Followers

Sunday, 7 February 2016

தலைமுடியை நீக்குவது ஏன்?


தலைமுடியை நீக்குவது ஏன்?






இந்துக்கள் மேற்கொள்ளவேண்டிய முக்கிய 16 சடங்குகளில் ஒன்றுதான் முடிநீக்கும் சடங்காகும். பெரும்பாலும் எல்லா குழந்தைகளும் சிறுவயதிலே முடிநீக்கிவிடப் படுகின்றனர். இந்துக்கள் குறிப்பிட்ட திருநாட்களிலும் தங்களின் முடிகளை நீக்குகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பதை காண்போம்.

மனிதர்களின் தலைமுடி இறந்துபோன அணுக்களால் ஆனது. ஆகவே இது மனிதர்களின் எல்லாவகையான கடந்தகால தீய எண்ணங்கள், சிந்தனைகள், உணர்ச்சிகள் போன்றவற்றை மறைமுகமாகப் பிரதிபலிக்கின்றது. எனவே, தலைமுடியை நீக்குவது கடந்தகாலத்தில் அவன் அனுபவித்த துன்பங்கள், வேதனைகள், வலிகள் போன்ற அத்தனையையும் தன்னுடைய நினைவில் இருந்து அழித்துவிடுவதைக் குறிக்கின்றது. பழைய துன்பங்களை நினைவில் வைத்திருப்பது ஒருவனை பலவீனமானவன் ஆக்குகின்றது. ஆகையால் அதனை நினைவிலிருந்து நீக்கிவிட்டு, நல்லநல்ல நினைவுகளை மட்டும் மனதில் நிலைத்துக் கொள்ளவேண்டும்.


மேலும், அவனுள் இருக்கும் தீய குணங்களான வெறுப்புணர்ச்சிகள், பகைமை, அறியாமை, சினம், வஞ்சகம் போன்ற எல்லாவற்றையும் இறைவனின் சன்னிதியில் நீக்கிக் கொண்டு “மற்றவர் எனக்கு செய்த தீமைகளை எல்லாம் நான் மறந்துவிட்டேன். என் நினைவில் இனி வெறுப்பு, பகைமை, சினம், பழித்தீர்த்தல் போன்ற எண்ணங்கள் இல்லை. மாறாக மற்றவர்கள் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவில் உள்ளன.” என சபதம் எடுத்துக் கொள்கிறான்.




தலைமுடியை நீக்குவதால் உடலில் செயல்படும் சக்திகளை தலை உச்சியில் ஒன்றுதிரட்டலாம் என இந்துதர்ம யோகிகள் குறிப்பிடுகின்றனர். இதனால் ஒருவனின் எண்ணமும் சிந்தனையும் புத்தியில் நிலைபெற்று அவனின் கவனம் முழுவதும் இறைவனின் மீது நிலைத்திருக்கும். மனம் என்பது அங்குமிங்கும் சஞ்சலமாய் ஓடிக்கொண்டிருக்காமல், ஒரே நிலையில் இறைச்சிந்தனையில் உறுதியாக நிற்க தெளிவான புத்தி துணைபுரியும். இதனால் தான் தலைமுடியை இறைவனுக்காக நீக்குகின்றனர்.


ஒருவன் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அவன் வேலையிலும் வீட்டிலும் நிறைய பிரச்சனைகளைச் சுமந்து கொண்டு செயல்படுகிறான். பல பிரச்சனைகளை மூளைக்குள் திணித்து அதை மேலும் மேலும் வெப்பமடைய செய்கிறான். இதனால் அடிக்கடி கோபம்கொண்டு தன் அன்புக்குரியவர்களைக் கடுஞ்சொற்களால் நோகடித்து விடுகின்றான். தலைமுடியவை நீக்கி தலைமீது குளிர்ச்சித் தரும் சந்தனத்தை பூசுவதால் தேவையற்ற உணர்ச்சிகளை உருவாக்கும் வெப்பம் இறங்கி சிந்தனையும் எண்ணமும் சாந்தமடையும்.


தலைமுடியை நீக்குதல் ஒருவனின் தியாக உணர்ச்சியை உணர்த்துகின்றது. ஒருவன் ஆன்மிகத்தில் ஈடுபட தியாக உணர்ச்சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அதேவேளை தன்னைத் தானே இம்சைப்படுத்துவது (துன்புறுத்திக் கொள்வது) இந்துதர்மத்திற்கு விரோதமான செயல். எனவே, தியாகத்தின் அடையாளமாக தலைமுடியை நீக்குகின்றனர். தலைமுடி நம் உடலோடு ஒட்டியிருக்கும் ஒன்று. இது பிணைப்புகளை உவமையாக குறிப்பிடுகின்றது. ஒருவன் வாழ்க்கையில் சுகபோகங்களாலும் ஆசைகளாலும் பிணைக்கப்பட்டுள்ளான். அந்தப் பிணைப்புகளை எல்லாம் முழுமையாக நீக்குவதால் அவன் ஆன்மிகத்தில் உயர்நிலை அடைகின்றான்.


தலைமுடியை நீக்குவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதை தூய்மையான பக்தியோடும் தெய்வீக சிந்தனையோடும் செய்தல் அவசியம். இறைவனின் அருள் சூழட்டும். இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!

Saturday, 6 February 2016

காஞ்சி கைலாசநாதர் கோவில்


காஞ்சி கைலாசநாதர் கோவில்


காஞ்சி கைலாசநாதர் கோவில் தோற்றம்


ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோவில் 7 ஆம் நூற்றாண்டை (685 AD) சேர்ந்ததாகும். ஏறக்குறைய 1330 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த பெருமைமிக்க ஆலயம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது. தமிழ் நாட்டின் முதல் கருவறைமேல் விமானம் தாங்கிய கோயில் இதுதான்.










பல்லவர்கள் குடவரை கோயில்கள் வடிவத்திலிருந்து மாறி புதியவடிவத்தை கண்டுபிடித்தனர். அதுதான் மணற்கற்கல் (sand stone). இந்த கோயில் முழுவதும் மணற்கற்களால் மட்டுமே கட்டப்பட்டதுள்ளது.






இந்த கோயிலை பார்த்தப்பிறகுதான் இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் நான்கு வகையான கல்வெட்டு எழுத்துகள் உள்ளன:

1. நாகரி எழுத்து
2. கிரந்தம் எழுத்து
3. நன்கு அலங்கரிக்கப்பட்ட கிரந்தம் எழுத்து
4. பூ வேலைப்பாடு கொண்ட கிரந்தம் எழுத்து














இக்கோவிலின் எங்கு பார்த்தாலும் பிரமிப்பு. வாழ்க்கையில் ஒருமுறையேனும் ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில் வந்துபாருங்கள்.

