Followers

Monday, 8 February 2016

உபவேதங்கள் என்பவை எவை?



உபவேதங்கள் என்பவை எவை?

நான்மறை எனப்படும் ரிக், சாம, யஜுர், அதர்வண வேதங்களைப் பற்றி நாம் பரவலாக அறிந்திருக்கிறோம். ஆனால் உபவேதங்களைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோமா? இந்துதர்மத்தின் இரண்டாம் தர வகை நூல்கள் ஸ்மிரிதி நூல்கள் என்றழைக்கப்படுகின்றன. உபவேதங்கள் என்பவை ஸ்மிருதி வகை நூல்களைச் சேர்ந்தவை. உபவேதங்கள் நான்கு ஆகும். அவை:
1) தனுர் வேதம் (போர் அறிவியல்)
2) காந்தர்வ வேதம் (கலை அறிவியல்)
3) ஆயுர் வேதம் (மருத்துவ அறிவியல்)
*4) ஸ்தபத்ய வேதம் (கட்டட அறிவியல்)
*5) அர்த்த சாஸ்திரம் (அரசியல் மற்றும் பொருளாதார அறிவு)

*சில வேளைகளில் ஸ்தபத்ய வேதத்துக்குப் பதிலாக அர்த்தசாஸ்திர நூல் உபவேதங்களுள் சேர்க்கப்படும்.
1) தனுர் வேதம் தனுர் என்றால் வில்; வேதம் என்றால் அறிவு
தனுர்வேதம் என்பது தற்காப்புக் கலை மற்றும் போர்க்கலை சம்பந்தப்பட்ட வேதகால அறிவியலாகும். தனுர்வேதம் ரிக்வேதத்துடன் தொடர்புடையது. தனுர்வேதத்தின் பல குறிப்புகள் இந்துதர்ம நூல்களில் அமைந்துள்ளன. இந்துதர்ம நூல்கள் பலவகையான போர்க் கலைகளை கொண்டுள்ளன. ஆயுதமேந்திய மற்றும் ஆயுதமற்ற என இருவகையில் இவை அமைந்துள்ளன. தன்னைத் தற்காத்துக் கொள்வதும் தீயன செய்வோரிடமிருந்து நல்லவர்களைக் காத்தலும் இந்துதர்மத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

ஆயுதமின்றி நடத்தப்படும் மோதல் மல்யுத்தம் என்றழைக்கப்படுகின்றது. முட்டிக்காலால் எதிரியின் நெஞ்சத்தை தாக்குதல், தலையில் பலமாக குத்துதல், தலைப் பிடித்துக் கவிழ்த்து முதுகில் முட்டிக்கையால் தாக்குதல், கையால் கழுத்தை மறித்துக் கொண்டு எதிரியை வீழ்த்துதல் என சில வகை ஆயுதமில்லா சண்டைக் கலைகள் மகாபாரதத்தில் விளக்கப்படுகின்றன. இவ்வாறு இருவருக்கு இடையே நடக்கும் மோதல் முதல் இரு படையினருக்கு இடையே நடக்கும் மோதல் வரை விளக்கப்படுகின்றது. ஜரசந்தனுக்கும் பீமனுக்கும் இடையேயான மல்யுத்தம் 27 நாட்கள் நீடித்தன.

அக்கினி புராணத்தில் அமைந்திருக்கும் தனுர்வேத குறிப்புகள் அளப்பரியது. ரத கஜ துராக பதாதிஎன போராளிகளை தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை மற்றும் ஆள்படை என நான்காக பகுத்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பல நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

பண்டைய காலங்களில் அரசர்களும் வீரர்களும் தனுர்வேதத்தில் தேர்ந்தவர்களாக இருந்தனர். பின்னர் முஸ்லீம் படையெடுப்பால் அனைத்து மக்களும் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். மல்யுத்தம், தேரோட்டும் போட்டி, குதிரை ஓட்டும் போட்டி, வில்போட்டி, வலிமையான விலங்கை அடக்குதல் என சில புகழ்ப்பெற்ற வீர விளையாட்டுகளும் வேதங்களிலும் இதிகாசங்களிலும் விளக்கப்படுகின்றன. இத்தகைய வீரவிளையாட்டுகள் பெரும்பாலும் சுயம்வரங்களிலும் முக்கிய திருவிழாக்களிலும் நடத்தப்பட்டன.

