இந்து தர்மத்தை அறிவோம்
5) ஆஷ்ரமங்கள்
ஆஷ்ரமங்கள் என்பவை இந்துதர்ம நூல்களில் மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளைக் குறிக்கின்றன. இந்த நான்கு நிலைகளும் ஒருவனின் வயது அடிப்படையில் வகுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நிலையிலும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் தனித்தனியே அமைந்துள்ளன. அவை: பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனபிரஸ்தம், சன்யாசம்.
பிரம்மச்சரியம் என்பது மாணவப் பருவம் எனப் பொருள்படும். இந்த நிலை பொதுவாக ஒருவன் தனது 24 வயதுவரை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த நிலை கல்வி மற்றும் அடக்கம் ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கின்றது. பண்டைய பாரத தேசத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு வயதில் குருகுலத்தில் சேர்க்கப்படுவர். அங்கு அவர்கள் குருவுடனே தங்கியிருந்து அறிவியல் ஞானம், தத்துவ ஞானம், சாஸ்திரங்கள், தன்னடக்கப் பயிற்சி, தர்மநெறி போன்றவற்றைக் கற்றுக் கொள்வார்கள். குருகுலத்தில் சேர்வதற்கு முன் உபநயனமும் குருகுலத்தில் தேர்ச்சிப் பெற்று வெளிவரும் போது சமாவர்தனமும் மேற்கொள்ளப்படும். இது ஏறக்குறைய இன்று குழந்தைகள் பாலர்பள்ளியில் சேர்க்கப்பட்டு பட்டப்படிப்பு முடித்து ‘graduation’ அடைவது போலவாகும். பிரம்மச்சரிய நிலையில் தேர்ச்சிப் பெற்ற ஒருவனே அடுத்த நிலையான கிரகஸ்த நிலைக்கு முழுமையாக தயாரானவன்.
கிரகஸ்தம் என்பது இல்லறப் பருவம் ஆகும். இந்த நிலை 48 வயதுவரை நீடிக்கும். இந்த நிலையில் ஒரு குடும்பத்தை ஒழுங்குமுறையாக நடத்த அவன் பின்பற்ற வேண்டிய கடமைகள், குடும்பத்தினருக்குத் தேவையானவற்றை செய்தல், பிள்ளைகளுக்கு முழுமையான கல்வியை அளித்தல், குடும்பத்தை தர்மநெறியில் செயல்படுத்துதல் ஆகியவை மையமாக அமைகின்றன. இவை ஒரு கிரகஸ்தன் (குடும்பஸ்தன்) கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் ஆகும். இந்த நிலையில் தான் ஒருவன் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் கடைப்பிடிக்க வேண்டிவரும். தர்மநெறியிலிருந்து நழுவாத வாழ்க்கைமுறை, நியாயமான முறையில் ஈட்டப்படும் பொருள், ஒழுக்கமான இன்பவாழ்க்கை ஆகியவை இந்த நிலையில் பின்பற்றப்படவேண்டும்.
வனபிரஸ்தம் என்பது பணிஓய்வு பெற்ற நிலையைப் போன்றது. இது ஒருவனின் 48 வயதுக்கு மேல் ஆரம்பிக்கின்றது. தன் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய எல்லாக் கடமைகளைச் செய்துமுடித்து, அவர்கள் சுயகாலில் நிற்கும் நிலையை அடைந்த பின்னர் ஒருவன் இல்லறவாழ்வில் இருந்து ஓய்வு பெறுகிறான். இப்போது அவனுக்கு தன் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து நல்லறிவை அளிக்கவேண்டிய கடமை உள்ளது. இந்த நிலையில் ஒருவன் தன்னுடைய பொருள் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும் மெல்லமெல்ல துறந்து முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடவும் மோட்சத்துக்கான வழியை நாடவும் ஊக்குவிக்கப்படுகின்றான். பண்டைய காலங்களில் வனபிரஸ்த நிலையை அடைந்தவர்கள், குடும்பவாழ்க்கையைத் துறந்துவிட்டு முழுமையாக தவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். குடும்ப வாழ்க்கையின் போது ஒருவன் அனைத்தையும் துறக்கமுடியாது. குடும்பவாழ்க்கையில் அவன் தன் கடமைகளை எல்லாம் முடித்தப் பின்னரே வனபிரஸ்த நிலையில் அடியெடுத்து வைக்கவேண்டும். குடும்பவாழ்க்கையில் மேற்கொள்ளும் தவம் மனநிம்மதி அடைவதற்காகவும், வனபிரஸ்த நிலையில் மேற்கொள்ளும் தவம் மெய்யுணர்வு அடைவதற்காகவும் அமைந்திருக்கும்.
சன்யாசம் என்பது ஆன்மிக முதிர்ச்சிப் பெற்ற நிலையைக் குறிக்கின்றது. இவ்வாறு ஆன்மிக முதிர்ச்சிப் பெற்றவர்கள் சன்யாசிகள் என்றறியப்படுகின்றனர். சன்யாசிகளுக்கு உலக ஆசைகள், பற்றுகள் போன்ற அனைத்திலும் ஈடுபாடின்றி முழுக்கமுழுக்க மோட்சத்தின் மீதே எண்ணம் அமைந்திருக்கும். சிலர் குடும்பவாழ்க்கையில் ஈடுபடாமல் பிரம்மச்சரியம் முடிந்ததும் நேராக தவநிலையில் ஈடுபட்டு சன்யாச நிலையை அடைவர்.
இவ்வாறு மனித வாழ்க்கையை நான்காக பிரித்து ஒவ்வொரு நிலையிலும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை இந்துதர்ம நூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. ஒருநிலையில் அவன் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் மற்றொரு நிலையில் ஒத்திருப்பதில்லை. ஆனால் எல்லா நிலைகளில் தர்மநெறியைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியமாக உள்ளது. உதாரணமாக, கிரகஸ்த பருவத்தில் ஒருவன் தன் புலனின்பத்தைப் பூர்த்தி செய்துகொள்ள முனைந்தாலும் அவன் தர்மநெறியை மீறக்கூடாது. தர்மநெறியை மீறிய இன்பம் அழிவையே தரும். அதேவேளையில் பிரம்மச்சரிய நிலையில் ஒருவன் புலன்களை அடக்கியாளவும் கல்வியின் மீது முழுமையான கவனம் செலுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றான். வனபிரஸ்த நிலையில் ஒருவன் ஆசைகளை எல்லாம் துறந்து, தவம் மேற்கொள்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த ஊக்குவிக்கப்படுகின்றான்.
No comments:
Post a Comment