இந்து தர்மத்தை அறிவோம் (நான்கு ஆஷ்ரமங்கள்)




இந்து தர்மத்தை அறிவோம்

5) ஆஷ்ரமங்கள்


ஆஷ்ரமங்கள் என்பவை இந்துதர்ம நூல்களில் மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளைக் குறிக்கின்றன. இந்த நான்கு நிலைகளும் ஒருவனின் வயது அடிப்படையில் வகுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நிலையிலும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் தனித்தனியே அமைந்துள்ளன. அவை: பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனபிரஸ்தம், சன்யாசம்.

பிரம்மச்சரியம்
என்பது மாணவப் பருவம் எனப் பொருள்படும். இந்த நிலை பொதுவாக ஒருவன் தனது 24 வயதுவரை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த நிலை கல்வி மற்றும் அடக்கம் ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கின்றது. பண்டைய பாரத தேசத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு வயதில் குருகுலத்தில் சேர்க்கப்படுவர். அங்கு அவர்கள் குருவுடனே தங்கியிருந்து அறிவியல் ஞானம், தத்துவ ஞானம், சாஸ்திரங்கள், தன்னடக்கப் பயிற்சி, தர்மநெறி போன்றவற்றைக் கற்றுக் கொள்வார்கள். குருகுலத்தில் சேர்வதற்கு முன் உபநயனமும் குருகுலத்தில் தேர்ச்சிப் பெற்று வெளிவரும் போது சமாவர்தனமும் மேற்கொள்ளப்படும். இது ஏறக்குறைய இன்று குழந்தைகள் பாலர்பள்ளியில் சேர்க்கப்பட்டு பட்டப்படிப்பு முடித்து ‘graduation’ அடைவது போலவாகும். பிரம்மச்சரிய நிலையில் தேர்ச்சிப் பெற்ற ஒருவனே அடுத்த நிலையான கிரகஸ்த நிலைக்கு முழுமையாக தயாரானவன்.

கிரகஸ்தம்
என்பது இல்லறப் பருவம் ஆகும். இந்த நிலை 48 வயதுவரை நீடிக்கும். இந்த நிலையில் ஒரு குடும்பத்தை ஒழுங்குமுறையாக நடத்த அவன் பின்பற்ற வேண்டிய கடமைகள், குடும்பத்தினருக்குத் தேவையானவற்றை செய்தல், பிள்ளைகளுக்கு முழுமையான கல்வியை அளித்தல், குடும்பத்தை தர்மநெறியில் செயல்படுத்துதல் ஆகியவை மையமாக அமைகின்றன. இவை ஒரு கிரகஸ்தன் (குடும்பஸ்தன்) கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் ஆகும். இந்த நிலையில் தான் ஒருவன் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் கடைப்பிடிக்க வேண்டிவரும். தர்மநெறியிலிருந்து நழுவாத வாழ்க்கைமுறை, நியாயமான முறையில் ஈட்டப்படும் பொருள், ஒழுக்கமான இன்பவாழ்க்கை ஆகியவை இந்த நிலையில் பின்பற்றப்படவேண்டும்.

வனபிரஸ்தம்
என்பது பணிஓய்வு பெற்ற நிலையைப் போன்றது. இது ஒருவனின் 48 வயதுக்கு மேல் ஆரம்பிக்கின்றது. தன் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய எல்லாக் கடமைகளைச் செய்துமுடித்து, அவர்கள் சுயகாலில் நிற்கும் நிலையை அடைந்த பின்னர் ஒருவன் இல்லறவாழ்வில் இருந்து ஓய்வு பெறுகிறான். இப்போது அவனுக்கு தன் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து நல்லறிவை அளிக்கவேண்டிய கடமை உள்ளது. இந்த நிலையில் ஒருவன் தன்னுடைய பொருள் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும் மெல்லமெல்ல துறந்து முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடவும் மோட்சத்துக்கான வழியை நாடவும் ஊக்குவிக்கப்படுகின்றான். பண்டைய காலங்களில் வனபிரஸ்த நிலையை அடைந்தவர்கள், குடும்பவாழ்க்கையைத் துறந்துவிட்டு முழுமையாக தவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். குடும்ப வாழ்க்கையின் போது ஒருவன் அனைத்தையும் துறக்கமுடியாது. குடும்பவாழ்க்கையில் அவன் தன் கடமைகளை எல்லாம் முடித்தப் பின்னரே வனபிரஸ்த நிலையில் அடியெடுத்து வைக்கவேண்டும். குடும்பவாழ்க்கையில் மேற்கொள்ளும் தவம் மனநிம்மதி அடைவதற்காகவும், வனபிரஸ்த நிலையில் மேற்கொள்ளும் தவம் மெய்யுணர்வு அடைவதற்காகவும் அமைந்திருக்கும்.

சன்யாசம்
என்பது ஆன்மிக முதிர்ச்சிப் பெற்ற நிலையைக் குறிக்கின்றது. இவ்வாறு ஆன்மிக முதிர்ச்சிப் பெற்றவர்கள் சன்யாசிகள் என்றறியப்படுகின்றனர். சன்யாசிகளுக்கு உலக ஆசைகள், பற்றுகள் போன்ற அனைத்திலும் ஈடுபாடின்றி முழுக்கமுழுக்க மோட்சத்தின் மீதே எண்ணம் அமைந்திருக்கும். சிலர் குடும்பவாழ்க்கையில் ஈடுபடாமல் பிரம்மச்சரியம் முடிந்ததும் நேராக தவநிலையில் ஈடுபட்டு சன்யாச நிலையை அடைவர்.

இவ்வாறு மனித வாழ்க்கையை நான்காக பிரித்து ஒவ்வொரு நிலையிலும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை இந்துதர்ம நூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. ஒருநிலையில் அவன் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் மற்றொரு நிலையில் ஒத்திருப்பதில்லை. ஆனால் எல்லா நிலைகளில் தர்மநெறியைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியமாக உள்ளது. உதாரணமாக, கிரகஸ்த பருவத்தில் ஒருவன் தன் புலனின்பத்தைப் பூர்த்தி செய்துகொள்ள முனைந்தாலும் அவன் தர்மநெறியை மீறக்கூடாது. தர்மநெறியை மீறிய இன்பம் அழிவையே தரும். அதேவேளையில் பிரம்மச்சரிய நிலையில் ஒருவன் புலன்களை அடக்கியாளவும் கல்வியின் மீது முழுமையான கவனம் செலுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றான். வனபிரஸ்த நிலையில் ஒருவன் ஆசைகளை எல்லாம் துறந்து, தவம் மேற்கொள்வதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த ஊக்குவிக்கப்படுகின்றான்.