புறநானூற்றுப் பாடல்கள் வேல், வாள், கேடயம், வில், சிலம்பம் போன்ற ஆயுதங்களையும் அதன் பயன்பாட்டையும் விளக்குகின்றன. அதுமட்டுமல்லாமல் சுஷ்ருதா சம்ஹிதை எனும் நூலில் மனிதனின் உடலில் இருக்கும் 107 முக்கிய இடங்களில் எந்தெந்த இடங்களில் தாக்கினால் என்னென்ன நிகழும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். இது வர்மக்கலையுடன் தொடர்புடையது.

பிரிட்டிஷ் வருகைக்குப் பின் களரிபயிற்று, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகள் தடை செய்யப்பட்டன. நம்மவர்கள் வீரமின்றி எந்தவொரு தற்காப்புக் கலை அறிவுமின்றி இருப்பது பிரிட்டிஷ் காரர்கள் நம்மை அடிமைப்படுத்த எளிதாக இருக்கும் என்பதற்காக அவ்வாறு செய்தனர். அதற்கு ஏற்றாற்போலவே தற்போது இக்கலைகள் மக்களிடையே மறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2) காந்தர்வ வேதம் காந்தர்வ என்றால் கலை எனப் பொருள்படும்.
காந்தர்வ வேதம் நாடகம், நடனம், இசை போன்ற அறிவியலைச் சார்ந்தது. இது சாமவேதத்தின் உபவேதமாகும். காந்தர்வ வேதத்தின் அடிப்படையில் உருவானதே நாட்டிய சாஸ்திரம். நாட்டிய சாஸ்திரத்தை இயற்றியவர் பரதமுனி. இது 6000 ஸ்லோகங்களை உடையது. காந்தர்வ வேதம் 36,000 ஸ்லோகங்களைக் கொண்டது. காந்தர்வ வேதம் இயற்கையில் சமநிலை உண்டாக்கவும் உலகினில் அமைதியும் சாந்தமும் நிலவவும் இயற்றப்பட்டதாக அதன் உள்ளடக்கம் உரைக்கின்றது. பலவகையான இசைக் கருவிகள் மற்றும் இசை சம்பந்தப்பட்ட பல அரிய தகவல்களும் காந்தர்வ வேதத்தில் உள்ளது.
3) ஆயுர்வேதம் - ஆயுர் என்னும் சொல் நீண்ட வாழ்வு என்பதையும், வேதம் என்பது கல்வி அல்லது அறிவுத்துறை என்று பொருள்படக்கூடியது. ஆயுர்வேதம் என்பது மருத்துவ துறை சார்ந்த கல்வியாகும். நீண்டகால வரலாறு கொண்ட இம்மருத்துவ முறை தெற்காசிய நாடுகளில் மிகவும் புகழ்ப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில்தோன்றின. சுஸ்ருத சம்கிதை, சரக சம்கிதை என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுர்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர். திருமாலின் அவதாரமாக கருதப்படும் தன்வந்திரிக்கு மருந்துகளுக்கும், உடல் மற்றும் மனநலத்துக்கும் இறைவனாவான். ருத்ரன் தேவர்களின் மருத்துவனாகப் பேசப்படுகிறான். தேக ஆரோக்கியத்தையும் உயிரோட்டத்தின் ஒழுங்கையும் காப்பதில் அஸ்வினிகளுக்கு முக்கிய பங்குள்ளது.
சரகர், சுஸ்ருதர் மற்றும் வாக்பட்டர் ஆகிய முனிவர்கள் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலைசிறந்து விளங்கியவர்கள். சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கு, ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்கள் இணையாகக் கூறப்படுகின்றது. வாதம் உடல் நலத்தை சமன்படுத்துவதுடன் ஏனைய இரண்டின் உந்துவிசையாகவும் இருக்கிறது. பித்தம் உடலுக்கு வெம்மையளித்து இயக்குகிறது. கபம் ஜடத்தன்மை கொண்டது. ஆயுர்வேதத்தின் அங்கங்கள்:
  1. சல்யம்- அறுவை சிகிச்சை, மகப்பேறு
  2. சாலக்யம்- கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்
  3. காய சிகிச்சை- உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்
  4. பூதவித்யை- மன நலம் பேணுதல்
  5. குமார பிரியா- குழந்தை வளர்ப்பு
  6. அக்தம் – முறிமருந்துகள் அளித்தல்
  7. இரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புகான மருந்துகளைப் பயன்படுத்துதல்
  8. வாஜீகரணம்- புத்துயிர்ப்பு மருத்துவம்




