தானம் என்றால் ஈகை எனப் பொருள்படும். வறியவருக்குத் தருதலே ஈகை. இந்துதர்மத்தின் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒன்று தானம். தானம் செய்யும் நற்பண்பு இந்துக்களிடையே வேதகாலம் முதல் தொன்றுதொட்டு நிலவிவருகின்றது.
தானம் என்பதை கொடை அளித்தல் என்றும் வேண்டியவருக்கு ஈதல் என்றும் சனாதன தர்ம சாஸ்திரங்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. அறநூல்கள் ஈகைத் திறனை பரோபகாரம் என்று குறிக்கின்றன. ஔவைப் பாட்டியும் அறஞ் செய விரும்பு என தம் ஆத்திசூடியை துவக்கியுள்ளார். அந்த அளவுக்கு தானம் என்பது நம் பாதையில் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. ஒருவரால் இயன்றதை அளிப்பது தக்ஷினை என்றும்; இரவலருக்கு வழங்கும் கொடை பிக்ஷை என்றும் குறிக்கப்படுகின்றன.
மரம் நடுதல், ஓய்வு விடுதி கட்டுதல், பாடசாலை கட்டுதல், நீர்த்தொட்டி நிறுவுதல், அன்னசத்திரம் அமைத்தல் போன்ற செயல்களும் முற்காலத்தில் தானமாகச் செய்யப்பட்டன. இவை பெரும்பாலும் ஒரு செல்வந்தர் தன் சுற்றுப்புற மக்களுக்குச் செய்யும் தானமாக இருந்தன. ரிக்வேதத்தின் 10:117-ஆம் பாடல்,
“ஒரு மனிதனுக்குப் பசியால் மரணம் நேர்வதை தெய்வங்களும் சகித்துக் கொள்ளமாட்டார்கள். தன்னுடைய தேவைக்கு அதிகமான வளத்தை உடையவன் தேவைப்படுவோருக்கு ஈதலே தானம். தேவைக்கு மிஞ்சியது வைத்திருந்தும் தேவையென வருவோரு தானம் தராத ஒருவன் உண்மையில் மிக கொடிய மனம் படைத்தவன். ஆனால், தேவையென வந்தவனுக்கு தானம் தருபவன் எதிர்காலத்தில் எத்தகைய கொடிய சூழ்நிலையில் சிக்கினாலும் அவன் செய்த ஈகை அவனைக் காக்கும். செல்வம் உடையவர்கள் ஏழை மக்களிடம் கருணைப் பார்வை காட்டுங்கள். செல்வம் இன்று உங்களிடம் இருக்கலாம்; ஆனால் அது உங்களுக்குச் சொந்தமானது அல்ல. இன்று உங்களிடம் இருக்கும் செல்வம், அது மற்றொரு நாள் மற்றொருவருக்கு சொந்தமாகின்றது. ஏனென்றால் இந்த உலகம் நிலையற்றத் தன்மையுடையது. செல்வம் உங்களிடம் இருக்கும் காலத்திலே அந்த செல்வத்தைக் கொண்டு நல்ல காரியங்களைச் செய்து விடுங்கள். ஏனென்றால், நாளை செல்வம் உங்களை விட்டு சென்றாலும் நீங்கள் செய்த நல்லக் காரியங்களின் பலன்கள் என்றுமே உங்களோடு துணை நிற்கும்”.
என்னவொரு அருமையான கருத்து பார்த்தீர்களா? அதேபோல பிருகதாரண்யக உபநிஷத்தில் 5.2.3-ஆம் வரியில், மூன்று முக்கிய கோட்பாடுகள் உலகத்தின் நன்மைக்காக உபதேசிக்கப்படுகின்றன. அவை எளிதானவை என்றாலும் ஆழமான கருத்துடையவை.
“தமம், தானம், தயை – தன்னடக்கம், ஈகை, இரக்கம் ஆகிய மூன்று அறங்களையும் பழக்கிக் கொண்டு வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள்.” (பிருகதாரண்யக உபநிஷத் 5:2:3)
”அறம் என்பது யாதெனில் நேர்மை, தவம், தானம், அகிம்சை, சத்தியம் ஆகிய ஐந்தையும் வாழ்க்கையில் பழக்கிக் கொண்டு அதன்படி நடத்தலே.” (சாந்தோக்கிய உபநிஷத் நூல் 3)
பகவத் கீதையின் 17:20 ஸ்லோகம் முதல் 17:22 ஸ்லோகம் வரை, தானத்தைப் பற்றிய தத்துவங்களை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசிக்கின்றார். செய்யும் தானத்தை முக்குணங்களின் அடிப்படையில் பகவான் பகுத்து காட்டுகிறார்.
