#உங்களுக்குத்_தெரியுமா?
உயர்ந்த சிந்தனைகளின் உறைவிடமாகத் திகழும் உபநிஷதங்கள், வேதங்களின் முடிவாக அமைந்துள்ளன.
உபநிஷதங்களில் ஒன்றான மஹா உபநிஷதம், சாம வேதத்திலும் அதர்வண வேதத்திலும் அடங்கியுள்ளது.
இந்த மஹா உபநிஷத்தில், "வசுதைவ குடும்பகம்" என்று துவங்கும் ஒரு சுலோகம் அமைந்துள்ளது. வசுதா எவ (வசுதைவ) என்றால் உலகமே எனவும், குடும்பகம் என்றால் குடும்பம் எனவும் பொருள்படும். இந்த உலகமே ஒரு குடும்பம் என்று இந்த சுலோகம் உணர்த்துகின்றது.
இந்த ‘வசுதைவ குடும்பகம்’ எனும் உயரிய சிந்தனையுடைய ஸ்லோகம் மஹோபநிஷத் (மஹா உபநிடதம்) 6:71-இல் இடம்பெறுகின்றது.
அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதஸாம்
உதாரசரிதானாம் து வசுதைவ குடும்பகம் ||71||
பொருள் : “இவர் எனக்கு வேண்டியவர்; அவர் எனக்கு வேண்டாதவர்” என்று வேறுபாடுகள் காண்பவர் சிறுமதியுடையவர். இவை மிகவும் கீழ்த்தரமான புத்தியின் வெளிபாடாகும். குறுகிய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கடந்த சான்றோர், “இவ்வுலகமே ஒரு குடும்பம்” என்ற உண்மையை உணர்வர்.
என்னவொரு உயர்ந்த தத்துவம் பார்த்தீர்களா? இதுபோன்ற உயர்ந்த உண்மைகளை எல்லாம் உள்ளடக்கியவையே நமது உபநிடதங்கள். இந்த உண்மை, உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கு வழிவகுக்க வல்லது. மேலும், இந்தக் கருத்து அறிவியல் சார்ந்த அற்புதமான ஒரு விஷயத்தைக் குறிக்கின்றது. இந்த உலகினில் தோன்றியிருக்கும் அத்தனை ஜீவராசிகளும் ஒரே மூலத்தில் இருந்து வந்தவையே என்பதை நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது. அப்படியென்றால், இந்த உலகமே ஒரு குடும்பம் என்ற தத்துவம் அறிவியல்பூர்வமான உண்மை.
இவ்வுலகில், ஓரறிவுடைய ஜீவராசியாக இருந்தாலும் மனிதர்களைப் போல் ஆறறிவுடைய ஜீவராசியாக இருந்தாலும், ஒரு குடும்பத்தைப் போலவே ஒருவரை ஒருவர் ஏதோ ஒரு வகையில் சார்ந்து வாழ்கிறோம்.
இதேபோல், சங்க காலத்தைச் சேர்ந்த புறநானூற்றிலும் ஒரு பாடல் வருகின்றது. “யாதும் ஊரே யாவரும் கேளீர்” - எல்லா தேசமும் என் தேசமே, எல்லா மக்களும் என் உறவினனே என்பது அதன் பொருளாகும். இதுபோன்ற உயர்ந்த சிந்தனைகளுக்கு எல்லாம் உறைவிடம் இந்த பாரத தேசம்.
No comments:
Post a Comment