இந்து தர்மத்தை அறிவோம் (தமிழ் நூல்கள்)



இந்து தர்மத்தை அறிவோம்


4.3) தமிழ் நூல்கள்


தமிழ் இலக்கியங்களும் தர்மத்தை உயர்வாகப் போற்றுகின்றன. அறம் எனும் சொல் தர்மத்தைக் குறிக்கும். தமிழ் இலக்கியங்களுள் மிகப் பழைமையானது அகத்தியம். இதை இயற்றியர் அகத்திய மாமுனிவர். பின்னர், தொல்காப்பியம் எனும் நூலை அகத்தியரின் பன்னிரு மாணவர்களுள் ஒருவரான தொல்காப்பியர் இயற்றினார். அகத்தியத்தின் சில வரிகளும் குறிப்புகளும் மற்றமற்ற தமிழ்நூல்களில் காணப்பட்டாலும், தற்போது அகத்தியம் எனும் நூல் இல்லை. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைக்கின்றது. இதுதான் இன்னமும் கிடைக்கப்பெறும் தமிழ் இலக்கியங்களிலே மிகவும் பழைமையானது.


தொல்காப்பிய நூல் மூன்று அதிகாரங்களை உடையது. அவை: எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் மற்றும் பொருளதிகாரம். ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது தலைப்புகளை உடையது. எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தமிழ் இலக்கணத்தை போதிக்கின்றன. பொருளதிகாரம் நிலத்திணைகள், பருவநிலைகள், அக்கால மனிதர்கள் போன்ற பல கருத்துகளை விவரிக்கின்றது. முல்லை நிலத்து தெய்வமாக திருமாலும், குறிஞ்சி நிலத்து தெய்வமாக முருகனும், மருதநிலத்து தெய்வமாக இந்திரனும், பாலை நிலத்து தெய்வமாக காளியும், நெய்தல் நிலத்து தெய்வமாக வருணனும் குறிப்பிடப்படுகின்றனர். இவ்வாறு நாட்டியசாஸ்திரம், வர்ணாஷ்ரம தர்மம் போன்ற குறிப்புகளும் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன.


அடுத்தப்படியாக, எட்டுத்தொகை நூல்களான ஐங்குறுனூறு, புறநானூறு, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, கலித்தொகை, நற்றினை மற்றும் பதிற்றுப்பத்து ஆகியவை அமைந்துள்ளன. பத்துப்பாட்டு எனப்படும் திருமுறுகாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், பொருணராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை அமைந்துள்ளன. ஐங்குறுநானூற்றின் முதல் பாடலை இயற்றியவர் பெருந்தேவனார். இவர் தான் வியாசர் மகாபாரதத்தை தமிழில் அருளியவர். இந்த நூல்களில் எல்லாம் இந்துதர்மத்தைப் பற்றிய ஏராளமான குறிப்புகளை நாம் காணலாம். பதினெண்மேல்கணக்கு என்று அறியப்படும் இந்த பதினெட்டு நூல்களும் மிகவும் பழைமையான நூல்கள். இவற்றில் அடங்கியிருக்கும் 2279 பாடல்களை 473 வெவ்வேறு புலவர்கள் இயற்றியுள்ளனர். மேலும், 102 பாடல்களை இயற்றியவர்கள் யாரென்று தெரியவில்லை.


அடுத்தப்படியாக, பதினெண்கீழ்கணக்கு நூல்கள் அமைந்துள்ளன. அவை: திருக்குறள், நாலடியார், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, நான்மணிக்கடிகை, களவழி நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமலை நூற்று ஐம்பது, திரிகடுகம், பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, கைநிலை ஆகிய பதினெட்டு நூல்கள். இந்த நூல்கள் நன்னெறி மற்றும் நல்வாழ்வு ஆகிய இரண்டையும் புகட்டுகின்றன. அதன்பிறகு ஐம்பெரும் காவியங்கள் தோன்றின.

பக்தி நூல்கள் - சைவம் மற்றும் வைணவம் எனும் இருபெரும் பக்தி மார்கங்களைச் சேர்ந்த நூல்களும் பக்திசுவை மணக்க தர்மத்தைப் போதிக்கின்றன. தமிழ் மண்ணில் தோன்றிய பக்திமார்கம் தான் பின்னர் பாரத தேசமெங்கும் பரவியது. பன்னிரு ஆழ்வார்களும் சைவ அடியார்களும் திவ்ய பிரபந்தம் மற்றும் திருமுறை நூல்களை அருளினர். மேலும் கம்பராமாயணமும் பெரியபுராணமும் கம்பர் மற்றும் சேக்கிழார் ஆகியவர்களால் அருளப்பட்டது. திருமுறை சைவர்கள் இடையேயும் திவிய பிரபந்தம் வைணவர்கள் இடையேயும் மிகவும் புகழ்ப்பெற்றவை.


தமிழ் நூல்களில் மிகவும் முக்கியமானவையாகவும் எங்கும் கிடைப்பதாகவும் சில நூல்கள் அமைந்துள்ளன. அவை: திருக்குறள், திருமுறை, திவிய பிரபந்தம் ஆகும். திருக்குறள் ஒரு தர்மநூல் என்பதால் ஆங்கில இந்துக்களிடமும் இது பிரபலமடைந்து வருகின்றது. தர்மத்தை இரண்டடியில் இனிமையாக விளக்கும் இயல்புடைய திருக்குறளை இந்துக்கள் அவசியமாக கடைப்பிடிக்க வேண்டும்.