4) ஸ்தபத்ய வேதம் – ஸ்தபத்ய என்றால் ‘ஸ்தாபித்தல்
அதாவது நிலைநாட்டுதல் எனப் பொருள்படும். எனவே ஸ்தபத்ய வேதம் என்பதை ‘நிலைநாட்டல் அறிவுஎன மொழிப்பெயர்க்கலாம். ஸ்தபத்ய வேதம் என்பது கட்டடக் கலை சார்ந்த அறிவுத்துறையாகும். இது இயற்கையோடு இசைந்த வகையில் கட்டடங்கள் எழுப்பும் நுட்பத்தை துல்லியமாக பகர்கின்றது. நம்முடைய பாரத தேசத்தின் பண்டைய சில கோவில்கள் ஸ்தபத்ய வேத அடிப்படையில் எழுப்பப்பட்டவை. குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் மிக நுட்பமான முறையில் எழுந்தருளப்பட்டுள்ளது. இக்கோவில்களின் நுட்பமான அமைப்புமுறையே பூரணமான உள்ளமகிழ்ச்சியை அளிக்கவல்லது.

ஸ்தபத்ய வேதத்தின் சில குறிப்புகள் இன்றைய நவீன கட்டட நிபுணர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
ஒரு கட்டடம் இயற்கை மற்றும் பிரபஞ்ச செயல்பாடுகளோடு தொடர்பில் இருத்தல் மிக அவசியமாகும். பிரபஞ்ச செயல்பாடுகளோடு ஒத்திசையில் அமைந்திருக்கும் கட்டடம் அதில் குடியிருக்கும் மனிதனுக்கு இயற்கைக்கும் உண்டான பந்தத்தை அதிகரிக்கின்றதுஎன்று கூறப்பட்டுள்ளது.

ஸ்தபத்ய வேதம் இன்றைய வாஸ்து சாஸ்திரத்தோடு நிறைய தொடர்புடையது. ஆயினும் இன்றைய நிலையில் நிறைய வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இதை தவறாக உபயோகிக்கின்றனர். ஸ்தபத்ய வேதத்தில் ஒரு வீட்டின் வாசல் கிழக்கு நோக்கி இருத்தல் சிறப்பு என்று கூறப்பட்டுள்ளது. காலை கதிரவனின் ஒளி உடலுக்கு விட்டமின் ‘டி
உயிர்ச்சத்துகளை தரவல்லது. ஆகையால், ஒரு வீட்டின் வாசல் கிழக்குநோக்கி இருத்தல் சிறப்பு என்று கூறப்பட்டுள்ளது.