சத்வகுணமுடைய தானம்
1) வேண்டியவருக்குத் ஈதல்
2) தகுந்த இடத்தை, தகுந்த நேரத்தைக் கருத்தில் கொண்டு ஈதல்
3) எந்தவொரு எதிர்ப்பார்ப்புமின்றி ஈதல்
4) வழங்குபவரும் பெறுபவரும் மனநிறைவோடும் மகிழ்வோடும் வழங்குதல்/பெறுதல்
ரஜோகுணமுடைய தானம்
1) எதையாவது எதிர்ப்பார்த்து ஈதல்
2) வெறும் புகழ்ச்சிக்காக ஈதல்
தமோகுணமுடைய தானம்
1) வெறுப்புணர்ச்சியோடு ஈதல்
2) தகாத இடத்தில் ஈதல்
3) தானம்பெற தகுதியற்றவருக்கு ஈதல்
சத்வகுணமுடைய தானத்தைச் செய்தலே சிறப்பாகும். தமோகுணமுடைய தானத்தை தவிர்த்தலே நன்று. மதுக்கடையில் ஒரு போதை அடிமை தானம் கேட்டால் தரலாமோ? அது தகாத இடமாகும்; தானம் கேட்பவன் தானம்பெற தகுதியற்றவன்.
இதுபோல மகாபாரதத்தில், தானவீரனாக திகழ்ந்தவன் கர்ணன். அவனை தானத்திற்கே இலக்கணமாக குறிப்பிடுவர். ”நேர்மையான வழியில் சம்பாதித்ததைக் கொண்டு தான் ஒருவன் தானம் செய்யவேண்டும். தன்னை நாடி வருபவரை இன்முகத்துடன் உபசரித்து அவருக்கு வேண்டியதை அளிக்கவேண்டும்” என்று மகாபாரதம் ஆதிபர்வம் 91:3-4 குறிப்பிடுகின்றது. அதேபோல் ”தீங்கு விளைவிக்காத சொற்களைப் பேசுவதும் மற்றவருக்கு நன்மை விளைவிக்கும் நல்லதை எடுத்துக் கூறுவதும் கூட தானம் தான்” என்று ஆதி பர்வம் 87 குறிப்பிடுகின்றது.
”கனிதரும் மரங்களை நடுதல் தானத்திலே சிறந்த தானமாகும். மரங்கள் வளர்ந்து எண்ணற்ற வழிப்போக்கர்களுக்கும் துறவிகளுக்கும் கனிகளை அளிக்கின்றன. வெயிலில் வாடுபவர்களுக்கு நிழலைத் தருகின்றன. இத்தனையும் தானத்தின் பலனாக மரங்களை நட்டவருக்கே சேரும்”. (மகாபாரதம் அனுஷாசன பர்வம் 58)
திருக்குறளின் அறத்துப்பாலில் 23ஆவது அத்தியாயத்தில் திருவள்ளுவர் ஈகையைப் பற்றி போதிக்கின்றார். ”வேண்டியவருக்குத் தருதலே தானம்; மற்றவர்களுக்குத் தருவதெல்லாம் பயனைக் கருதி செய்வது” என்று கூறுகிறார் வள்ளுவர். “பிறருக்கு ஈதல் தலைச்சிறந்த செயல், ஆனால் பிறர்பொருளை அபகரிப்பது மிகவும் கொடிய செயல்,” “தனக்கு கிடைக்கும் உணவை மற்ற ஜீவராசிகளுடனும் பகிர்ந்து கொண்டு உண்ணுபவனை எந்த காலக்கட்டத்திலும் துன்பம் வாட்டாது,” என்கிறார். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறார் மகாகவி.
மூன்று வகையில் தானம்
1) செயல் – வேண்டியவருக்குப் பொருள் அளித்தல்
2) மனம் – துன்பத்தில் இருப்போருக்கு மனதளவில் நன்மை நினைத்தல், அவர்களின் மனத்தை வலிமையாக்கும் அளவில் ஆறுதல் தருதல்.