இந்து தர்மத்தை அறிவோம் (இரண்டாம் தர நூல்கள்)



இந்து தர்மத்தை அறிவோம்


4.2) இந்து தர்ம நூல்கள் (ஸ்மிரிதி நூல்கள்)


ஸ்மிரிதி வகை நூல்கள் ஒரு குறிப்பிட்ட நபரால் எழுதப்பட்டவை. ஸ்மிரிதி வகை நூல்கள் இந்துதர்மத்தின் இரண்டாம் நிலை அடிப்படை நூல்கள். ஸ்மிரிதிகள் ஸ்ருதி வகை நூல்களுக்கு முரணாக இருக்க கூடாது. நான்கு வேதங்களையும் (அவற்றின் உள்ளடக்கங்களை) தவிர மற்ற இந்துதர்ம நூல்கள் யாவும் ஸ்மிரிதி வகையைச் சேர்ந்தவையே. உதாரணமாக உபவேதங்கள், வேதாங்கங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆறுதரிசனங்கள், தர்மசாஸ்திரங்கள் மற்றும் பல.


|| உபவேதங்கள் என்பவை:


உபவேதம் என்றால் செயல்முறை அறிவு எனப் பொருள்படும். உபவேதங்கள் நான்கு.
1) தனுர்வேதம் (போர் மற்றும் தற்காப்புக் கலை அறிவியல்)
2) ஆயுர்வேதம் (மருத்துவ அறிவியல்)
3) காந்தர்வ வேதம் (கலை அறிவியல்)
4) ஸ்தபத்ய வேதம் (கட்டடம் மற்றும் சிற்ப அறிவியல்)


|| வேதாங்கம் என்பவை:


வேதங்களின் அங்கம் (உறுப்பு) எனப் பொருள்படும். வேதங்களை எளிதாகக் கற்பதற்காக இவை அமைக்கப்பட்டன. வேதாங்கங்கள் ஆறு.
1) ஷிக்‌ஷா (ஒலியியல், சந்தி)
2) கல்பம் (சடங்குகள்)
3) வியாகரணம் (இலக்கணம்)
4) நிருக்தம் (சொல்லிலக்கணம்)
5) சந்தம் (சந்த அளவு)
6) ஜோதிஷம் (கால அளவு; சூரியன், சந்திரன், கிரகங்கள் நகர்வுகள்; வானவியல்)


|| இதிகாசங்கள் என்பவை:


இதிகாசம் என்றால் வரலாற்று நிகழ்வு எனப் பொருள்படும். இதிகாசங்கள் இரண்டு.
1) வால்மிகியின் இராமாயணம்
2) வியாசரின் மகாபாரதம்


|| புராணங்கள் என்பவை:


புராணம் என்றால் பண்டையது; பழையது எனப் பொருள்படும். 18 மகாபுராணங்களும் (பிரபலமானவை) 18 உபபுராணங்களும் (குறைந்த பிரபலமானவை) உள்ளன. இவற்றைத் தவிர்த்து சிவதல வரலாற்றைக் கூறும் 275 ஸ்தல புராணங்களும் உள்ளன.

மகாபுராணங்கள்
1) அக்கினி புராணம் – 15,400 சுலோகங்கள்
2) பாகவத புராணம் – 18,000 சுலோகங்கள்
3) பிரம்ம புராணம் – 10,000 சுலோகங்கள்
4) பிரம்மாண்ட புராணம் – 12,000 சுலோகங்கள்
5) பிரம்மவைவர்த்த புராணம் – 17,000 சுலோகங்கள்
6) கருட புராணம் – 19,000 சுலோகங்கள்
7) கூர்ம புராணம் – 17,000 சுலோகங்கள்
8) லிங்க புராணம் – 11,000 சுலோகங்கள்
9) மார்கண்டேய புராணம் – 9,000 சுலோகங்கள்
10) மட்ச புராணம் – 14,000 சுலோகங்கள்
11) நாரத புராணம் – 25,000 சுலோகங்கள்
12) பத்ம புராணம் – 55,000 சுலோகங்கள்
13) சிவ புராணம் – 24,000 சுலோகங்கள்
14) ஸ்கந்த புராணம் – 81,100 சுலோகங்கள்
15) வாமண புராணம் – 10,000 சுலோகங்கள்
16) வராக புராணம் - 24,000 சுலோகங்கள்
17) வாயு புராணம் – 24,000 சுலோகங்கள்
18) விஷ்ணு புராணம் - 23,000 சுலோகங்கள்


|| ஆறு தரிசனங்கள் என்பவை:


ஆறு தரிசனங்கள் என்றால் ஆறு பார்வைகள் எனப் பொருள்படும். இவை வேதகாலத்தைச் சேர்ந்த ஆறுவகை தத்துவங்கள். இவை: சாங்கியம், யோகம், மிமாம்சம், நியாயம், வைஷேஷிகம் மற்றும் வேதாந்தம் ஆகும். இவற்றுள் தற்போது நிலைத்திருப்பது வேதாந்தமும் யோகமும் தான்.

வேதத்தின் இறுதிபகுதியான ஞானகாண்டத்தை (உபநிடதங்கள்) அடிப்படையாகக் கொண்டது வேதாந்தம். முக்கிய உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகியவை வேதாந்தத்தின் அடிப்படை நூல்கள்.

யோகம் என்பது மனம், உடல், ஆன்மா ஆகிய மூன்று நிலையிலும் அமைந்திருக்கும் நுட்பமான கல்வி முறையாகும். இதன் அடிப்படை நூலாக பதஞ்சலி முனிவரின் யோகசூத்திரம் அமைந்துள்ளது.


|| தர்ம சாஸ்திரங்கள் என்பவை:


தர்ம சாஸ்திரம் என்றால் அறநெறி நூல் எனப் பொருள்படும். தர்ம சாஸ்திரங்களை இரண்டாகப் பிரிக்கலாம். அவை: தர்மசூத்திரம் மற்றும் ஸ்மிரிதி.

தர்மசூத்திரங்கள் நான்கு. அவை: அபஸ்தம்பர் சூத்திரம், கௌதமர் சூத்திரம், பௌதாயன சூத்திரம், வாசிஷ்டர் சூத்திரம்.

ஸ்மிரிதிகள் தர்மசூத்திரங்களுக்குப் பிறகு எழுதப்பட்டவை. அவை: யாக்ஞவல்கயர் ஸ்மிரிதி, நாரதர் ஸ்மிரிதி, விஷ்ணு ஸ்மிரிதி, பிரகஸ்பதி ஸ்மிரிதி, காத்யாயன ஸ்மிரிதி.