இதுபோல பிரபஞ்ச செயல்பாடுகளோடு தொடர்புடைய வகையில் கட்டடங்கள் எழுப்பும் வழிமுறைகளை ஸ்தபத்ய வேதம் குறிப்பிடுகின்றது. பண்டைய காலத்திலே ஒரு வீட்டை எப்படி கட்டவேண்டும், கட்டிய பின் அதற்குள் என்னவென்ன நுட்பங்களை மேற்கொள்ள வேண்டும் என துல்லியமாக விளக்கியுள்ளது ஸ்தபத்ய வேதம்.



5) அர்த்தசாஸ்திரம் அர்த்தம் என்றால் பொருள் எனப் பொருள்படும். அர்த்தசாஸ்திரம் என்றால் பொருள் சார்ந்த நூல் எனப் பொருள் கொள்ளலாம். தற்போது இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டு அரசியல் அறிவியல்என்று பெயர் கொள்ளப்படுகின்றது. அர்த்தசாஸ்திரம் என்பது பண்டைய பாரத நூலாகும். அது அரசாட்சி முறை, பொருளாதாரக் கொள்கை மற்றும் இராணுவ செயல்தந்திரம் போன்றவற்றைப் பற்றிக் கூறுகிறது. அதன் ஆசிரியராக கௌதில்யர், விசுணுகுப்தர் என பல பெயர்களைக் கொண்ட சாணக்கியர் விளங்குகிறார். சாணக்கியர் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவர் முதலில் தட்சசீல பல்கலைகழகத்தில் ஓர் அறிஞராக இருந்தார். பின்னர் மௌரியப் பேரரசின் பிரதமராகப் பதவி வகித்தார்.

அர்த்தசாஸ்திரம் 15 புத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:
  1. ஒழுங்கு முறைப் பற்றி
  2. அரசு கண்காணிப்பாளர்களின் கடமைகள்
  3. சட்டம் பற்றி
  4. தொல்லைகளைக் களைவது
  5. அரசவையினரின் நடத்தை
  6. தனியுரிமை அரசுகளின் தோற்றுவாய்
  7. ஆறு வழிமுறைக் கொள்கையின் முடிவு (அயல் நாட்டு உறவு)
  8. குற்றங்கள் மற்றும் இன்னல்கள் குறித்து
  9. டையெடுப்பவரின் செயல்பாடு
  10. போருடன் தொடர்புடையவை
  11. கூட்டவைகளின் நடத்தை
  12. சக்திவாய்ந்த பகைவனைக் குறித்து
  13. கோட்டையைக் கைப்பற்றுவது குறித்த போர்த்தந்திர வழிமுறைகள்
  14. இரகசிய வழிமுறைகள்
  15. ஒரு நூலை எழுதுவதற்கானத் திட்டம்


அர்த்தசாஸ்திரம் ஒழுக்கமுடைய நாட்டின் தலைவன் ஒருவன் எப்படி இருக்கவேண்டும் என குறிப்பிடுகின்றது:
  • மாற்றான் மனைவியினரின் உறவை விலக்க வேண்டும்.
  • மாற்றானின் சொத்திற்கு துராசைக் கொள்ளக் கூடாது.
  • அகிம்சையைக் கடைபிடிக்க வேண்டும் (அப்பாவி உயிரினங்களிடம் வன்முறையைக் கைக் கொள்ளாமை).
  • பகல் கனவு காணல், மனம் போன போக்கில் செயல்படுவது, வஞ்சகம் மற்றும் ஊதாரித்தனம் ஆகியவற்றைத் தவிர்த்தல்
  • தீங்கிழைக்கும் நபர்களுடன் இணைதலைத் தவிர்த்தல் மற்றும் தீங்கான செயல்களில் ஈடுபடலைத் தவிர்த்தல் ஆகியவற்றைக் கொண்டவன் ஆவான்.


இதுபோல மேலும் பல நுட்பமான விஷயங்களை அர்த்த சாஸ்திர நூல் உள்ளடக்கியது.

No comments:

Post a Comment