3) வாக்கு – இனிமையான நன்மை விளைவிக்கும் சொற்களைப் பேசுதல், தீங்கான சொற்களைத் தவிர்த்தல், தருமநெறிகளைப் புகட்டுதல்
மற்றவர்களைப் பார்த்தால் புன்னகைத்து அவருக்கு வணக்கம் கூறுதல், ஆறுதல் தேவைப்படுவோருக்கு ஆழ்மனதில் இரக்கம் கொண்டு நல்லதாக சில வார்த்தைகள் கூறுதல் போன்றவை கூட தானம் என்றே கூறப்படுகின்றன.
அல்-பிருனி எனும் பார்ஸிய வரலாற்று குறிப்பாளன் 1017-ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு வந்தான். அப்போது இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடந்துகொண்டு இருந்தது. இந்துக்கள் மீது ‘ஜிஸ்யா’ எனப்படும் கடும் வரி விதிக்கப்பட்டு இருந்தது. மதமாறுபவர்கள் இந்த வரியில் இருந்து தப்பிக்கலாம். தங்களின் வருமானத்தில் ஒரு பெரும்பகுதியை வரிக்கட்டும் இந்துக்கள், அத்தகைய ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தானம் எனும் உயரிய அறத்தைக் கைவிடவில்லை என அல்-பிருனி குறிப்பிட்டுள்ளான். 16 ஆண்டுகள் இந்தியாவில் இருந்த அவன், இந்துக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் வருமானத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து அதிலொரு பகுதியை தங்களின் செலவுக்கும், மற்றொரு பகுதியை நல்ல காரியங்களுக்கு நன்கொடையாகவும், மற்றொரு பகுதியை தானமாகவும், மற்றொரு பகுதியை வரியாகவும் கட்டினர். (Alberuni’s India v.2, அத்தியாயம் 67)
ஒரு காலத்தில் இந்து கோவில்களின் செல்வங்கள் பெருமளவு தானத்திற்கு பயன்படுத்தப்பட்டன. சத்திரங்கள், தர்மசாலைகள் அமைத்து வேண்டியவருக்கு வேண்டியதை செய்தனர். பயணம் செய்வோருக்கும் ஏழைகளுக்கும் சத்திரங்கள் அமைக்கப்பட்டு இலவச உணவு, தங்குமிடம், நீர், ஆடைகள் போன்றவை வழங்கப்பட்டன. சோழராட்சியில் கோவில்கள் பக்தர்களின் நன்கொடைகளை நல்ல காரியங்களுக்கு உபயோகித்தனர். பசியால் வாடுவோருக்கு உணவளித்தல், நீர்ப் பாய்ச்சுகள் உருவாக்குதல், வீடுகள் அமைத்தல் போன்ற காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன என்று தமிழ்நாட்டுக் கோவில் கல்வெட்டுகளை ஆராய்ந்த புர்ட்டொன் ஸ்டெயின் தன் ஆராய்ச்சி நூலில் குறிப்பிட்டுள்ளார். [Burton Stein, The Economic Function of a Medieval South Indian Temple, The Journal of Asian Studies, Vol. 19, pp 163-167]
இதனால் தான் மக்கள் கோவில்களுக்கு வாரிவாரி கொடை கொடுத்தனர். ஆனால் இன்று நிலை மாறியுள்ளது. கோவில்கள் மோசமான அரசாங்க பிடியில் சிக்குண்டுள்ளது. அந்த அரசாங்கம் கோவில் பணத்தையே தின்றுவிட்டு இறுதியில் இந்துக்களையே இழிவு செய்து பிழைப்பு நடத்துகின்றது.
தர்மத்தில் சிறந்தது தானம். இயன்றதை செய்யவேண்டும்; மற்றவர்கள் வேண்டியவர்களுக்குத் தருவதைத் தடுக்கக்கூடாது. தனக்கு மிஞ்சியது தானம் என்பர்; தன்னுடைய தேவைக்கு அதிகமாக இருப்பதை தானமாக தரவேண்டும் என்பதே அதன் பொருளாகும். அவ்வாறு செய்யாவிடினும், முடிந்தவரை மனத்தால் வாக்கால் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் நன்மை விளைவியுங்கள். அதுவே மிகப்பெரிய தானம்.
No comments:
Post a Comment