Friday, 5 February 2016

இந்து தர்மத்தில் பூஜை


|| பூஜையின் நோக்கம்





பூஜை எனப்படுவது தெய்வங்களிடம் பக்தி செலுத்த மேற்கொள்ளப்படும் ஒரு தெய்வீக சடங்காகும்.
இந்துக்கள் மட்டுமின்றி பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்களும் பூஜைகள் மேற்கொள்வர். பரம்பொருளின் சகுணபிரம்ம நிலையை உபாசிப்பவர்கள், மூர்த்திகளையும் தெய்வீகச்சின்னங்களையும் வைத்து தெய்வங்களை முறையான வழிமுறைகளைப் பின்பற்றி அழைத்து மரியாதையுடன் பக்தி செலுத்துவர்.



|| பூஜை எனும் சொல்





பூஜை எனும் சொல்
'பூசெய்' எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து தோன்றியதாக பிரபல ஆராய்ச்சியாளர் வரதராஜா வி.ராமன் அவர்கள் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். 'பூசெய்' என்றால் பூக்களால் (வழிபாடு) செய்தல் எனப் பொருள்படும். மேலும், ’பூசு’ எனும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர். பூசு என்பதற்கு அலங்கரித்தல் என்ற பொருள் உள்ளது.


|| பூஜை வகைகள்


இந்துக்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஐந்து கடமைகளில் வழிபாடு ஒன்றாகும். வழிபாட்டின் ஓர் அங்கம் தான் பூஜை ஆகும். பூஜைகள் என்பது கோவிலிலும் வீட்டிலும் மேற்கொள்ளப்படும். கோவில்களில் மேற்கொள்ளப்படும் பூஜை இறைத்தொண்டில் அனுபவம் பெற்ற மற்றும் இறைவனைப் பற்றியும் தர்மங்களைப் பற்றியும் முழுமையான ஞானமுடைய ஒருவரால் மேற்கொள்ளப்படும். இல்லங்களில் மேற்கொள்ளப்படும் பூஜை வீட்டுப் பெரியவர்களாலும் பூஜை வழிமுறைகள் தெரிந்தவர்களாலும் மேற்கொள்ளப்படும். கோவிலில் மேற்கொள்ளப்படும் பூஜையும் வீட்டில் மேற்கொள்ளப்படும் பூஜையும் சற்று வேறுபடும்.


|| பூஜை வழிமுறைகள்


பூஜைகள் பற்றியும் அதை மேற்கொள்ளும் முறையைப் பற்றியும் கிரியசூத்திரம் எனும் நூல் விளக்குகின்றது. இந்த நூல் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டதாகும். இந்த சூத்திரநூல் "
பூஜை எனப்படுவது தெய்வங்களுக்கு மரியாதை செலுத்த மேற்கொள்ளப்படும் ஒரு தெய்வீக சடங்குமுறை" என குறிக்கின்றது. பஞ்ச மகா யக்ஞங்கள் என இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து முக்கிய மரியாதைமுறைகளை இந்த நூல் விளக்குகின்றது. அவை: தெய்வங்களுக்கு செய்யவேண்டிய மரியாதை, முன்னோர்களுக்கு செய்யவேண்டிய மரியாதை, சக மனிதர்களுக்கு செய்யவேண்டிய மரியாதை, சக உயிரினங்களுக்கு செய்யவேண்டிய மரியாதை மற்றும் பரம்பொருளான பிரம்மத்திற்கு செய்யவேண்டிய மரியாதை. இவற்றுள் தெய்வங்களுக்குச் செய்யவேண்டிய மரியாதை தான் பூஜையாகும்.

”ஒரு பக்தனை தெய்வீக சக்தியில் நிலைபெற பூஜைகள் உதவுகின்றன. தெய்வங்களின் சக்தியும் ஒரு பக்தனின் மனம், புத்தி, புலன்கள், ஆன்மா ஆகியவை இணைந்து ஆன்மீக ஈடேற்றம் ஏற்படுத்தும் வழிமுறை பூஜை. பூஜை என்பது மனிதனின் உணர்ச்சிகளைத் தூய்மையாக்கும் ஒருவகை யோகமுறை எனவும் கூறப்படுகின்றது.” என மதங்கள் சார்ந்த துறையில் PhD பட்டம் பெற்ற திராஸி பின்ச்மன் (Tracy Pintchman) தெரிவித்துள்ளார்.


|| கோவில் பூஜை





கோவிலில் பூஜை மேற்கொள்பவரை பூஜாரி அல்லது பூசாரி என அழைப்பர். இல்லங்களில் மேற்கொள்ளப்படும் பூஜைகளைக் காட்டிலும் கோவில்களில் மேற்கொள்ளப்படும் பூஜைகள் மிக நுட்பமானகவும் விரிவாகவும் இருக்கும். சில கோவில்களில் பூஜையின் போது 64 வகையான உபசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை ஒரு நாளைக்கு ஆறு முறைகள் வரை மேற்கொள்ளப்படுகின்றன. கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் தெய்வங்கள் அந்த கோவில்களில் குடியிருக்கும் தெய்வீக சக்தியின் வெளிபாடாக திகழ்கின்றனர். எனவே தினமும் அதிகாலையில் மேற்கொள்ளப்படும் பூஜை தெய்வங்களை ‘எழுப்பும்
’ பூஜையாக அனுசரிக்கப்படுகின்றது. பெரும்பாலும் கோவில் பூஜைகள் ஆகமநூல்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளன. எனவே, சைவ கோவில் பூஜைகளும் வைணவ கோவில் பூஜைகளும் சில வேறுபாடுகளை உடையவை.


|| வீட்டு பூஜை



 இல்லங்களில் மேற்கொள்ளப்படும் பூஜைகள் 16 வகையான உபசாரங்களை உடையவை ஆகும். உபசாரம் என்றால் வரவேற்பு எனப் பொருள்படும். இந்த 16 உபசாரங்களில் ஐந்து உபசாரங்கள் மிக முக்கியமானவையாக உள்ளன. எனவே பெரும்பாலான இல்லங்களில் இந்த ஐந்து உபசாரங்களும் பூஜையின் போது பின்பற்றப்படுகின்றன. இல்லங்களைப் பொறுத்தவரை தெய்வ சக்திகள் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்படுகின்றன. ஐந்து முக்கிய உபசாரங்கள் பஞ்ச உபசார பூஜைகள் எனவும் குறிப்பிடப்படுகின்றன. அவை பின்வருமாறு:

  1. கந்தம் (சந்தனம்) – மணமிகும் சந்தனம் படைத்தல்
  2. புஷ்பம் (மலர்கள்) – வண்ணப் பூக்கள் படைத்தல்
  3. தூபம் (அகர்பத்தி/சாம்பிராணி) – புகையும் அகர்பத்தியும் சாம்பிராணியும் படைத்தல்
  4. தீபம் அல்லது ஆரத்தி (விளக்கு) – ஒளிவிடும் தீபங்கள் ஏற்றி ஆரத்தி படைத்தல்
  5. நைவெத்தியம் (எளிமையான உணவு) – அன்புடன் தயாரிக்கப்பட்ட உணவை படைத்தல்

பூஜை மேற்கொள்வதன் நோக்கம் மனத்தையும் சிந்தனையையும் தூய்மையாக்கி ஒருநிலைப்படுத்தி, தெய்வீகத்துடன் தொடர்பில் ஈடுபட்டு ஓர் உன்னதமான உணர்வை அடைவதற்காக தான். கண்டிப்பாக ஒவ்வொருவரும் முடிந்தவரை தினமும் காலையில் அல்லது மாலையில் பூஜை மேற்கொள்ள வேண்டும். முடியாத நிலையில் வாரத்தில் ஒருமுறை (வெள்ளிக் கிழமைகளில்) பூஜை மேற்கொள்வது சிறப்பு. ஸ்வாமினி பிரமானந்த சரஸ்வதி, நவீன வாழ்வுமுறைக்கேற்றபடி பூஜை மேற்கொள்ளும் எளிய வழிமுறையை தன்னுடைய ’பூர்ண வித்யா’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


  1. ஸ்நானம் – குளித்தல், உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்தல். பூஜை மேற்கொள்வதற்கு முன் மனதையும் சிந்தனையும் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். உடலில் குறிப்பிட்ட இடங்களில் (குறிப்பாக நெற்றியில்) திருநீறு பூசிக் கொள்ளவேண்டும். இது ஒருவன் தன் மனதின் அகங்காரங்களை நீக்கி தன்னை தூய நிலைப்படுத்துவதை உணர்த்துகின்றது.

  2. ஷாந்தம் - வீட்டில் ஓர் அமைதியான சூழலை ஏற்படுத்துதல். மனம் மற்றும் சிந்தனை ஆகிய இரண்டையும் அமைதிப்படுத்த வேண்டும். இதற்காக பூஜைக்கு முன்னர் வீட்டில் மங்கல இசைகளும் பாடல்களும் ஒலிபரப்பலாம்.

  3. விக்னேஷ்வர தியானம் – பூஜை எந்தவித தடைகளுமின்றி நிறைவேற விக்னேஷ்வர மந்திரம் உச்சாடனம் செய்து விநாயக பெருமானை தியானித்தல்.

  4. தீபம் - விளக்கை ஏற்றி வைத்தல். பூஜை அறையில் இருக்கும் விளக்கை முன்னதாகவே தூய்மைப்படுத்தி எண்ணெய் ஊற்றி திரி வைக்க வேண்டும். மந்திரம் சொல்லிக்கொண்டு இறைவனை மனதில் நினைத்துக்கொண்டு விளக்கை ஏற்றவேண்டும்.

  5. புஷ்பம் – மந்திரங்களும் துதிப்பாடல்களும் (தேவாரம்/பிரபந்தம்) உச்சரித்துக் கொண்டு மலர்கள் தூவி வழிபட வேண்டும். இதர மந்திரங்கள் தெரியாத பட்சத்தில் ஓம் என்ற பிரணவ மந்திரம், நமசிவாய எனும் பஞ்சாட்சார மந்திரம் ஆகியவற்றை உச்சரிக்கலாம்.

  6. தூபம் – ஐந்து அகர்பத்திகள் கொளுத்தி வைத்தல். ஐந்து அகர்பத்திகளும் பிராணன், அபனன், சமனன், வியானன், உதனன் ஆகிய ஐந்து முக்கிய பிராணங்களைக் குறிப்பன.

  7. பழம் – பழங்கள் அல்லது துளசி/வில்வம் போன்ற இலைகளைத் தெய்வங்களுக்குப் படைக்கலாம். பழங்களோ இலைகளோ கிடைக்காவிட்டால் பரவாயில்லை. பூஜை முடிந்த பின்னர் பழங்களை மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணவேண்டும். (தூக்கி வீசக்கூடாது)

  8. தியானம் – சில நேரங்களுக்கு அர்த பத்மாசன நிலையில் அமர்ந்து துதி பாடல்களைப் பாடலாம். சாந்தி மந்திரங்கள் உச்சாடனம் செய்யலாம். நாமஜெபம் செய்யலாம். பிரணவ மந்திரம் உச்சரித்து பிரம்மத்தை மனதில் நிலைநிறுத்தி தியானிக்கலாம்.

  9. திலகம் (குங்குமம்) – பூஜையின் நிறைவாக நெற்றியில் திலகமிட்டுக் கொள்ளவேண்டும். தான் மேற்கொண்ட பூஜையின் நோக்கமும் அதனால் தான் அடைந்த உன்னத நிலையும் எப்போதும் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காக திலகமிடப்படுகின்றது.

  10. நிறைவு – இறுதியாக உடல் பூமியில் (தரையில்) படும்படி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டு விடைபெற வேண்டும். பூஜையில் படைக்கப்பட்ட உணவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணவேண்டும்.

  • மணி அடித்தல் – சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்த மணி அடிக்கப்படுகின்றது. மணி ஓசையிலிருந்து எழும் அதிர்வலைகள் வீட்டில் நிறைந்திருக்கும் எதிர்மறையான எண்ணங்களின் அதிர்வலைகளை நகர்த்தி வீட்டின் சூழ்நிலையை தூய்மைப்படுத்துகின்றன. எனவே பூஜை மேற்கொள்ளும் போது குறிப்பாக தீபமும் தூபமும் காட்டும்போது மணி ஓசை எழுப்பப்படுகின்றது.





