Followers

Monday, 29 February 2016

பகவத் கீதை




பிறப்பால் யாவரும் சமமே!


எல்லா மனிதர்களும் தாயின் கருவறையில் தான் தோன்றி பிறக்கின்றனர். எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி தான் உடலமைப்பையும் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் மனிதர்களிடையே வேறுபாடுகள் எங்கிருந்து வருகின்றன? பிறப்பாலா? கிடையாது. ஒருவனின் குணம் மற்றும் செயல் தான் அவனை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.

மற்றபடி பிறக்கும் போதே ஒருவன் இப்படித்தான் ஆவான் என்று நிர்ணயிக்கப்படுவதில்லை. விதி என்பதை நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம். விதி என்பது விதிக்கப்பட்டது எனப் பொருள்படாது. விதி என்றால் ‘நம்முடைய செயல்களால் நம்முடைய பாதையை நாமே வகுத்துக் கொள்வது’. தற்போது நாம் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் நம்முடைய முந்தைய செயல்களின் பலன்களே. அதுபோல நம்முடைய தற்போதைய செயல்கள் வருங்காலத்தில் நாம் அனுபவிக்கப் போகும் பலன்களை விதிக்கின்றன.

நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் கடவுளைப் பழித்துக் கொள்வது தவறாகும். ஏனென்றால் இன்பமும் துன்பமும் பிறர் தர வாரா. இன்று நாம் விதைக்கும் நற்செயல் என்ற விதையே நாளை மரமாகி நற்பயன் என்ற இனிப்பான கனியைத் தரும். அதுபோல இன்று நாம் விதைக்கும் தீயசெயல் என்ற விதையே நாளை மரமாகி தீயபயன் என்ற கசப்பான கனியைத் தரும்.

ஆகையால் நம்முடைய செயல்களை நாம் திருத்திக் கொள்ளவேண்டும். எந்த சமயமும் தர்மத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்யக் கூடாது. தர்மமுடைய செயல்களையே செய்யவேண்டும். எது தர்மமுடைய செயல்? எது தர்மத்துக்கு புறம்பான செயல்? இதனை அறிவதற்கு நாம் அறநூல்களை நாடவேண்டும். நம்மிடம் இருக்கும் தலைச்சிறந்த ஓர் அறநூல் ‘திருக்குறள்’. திருக்குறள் ஒரு தர்மசாஸ்திரம். திருக்குறளைப் பின்பற்றி வாழ்தலே தர்மமுடைய வாழ்க்கையாகும்.

”அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.” (குறள் 39)

தர்மநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். தர்மத்துக்குப் புறம்பாக வாழ்வதால் துன்பங்களே வந்துசேரும். தர்மநெறிக்கு புறம்பான வாழ்க்கையால் ஒருவனுக்கு எந்தவொரு புகழுமில்லை.

No comments:

Post a Comment