Followers

Tuesday, 9 February 2016

தமிழ் இலக்கியங்களைக் காப்பாற்றியவர்




பல வீட்டு உத்திரங்களில், கறையானுக்கு விருந்தாக விருந்த அரிய தமிழ்ச் சுவடிகளை மீட்டு இன்று உலகமக்கள் யாவர்க்கும் விருந்தாய் படைத்துவிட்டவர் உ.வே. சுவாமிநாதர். இவர் கும்பக்கோணத்தில் பிப்ரவரி 19, 1855-இல் பிறந்தார். தமிழர்கள் இவரை ‘தமிழ்த் தாத்தா’ என்று பாசமாக அழைப்பர்.

தமிழ்த் தாத்தா அவர்கள் சுமார் 91 தமிழ் நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை தமிழ் இலக்கியத்தோடு தொடர்புடையவை. மேலும், 3067 தமிழ் ஓலைச்சுவடிகளை மீட்டெடுத்து, அவற்றைப் பதிப்பித்தார். மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் என்பவரிடம் இவர் தமிழை உயிர்க்கு ஒப்பாகப் போற்றி பயின்றார். தமிழ்த் தாத்தா அவர்களின் தமிழ்ப் பற்று காரணமாக, தன்னுடைய வாழ்வினை தமிழ் ஓலைச்சுவடிகளை மீட்டெடுப்பதற்காக அர்ப்பணித்துக் கொண்டார்.


சுவாமிநாத ஐயர், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அவர்கள் வீட்டில் பராமரித்து வைக்கப்பட்டிருந்த தமிழ் ஓலைச்சுவடிகளை மீட்டார். பலர் வீட்டின் பேழைகளிலும், பொருள்வைக்கும் அறைகளிலும் தூசு படிந்து இருளில் கிடந்த ஓலைச்சுவடிகளை மீட்டெடுத்தார். அவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவையும் அடங்கும். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்லூரி முதல்வராக இருந்த இவர், ஓலைச்சுவடிகளைச் சேகரிப்பதற்காக தன்னுடைய முழுநேரத்தை அர்ப்பணிக்க முடிவு செய்து தன்னுடைய பணியையும் இராஜினாமா செய்தார்.


போக்குவரத்து வசதிகள் இல்லாத காலக்கட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் கால்நடையாகவும் கட்டைவண்டியிலும் பல கிலோ மீட்டர்கள் பயணித்து தமிழ் இலக்கியங்களை மீட்டு தமிழர் என்ற அடையாளத்துக்கு வித்திட்டவர், உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்கள். ஆனாலும், பிராம்மண துவேஷத்தில் சிக்குண்டு தவிக்கும் தமிழர்கள் இவர்போன்ற தியாகிகளை மறந்துவிட்டனர். மாறாக, தமிழைக் காட்டுமிராண்டி என்றுசொல்லி இகழ்ந்த கொடியவனின் புகழை வசைப்பாடி திரிகின்றனர்.

No comments:

Post a Comment