  • கற்பூரம் – தெய்வங்களுக்கு கற்பூர ஆராதனை காட்டப்படுகின்றது. கற்பூரம் எரிந்து (சாம்பல்) இல்லாமல் போய்விடுவதைப் போல் ஒருவனின் கர்ம வினைகளும் அழிந்து இல்லாமல் போய்விட இறைவனின் கருணை ஒன்று மட்டுமே கைக்கொடுக்கும் என்பதை உணர்த்துகின்றது. மேலும், கற்பூரம் தன்னைத் தானே தியாகம் செய்து மற்றவர்களுக்கு வெளிச்சத்தை தருகின்றது. ஒரு மனிதன் தன்னுடைய சுயநலங்களை விட்டொழித்து விட்டு மற்றவர்களின் நலனுக்காக செயலாற்ற வேண்டும்.


 || இந்தோனேசிய இந்துக்களின் பூஜை முறை



இந்தோனேசியாவின் பாலித்தீவில் இந்துக்கள் வாழ்கின்றனர். இங்கு அவர்கள் மேற்கொள்ளும் பூஜை ‘செம்பாஹ்யாங்’ என்றழைக்கப்படுகின்றது. ஜாவா மொழியில் ’செம்பா’ என்றால் மரியாதை செலுத்துதல் அல்லது வழிபடுதல் எனப் பொருள்படும். ஹ்யாங் என்றால் தெய்வம் அல்லது தெய்வீக சக்தி எனப் பொருள்படும். இந்தோனேசிய இந்துக்களைப் பொறுத்தவரை செம்பாஹ்யாங் எனப்படும் பூஜைமுறை மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவர்கள் பூஜை மேற்கொள்ளும் போது வேத மந்திரங்கள் உச்சாடனம் செய்வர். தினந்தோறும் தீபம், தூபம், மலர், மணம், மந்திரம் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் பூஜை மேற்கொள்வர்.

|| முடிவுரை

இந்துதர்மத்தின் பக்தி மார்கத்தின் வழிபாட்டு முறைகளில் ஓர் அங்கம் தான் பூஜை. சிலர் அது செய்யாதே இது செய்யாதே எனவும் இதுதான் சரி அதுதான் சரி எனவும் பேசித் திரிவார்கள். அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். உண்மையான பக்தியும் தூய்மையான எண்ணமும் தான் பூஜைக்குரிய முக்கிய ஆச்சாரங்கள். மற்றபடி ஆச்சாரம் என்று பூச்சாண்டி காட்டி, சக மனிதர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் நரர்களின் வேட்கைக்கு பலியாகிவிட வேண்டாம். ”தூய பக்தியே எனக்கு பக்தர்கள் அளிக்கும் மிக உயர்ந்த படையல். மற்றபடி அன்போடு எனக்கு பூ, பழம், இலை, நீர் ஆகியவற்றை படைக்க விரும்பினால் தாராளமாக படைக்கலாம். அதை நான் அன்போடு ஏற்றுக் கொள்கிறேன்” என பகவான் பகவத் கீதையில் கூறியுள்ளதை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

Thursday, 4 February 2016

வெங்கடரமணா ஆலயம், தமிழ்நாடு






தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் வெங்கடரமணா ஆலயம். இந்த ஆலயம்
1540-ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது.





தற்போது இந்த ஆலயம் பராமரிப்பின்றி சிதைந்த நிலையில் உள்ளது. இந்த ஆலயத்தின் அழகிய கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை முறையான பாதுகாப்பின்றி அழிந்து வருகின்றது.





இந்த ஆலய மண்டபத்தில் நிறைய தமிழ் எழுத்துப் படிவங்களும் காணப்படுகின்றன. 1761-ஆம் ஆண்டு பிரெஞ்சு படையெடுப்பில் இந்த கோவில் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டது. பல மதிப்புள்ள கோவில் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டன. பல அரிய அற்புத சிற்பங்கள் கொள்ளையடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. கோவிலின் அரிய பல பொருட்களும் நாசமாக்கப்பட்டு கோவிலும் மெல்ல மெல்ல சிதைக்கப்பட்டது.




















Wednesday, 3 February 2016

இந்து தர்மம் - நம்பிக்கை



நமது நம்பிக்கை தான் நம் வாழ்க்கையில் நமது எண்ணங்களையும் நடவடிக்கைகளையும் நிர்ணயிக்கின்றது. அதுவே நமது கர்மங்களையும் (செயல்களையும்) நிர்ணயிக்கின்றது. கர்மங்கள் (செயல்கள்) தான் நமது இலக்கை நிர்ணயிக்கின்றன. நம்பிக்கை தூய்மையானதாக இருந்தால், நம் எண்ணங்களும் தூய்மையாக இருக்கும். எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் நம் செயல்களும் தூய்மையாக இருக்கும். செயல்கள் தூய்மையாக இருந்தால், நாம் அடையபோகும் பாதையும் பிரகாசமாக அமையும்.

இவ்வுலகில் எல்லா மாந்தர்களுக்கு நம்பிக்கை உண்டு. நாத்தீகர்களுக்கும் நம்பிக்கைகள் உள்ளன. பொதுவாக அவர்களின் நம்பிக்கை இறைவன் இல்லை என்பதே ஆகும். அந்த நம்பிக்கை அவர்களின் எண்ணங்களையும் நடவடிக்கைகளையும் நிர்ணயிக்கின்றது. சிலர் அந்த நம்பிக்கையின் அடிப்படையில், இறைவன் தான் இல்லையே, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கின்றனர். அவர்களின் அத்தகைய நம்பிக்கை, அவர்களின் கர்மங்களை நிர்ணயிக்கின்றது. பிறரை தூற்றிப் பேசியும், இழிவாகப் பேசியும் காலத்தைக் கடக்கின்றனர்.

அவர்களின் இறைவன் இல்லை என்ற நம்பிக்கையை நாம் கேள்வி கேட்க இயலாது. அது அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை. மற்றவர்களின் நம்பிக்கையையும் மதிக்கவேண்டும் என்பது இந்துக்களின் தர்மம். ஆனாலும், அந்த நம்பிக்கையால் அவர்கள் தவறான அதர்மபாதைகளில் செல்வார்கள் என்றால் அவர்களுக்கு நல்ல தத்துவங்களை எடுத்து உணர்த்தி நல்வழிக்குக் கொண்டு வருவது இந்துக்களின் தர்மம் ஆகும். இன்றைய உலகில், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளிலும் நாத்தீகர்கள் வாழ்கின்றனர். அவர்களுள் சிலர் இறைவன் மீது நம்பிக்கை இல்லாவிடினும், நல்ல ஞானமும் கல்வியறிவும் கொண்டவர்களாக இருப்பதால் அவர்கள் மனித தர்மங்களையே பின்பற்றி வாழ்கின்றனர். ஆனால், இந்திய தேசத்தில் போதுமான ஞானமில்லாதவர்கள் இறைவன் இல்லை என்று நம்புவது மட்டுமல்லாது மற்றவர்களின் (குறிப்பாக இந்துக்களின்) நம்பிக்கைகளையே குறி வைத்து தாக்குகின்றனர்.

