் நீருக்குள் மூழ்கிவிடும். பூமிஸ் வகைக் கற்கள் வெண்மை நிறத்திலும், மற்றக் கற்களை விட எடை மிகக் குறைவாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் ஸிலிக்கா வகை கனிமத்தால் ஆனவை. ஸிலிக்கா வகை கனிமத்தைக் கொண்டு தான் கண்ணாடி போன்ற பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இராமேஸ்வரத்தின் மிதக்கும் கற்கள் பெரும்பாலும் கருமை நிறத்தில் உள்ளன. இவை ஸிலிக்கா வகை கனிமத்தால் ஆனவை அல்ல. மேலும், இராமேஸ்வரத்தின் மிதக்கும் கற்கள் கனமான எடையை உடையவை.

== முடிவுரை ==

முடிவாக, வால்மீகி இராமயணத்தில் கூறப்பட்டுள்ளது போல நளன், நீலன், மற்றும் வானரங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கடலுக்குக் குறுக்கே பாலம் நிறுவினர். நளன், விஷ்வகர்மாவின் மைந்தன். பாலம் கட்டுவதில் வல்லமை வாய்ந்தவன் என்பதால் அவனின் வழிக்காட்டலால் வானரங்கள் பாலத்தை நிறுவினர். இவர்கள் முதலில், பல உறுதியான மரங்களைக் கொண்டு வந்து கடலில் போட்டு பாலத்தின் அடிவாரத்தை அமைத்தனர். பின்னர், அந்த மரங்கள் மீது மிதவைத் திறம் கொண்ட கற்களையும் பாறைகளையும் சேகரித்து வந்து போட்டனர். இதன் மூலமாக, பாரத கண்டத்திற்கும் இலங்கைக்கும் இடையே பாலம் அமைந்தது. 1480-ஆம் ஆண்டு வரையிலும், இராமர் பாலம் மூலமாக இலங்கைக்குப் பயணம் இருந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதன்பின்னர், இந்தப் பாலம் நீருக்குள் மூழ்க ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் நாசா வெளியிட்ட புகைப்படங்களில், இராமர் பாலம் அமைந்திருப்பது மிகவும் தெளிவாகப் புலப்படுகின்றது. கூகிள் மேப் மூலமாக உற்று நோக்கினால், இராமர் பாலம் அமைந்திருப்பதை மிகவும் தெளிவாகக் காணலாம்.

No comments:

Post a Comment