இதற்கு காரணம் மற்ற மதத்தவர்கள் போல் இந்துக்கள் நாத்தீகர்களை ஒழிக்கவேண்டும் என்று எண்ணுவதில்லை. தூற்றப்பட்டாலும் பொறுமையாக அதை ஆராய்ந்து குறை தங்களிடம் இருந்தால் அதை திருத்திக் கொள்ளவும் அல்லது தூற்றுவோருக்கு உண்மையை விவரித்து அவரை தெளிவுபடுத்தவும் இந்துக்கள் எண்ணுகின்றனர். அறிவியலும் சரி, இந்து தர்மமும் சரி ஒன்றே ஒன்றை தான் எப்போதும் சொல்கின்றது... “எப்போது மனிதன் தனது தோல்விக்குக் காரணமான தன் குறைகளை உணர்ந்து, அதை இனி செய்யாது இருந்து வெற்றிப் பெறுகின்றானோ.. அப்போது அவன் பரிணாம வளர்ச்சியில் ஒரு படிநிலை மேலே செல்கின்றான்.” மேலும், நாத்தீகமும் ஒரு நம்பிக்கை தான் என்று இந்துக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். மற்ற மதத்தவர்கள் நாத்தீகர்கள் கொல்லப்படவேண்டும் என்று நம்புகின்றனர். குறிப்பாக, இஸ்லாமிய நாடுகளில் நாத்தீகர்கள் சட்டப்படி கொல்லப்படுவர். ஆரம்பக் காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் ’அறிவியல்’ கூட நாத்தீகம் என்று அறியப்பட்டது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மதநூல்களுக்குப் புறம்பாக உள்ளதால் நிறைய அறிவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்து தர்மத்தில் பேச்சு சுதந்திரம் முதன்மையாகப் போற்றப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவரின் கருத்துகளை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளும் உரிமைகள் உண்டு. இந்த காரணங்களால் தான் இந்திய நாத்தீகர்கள் எப்போதும் இந்துக்களையே குறி வைத்து குறை கூறுகின்றனர். மாறாக மற்ற மதங்களின் குறைகளை பற்றி அவர்கள் வாய் திறப்பதில்லை.

இதையே வசமாகப் பயன்படுத்தி நாத்தீகர்கள் இந்துக்களை மட்டுமே தாக்குவது முறையல்ல. இது அநாகரீகமான செயலாகும். மற்ற மதங்களின் நம்பிக்கையையும் அவர்கள் கேள்வி எழுப்பவேண்டும். ஒருவேளை அது மாந்தர்கள் தங்களின் குறைகளை திருத்தி கொள்ள உதவும் என்றால், அப்படி அவர்கள் செய்வது குற்றமில்லை.

எப்படி நாத்தீகர்கள் இறைவன் இல்லவே இல்லை என்று நம்புகின்றார்களோ, அதைவிட பலமடங்கு அளவுக்கு இந்துக்கள் இறைவன் எங்கும் இருக்கிறார் என்று நம்புகின்றார்கள். இருள் இருக்கும் இதே உலகில் தான் ஒளியும் இருக்கின்றது. இறைவன் இல்லை என்ற நம்பிக்கையில் தவறுகள் செய்பவர்களும் உண்டு: அதேபோல் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தவறுகள் செய்பவர்களும் உண்டு.

இந்து தர்மம் என்ன சொல்கிறது என்றால், நீ செய்யும் கர்மங்கள் தான் நாளை உனக்கு திரும்புகின்றன. இறைவனை நம்பாதவனாக இருந்தாலும் நன்மைகள் செய்வாய் என்றால் உனக்கு நன்மைகள் தான் பின்னாளில் வந்து சேரும். நீ என்னை நம்பவில்லை எனவே உன்னை நரகத்தில் தள்ளிவிடுவேன் என்பதெல்லாம் மாந்தர்கள் தங்கள் மனத்தில் இருக்கும் பயத்தின் உருவமாய் உருவாக்கிய கதைகளே தவிர இறைவன் அத்தகைய கொடூரமான குணம் படைத்தவர் அல்ல. இந்துதர்மம் இத்தகைய கீழ்மையான போதனைகளை ஒருபோதும் ஏற்றதில்லை.

இறைவனை நம்புவதும், நம்பாததும் உங்களின் தனிப்பட்ட விருப்பம். இறைவனை நம்பினால், அவர் எப்படி இருப்பார், எப்பெயரில் அழைக்கப்படுவார் என்பதும் உங்களின் தனிப்பட்ட விருப்பம். அதை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இல்லை. ஆனால், உங்களின் செயல்கள் இவ்வுலகின் நியதிக்கு எதிராக அமையும் என்றால், அதைக் கேள்வி கேட்கும் உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு. ஏனென்றால், உங்களைப் போல் நாங்களும் இந்த பிரபஞ்சத்தின் ஓர் உறுப்பினரே. ஆகவே, உங்களை அத்தகைய செயல்களை செய்யாமல் தடுக்கும் உரிமை மற்ற மனிதர்களுக்கு உண்டு. மீறியும் நீங்கள் இயற்கைக்கு புறம்பான அதர்மங்களை வெளியுலகம் அறியாது செய்தால், இயற்கையின் நியதியான கர்மாவே உங்களை தண்டித்து, உங்கள் தவற்றை உணரச் செய்யும். தவற்றை உணர்ந்து இனி அதை செய்யாதிருத்தலே உங்களை ஒரு நல்ல மனிதராக உருவாக்கும். ஒரு சிறு உதாரணம்:

நீங்கள் மலை மீது ஏற மெல்லிய உறுதியற்ற ஒரு கயிற்றைப் பயன்படுத்துகிறீர்கள். அப்போது கயிறு அறுந்து கீழே விழுந்து அடிபடுகின்றது. இப்போது நீங்கள் என்ன செய்யவேண்டும்? உறுதியான கயிற்றை உபயோகித்து மேலே நோக்கி செல்லவேண்டும். தடங்கல்கள் நிறைய வந்தாலும், அந்த தோல்விகளுக்கு நீங்களே காரணம் என்று அறிந்து, அதை திருத்தி இனி அதைச் செய்யாது இருத்தல் வேண்டும். அதை தான் ‘கர்மாவின் நியதி’ உங்களுக்குக் கற்று தருகின்றது.

இந்த கதையில் உறுதியற்ற கயிறு, இறைவனை உணராத மனிதனின் மனது.